விடை தேடும் வினாக்கள் - ஏன் என்னை அடிக்கிறீர்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
'நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?', என இயேசு கேட்ட கேள்வி குறித்து இன்றைய நம் நிகழ்ச்சியில் நோக்குவோம்.
தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே” என்றார். அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், “தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?” என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம், “நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?” என்று கேட்டார் (யோவா 18:19-23).
தன் கன்னத்தில் அறைந்தவரைப் பார்த்து இயேசு இதைக் கேட்கின்றார். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்னவர், இங்கே, கன்னத்தைக் காட்டுவதற்குப் பதிலாக, 'ஏன்?' என்று கேட்பதைப் பார்க்கின்றோம். ஏன் இந்த முரண்பாடு? இது மட்டுமல்ல, இயேசுவின் வாழ்வில் எண்ணற்ற முரண்பாடுகளைக் காணலாம். புரிந்து கொள்ள முடியாதவர்கள், புரிந்துகொள்ள விரும்பாதவர்கள், இவைகளை குறைகூறும் வாய்ப்புகளாகப் பார்ப்பர். உண்மையென்னவெனில்,, இங்கு முரண்பாடு என்பதே இல்லை. வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு ஆட்களுக்கு சொல்லப்பட்டவை இவை. சில எடுத்துக்காட்டுகளை இங்கு அலசி ஆராய்வோம்.
இயேசு மனிதனாக உருவெடுத்ததன் நோக்கத்தைப் பொறுத்தவரை, ஓரிடத்தில் இயேசு உலகத்தைத் தீர்ப்பிட அல்ல, மீட்கவே வந்தேன் என்கிறார் (யோவான் 3:17). மற்றோர் இடத்திலோ, "தீரப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்" என்கிறார் (யோவான் 9:39). இது சற்று முரண்பாடாகத் தோன்றினாலும், இறைவன் தீர்ப்பிடுதலுக்கும் மீட்பளிப்பதற்கும் இடையேயான தொடர்பும் மெல்ல மெல்ல விளங்குகிறது.
ஓரிடத்தில் "நான் உலகிற்கு அமைதியைக் கொணர வந்தேன் என எண்ணவேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்" என்கிறார் இயேசு (மத் 10:34). மற்றோர் இடத்திலோ, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" (யோவான் 14:27) என்கிறார். சீடர்களையும் அமைதியின் தூதுவர்களாகவே அனுப்புகிறார்: "நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், " இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!" என முதலில் கூறுங்கள்" (லூக்கா 10:5) என்பவைகளைப் பார்க்கும்போது, இயேசு அமைதியையேக் கொணர்ந்தார் எனினும், அந்த அமைதிச் செய்தியே, அதனை ஏற்பவர்களுக்கும் ஏற்காதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தக் காரணமாகிறது என்பதையும் உணர்கிறோம். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர், என்ற வார்த்தைகளை உதிர்த்தவரும் இயேசுதானே.
முதலில், "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்லவேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழையவேண்டாம். மாறாக, வழி தவறிப்போன இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்" (மத் 10:5-6) என்று கட்டளையிட்டவர், இறுதியில் "நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்" (மத் 28:19) என்று அறிவுறுத்துகிறார். ஆம். மாற்றங்கள் முதலில் வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அதுவே விரிவடைந்து உலகம் முழுவதும் பரவ வேண்டும். இதனால்தான், முதலில் தான் வாழும் சமூகத்திலிருந்து துவக்குகிறார் இயேசு.
இயேசுவின் போதனைக்கும் செயலுக்கும்கூடச் சில வேறுபாடுகள் இருப்பதை நற்செய்தியில் நாம் காணக்கூடும். உதாரணமாக, தனக்கு கோபம் வந்தபொழுது, சாட்டை பின்னி வியாபாரிகளை அடித்து விரட்டிய இயேசு (யோவான் 2:13-21), சீடருள் ஒருவர் வாளை எடுத்து, தலைமைக் குருவின் பணியாளரின் காதைத் துண்டித்தபோது, "உனது வாளை அதன் உறையினுள் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்" (மத் 26:51-52) என்று கண்டிக்கிறார். எந்த இடத்தில் கோபப்பட வேண்டும், எந்த இடத்தில் அறிவுகொண்டு அணுகவேண்டும் எனச் சொல்கிறாரா? என்பது சிந்தனைக்குரியது. ஏழைகள் ஏமாற்றப்பட்ட போதும், போலித்தனம் தலைதூக்கியபோதும், இறைவனின் தூய்மை கேள்விக்குள்ளான போதும் அவர் கோபமடைந்தார்.
ஓரிடத்தில், "நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்" (மத் 6:8) என்கிறார் இயேசு. மற்றோர் இடத்திலோ, "கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள் தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்" (மத் 7:7) என்கிறார். ஏற்கனவே நமது தேவைகள் கடவுளுக்குத் தெரியும் என்றால், பின்னர் தேவையில்லாமல் ஏன் செபிக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பு. தன் குழந்தைக்கு பசிக்கின்ற நேரம் தாய்க்குத் தெரியாதா என்ன? இருப்பினும், அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்ற சொல் வழக்கு ஏன் என்பது புரியவில்லையா?
ஓரிடத்தில் மறைவாகவும், தனியாகவும், இரகசியமாகவும் செபிக்கச் சொல்கிறார் (மத்:6:6). மற்றோர் இடத்திலோ, கூடிச் செபிப்பதின் தேவையையும் அதன் ஆற்றலையும் பற்றிக் குறிப்பிடுகிறார்: "உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால், விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார். ஏனெனில், இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாகச் சொல்கிறேன்" (மத் 18:19-20). தனியாகவும் செபிக்க வேண்டும், அதேவேளை கூட்டாகவும் செபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறாரா?
