தேடுதல்

கிறிஸ்தவர்கள் தாக்கப்படாமல் இருக்க இறைவேண்டல் கிறிஸ்தவர்கள் தாக்கப்படாமல் இருக்க இறைவேண்டல்  (AFP or licensors)

ஒடிசாவில் இரண்டு கத்தோலிக்க அருட்பணியாளர்கள் தாக்கப்பட்டனர்

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க காவல்துறையை வலியுறுத்தும் ராவுர்கேலா மறைமாவட்ட நிர்வாகம்.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

ஒடிசா மாநிலம், ராவுர்கேலா நகரில் உள்ள ஜோராபஹால் பங்கில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், அங்குப் பணியாற்றும் அருள்பணி Alois Xalxo,(72) மற்றும் அருள்பணி Nirial Bilung (52) ஆகிய இருவரும் நள்ளிரவில் தாக்கப்பட்டு, ஏறக்குறைய 10 இலட்சம் ரூபாய் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முகமூடி அணிந்த ஏறக்குறைய 12 பேர் அடங்கிய கும்பல் ஒன்று நள்ளிரவில் அருள்பணியாளர்கள்  தங்கியிருந்த இல்லத்திற்குள் புகுந்து அவர்களின் கை  மற்றும் கால்களைக் கட்டி, ஹாக்கி மட்டை மற்றும் இரும்புக் கம்பிகளால் பலமாகத் தாக்கியதாகவும், ஆலயத்தில் இருந்த  பணத்தையும், பள்ளி மற்றும் விடுதிக்காக சேகரிக்கப்பட்ட பணம் அனைத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரண்டு அருள்பணியாளர்களுக்கு  ஆதரவளித்த ஜோராபஹால் மக்கள்  மற்றும் உள்ளூர் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த ராவுர்கேலா மறைமாவட்ட நிர்வாகம், அருள்பணியாளர்கள் விரைவில் குணமடையவும், இந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் விரைவில் மீளவும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க காவல்துறையை வலியுறுத்தியுள்ளது ராவுர்கேலா மறைமாவட்ட நிர்வாகம்.

ஒடிசா மாநிலம், கிறித்தவ சிறுபான்மையினருக்கு எதிராக 2008ஆம் ஆண்டு மிக மோசமான வன்முறைச் சம்பவம் நடைபெற்ற மாநிலம் என்ற வரலாற்றைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2024, 14:49