இப்போது நாம் இன்றைய விவாதத்திற்குள் புகுவோம். "வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் காட்டுங்கள்" (மத் 5:39) என அறிவுரை வழங்கியவர், காவலர் ஒருவர் தன் கன்னத்தில் அறைந்தபோது, "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்" (யோவான் 18:22-23) என்று எதிர்த்துக் கேட்கிறார்.
மறு கன்னத்தையும் காட்டுங்கள் என்பது மலைப்பொழிவின்போது, அதாவது, தன் போதனைகளைக் கேடக ஆர்வமாக இருந்த மக்களை நோக்கி. ஏன் என்னை அடித்தாய் என கேள்வி கேட்பதோ, தலைமைக் குருவின் இல்லத்தில் நடந்த விசாரணையின்போது. ஒன்று தன்னை ஏற்றுக்கொண்டு தனக்கு செவிமடுத்துக் கொண்டிருந்த மக்களை நோக்கி. மற்றதோ, தன்னைத் தவறாக துன்புறுத்திய காவலரை நோக்கி. அதாவது, இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லவேண்டுமானால், முதல் வார்த்தை, அதாவது கன்னத்தைக் காட்டச் சொன்னது கிறிஸ்தவர்களை நோக்கி, இரண்டாவதோ, கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் மக்களை நோக்கி. ஒன்று மன்னிப்போடும் பொறுமையோடும் தொடர்புடையது, மற்றதோ நீதி நியாயத்தோடு தொடர்புடையது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டும் கிறிஸ்தவர்கள், அநியாயத்திற்கும் அநீதிக்கும் எதிராக ஒரு நாளும் குரலெழுப்பாமல் இருக்க மாட்டார்கள் என்பது இங்கு தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. மன்னிக்கத் தெரிந்த கிறிஸ்தவர்கள், அநியாயச் செயல்களையும் மன்னித்து அவைகள் வளம்பெற அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.
மறு கன்னத்தையும் காட்ட வேண்டிய போதனையை கிறிஸ்தவர்களுக்கு வழங்கும் இயேசு, கேள்வியை கிறிஸ்தவர்களை துன்புறுத்திக் கொண்டிருப்போரை நோக்கிக் கேட்கிறார். இரு வேறு நபர்களிடம் கேட்கப்படும் இந்த போதனையும் கேள்வியும் நிச்சயம் ஒன்றுக்கொன்று முரண்பாடில்லை. கல்விச் சேவை, மருத்துவச் சேவை, நிவாரணப்பணிகள் என பம்பரமாய் சுழன்று, எவ்வித பிரதிபலனும் நோக்காமல் பணியாற்றும் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இன்று துன்புறுத்தப்படுவது ஏன் என்ற கேள்வியை கேட்பது தவறா? அல்லது இன்னும் துன்புறுத்துங்கள் என மறு கன்னத்தையும் காட்டி நிற்பதுதான் முறையா?
இயேசுவின் கேள்வியை உற்று நோக்கினோமென்றால், இங்கே இயேசு தன்னுடைய தன்மதிப்பைக் காத்துக்கொள்வதை பார்க்கிறோம். நான் வலுவற்றவன் என்பதற்காக என்னை அடிக்காதே என்றும், நான் பேசுகிறேன் என்றால் நீயும் பேசு, அதைவிட்டு, உனக்கு அடிக்கும் அதிகாரம் இருக்கிறது என்பதற்காகவோ, அல்லது நான் வலுவற்று இருக்கிறேன் என்பதற்காகவோ என்னை அடிக்காதே என்பதாக இருக்கிறது இயேசுவின் கேள்வி.
யூதர்கள், உரோமையரின் கூட்டுச் சதியே இயேசுவின் கைது. ஒரு யூதர் கைது செய்யப்பட்டால் அவரை முதலில் தலைமைக்குருவே விசாரிப்பார். அவர் சாதாரண தவறுகள் இழைத்திருந்தால் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவார். பெரும் தவறுகள் புரிந்தவராயின் உரோமை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். இரவில் கைது செய்யப்பட்ட இயேசு தலைமைக்குரு கயபாவிடம் கொணரப்பட்டாலும் அவரைவிட அவரது மாமனார் அன்னா செல்வாக்கு பெற்று விளங்கியதால் அன்னாவிடம் இழுத்துச் செல்லப்பட்டார். யூதர் மன்ற விசாரணைக்கென விதிமுறைகள் பல உள்ளன. ஆனால் இயேசுவின் மீதான விசாரணையில் எல்லாமே மீறப்பட்டன. விசாரணையின் போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் மொழிந்த இயேசுவைக் காவலர் அடித்தது வழக்கத்திற்கு மாறானது. சட்டங்களை நுணுக்கமாகக் கடைபிடிக்கும் மனநிலை கொண்ட அக்கும்பல் அந்நேரத்தில் எந்த வழிமுறைகளையும் பின்பற்றவில்லை. எனவேதான் இயேசு ~ஏன் என்னை அடிக்கிறீர்? என எதிர்க் கேள்வி எழுப்பினார். ஏழையர், ஆதரவற்றோர், செல்வாக்கற்றோர், மற்றும் பின்புலமற்றோர் இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்றனர். உலகில் உண்மையே அடிக்கடி தண்டிக்கப்படுகிறது என்பதையும் தெரிந்துகொள்வது சிறப்பு.
பணிந்துபோக வேண்டிய நேரத்தில் பணிவதும், மன்னிக்க வேண்டிய நேரத்தில் மன்னிப்பதும், கேள்வி கேட்கப்பட வேண்டிய நேரத்தில் அச்சமின்றி குரலை எழுப்புவதும் கிறிஸ்தவனின் தனித்துவமான பண்பாக இருக்கட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்