தேடுதல்

சீபியர்களுடன் உரையாடும் மன்னர் சவுல் சீபியர்களுடன் உரையாடும் மன்னர் சவுல்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 54-1, தீமையை நன்மையால் வெல்வோம்!

நாமும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழும்போது ஒருபோதும் அவமானமும், வெட்கமும், மானக்கேடும் அடைய மாட்டோம்.
விவிலியத் தேடல்: திருப்பாடல் 54-1, தீமையை நன்மையால் வெல்வோம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீங்கிழைப்போர் மதியற்றவர்'  என்ற தலைப்பில் 53-வது திருப்பாடலில் 4 முதல் 6 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து அத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்ந்தோம். இந்நாளில் 54-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். 'எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்' என்று தலைப்பிடப்பட்டுள்ள இத்திருப்பாடல் மொத்தம் 7 இறைவசனங்களைக் கொண்டுள்ளது. கடந்த திருப்பாடலைப் போலவே இதுவும் சிறியதொரு திருப்பாடல்தான். இத்திருப்பாடலை வாசிக்கும்போதே இளைஞனான தாவீது ஏதோவொரு பெரும்பிரச்சனையில் சிக்கித்தவிப்பதாகவும், அதிலிருந்து தன்னை விடுவித்துக்க காக்குமாறும் இறைவேண்டல் செய்வதாகவும் அமைந்துள்ளது. அதாவது, மன்னர் சவுலிடிமிருந்து தப்பி ஓடும் தாவீது இரண்டுமுறை அவரது எதிரிகளால் காட்டிக்கொடுக்கப்படுகிறார். இத்தகையதொரு நெருக்கடியான வேளையில்தான் கடவுளின் பெருந்துணையை வேண்டி இத்திருப்பாடலை பாடுகிறார் தாவீது என்பதை நாம் அறிய வருகிறோம். அதனால்தான், 'பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது, தாவீது பாடிய அறப்பாடல்' என்று துணைத் தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரண்டு சூழலிலும் தாவீது கடவுளின் பேரருளால் எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்கிறார்.

ஏன் மன்னர் சவுல் இளைஞன் தாவீதுமீது காழ்ப்புணர்வு கொண்டு அவரைக் கொல்லத் தேடினார் என்ற கதை ஏற்கனவே நமக்குத் தெரியும். ஆனாலும் இந்தத் திருப்பாடலைப் பொறுத்தமட்டில் மீண்டும் ஒருமுறை அதனை நாம்  நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது. யாருமே கொல்லத் துணியாத பெலிஸ்திய வீரனான கோலியாத்தை, கடவுளின் பெருந்துணையோடு வெற்றிகொண்டு அவனைக் கொன்றொழித்தார் தாவீது. அதன்பிறகு அவர் மன்னர் சவுலைக் காண வந்தபோதுதான் பிரச்னை தொடங்குகிறது. அங்கே என்ன நிகழ்ந்தது என்பதை இப்போது வாசிப்போம். "தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தனர். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடனும் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர். அப்பெண்கள் அப்படி ஆடிப்பாடுகையில் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என்று பாடினார். இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை; அவர் மிகவும் சினமுற்று, “அவர்கள் ‘தாவீதுக்குப் பதினாயிரம் பேர்’ என்றனர். எனக்கோ ‘ஆயிரம் பேர் மட்டுமே’ என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்!” என்று கூறினார். அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார் (காண்க. 1 சாமு 18:6-9). இந்த நிகழ்விற்குப் பிறகு தாவீது, மன்னர் சவுலின் கொலைவெறிப் பார்வையிலிருந்து தப்பி ஓடுகிறார்.

ஆனால் மன்னர் சவுலும் அவரை விட்டபாடில்லை. எப்படியாவது தாவீதைக் கண்டுபிடித்து பழிதீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றார். இவரின் சூழ்ச்சிகளையெல்லாம் தாவீதும் தனது நண்பர்கள் வழியாக அறிந்துகொள்கின்றார். எனவே, மன்னர் சவுலிடமிருந்து தப்பிச் செல்லும் தாவீது பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்பதை அறிந்து கடவுளின் துணையுடன் அந்நகரைக் காப்பாற்றுகிறார். இதனை அறிந்த மன்னர் சவுல், கெயிலாமீது படையெடுத்துத் தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு தம் வீரர்கள் எல்லாரையும் போருக்கு அழைக்கிறார். ஆகவே, சவுல் தமக்குத் தீங்கு செய்யத் திட்டமிடுகிறார் என்பதை அறிந்த தாவீது, தன்னுடன் இருந்த முன்னூறு பேருடன் மலை நாடான ஓர்சாவில் உள்ள சீபு பாலை நிலப் பகுதிக்குச் சென்று அங்குப் பாதுகாப்பாகத்  தங்குகிறார். அந்நேரத்தில் சவுலின் மகன் யோனத்தான் வந்து அவரைத் தேற்றுகிறார். மேலும் "நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்; அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்; என் தந்தை சவுல் கூட இதை அறிவார்” என்று கூறுகின்றார் அதன்பின்னர் ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொள்கின்றனர்.

இதன் பின்னர் நடக்கும் நிகழ்வுதான், தாவீது ஏன் இந்தத் திருப்பாடலை எழுதினார் என்பதற்கான செய்தியை நமக்குச் சொல்கின்றது. அதாவது தாவீதை மன்னர் சவுலுக்கு சீபியர் காட்டிக்கொடுக்க முன்வருகின்றனர். அப்பகுதியை இப்போது வாசிப்போம். பின்பு, சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, “தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா? அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்; அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம்” என்று கூறினர். சவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக! நீங்கள் போய் அவன் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்னும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்; ஏனெனில், அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது. ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, உறுதியான தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன்” என்றார் (காண்க. 1 சாமு 23:19-23). இந்நேரத்தில்தான் தாவீது தனது பாதுகாப்பும் அடைக்கலப் பாறையுமான ஆண்டவரிடம் குரலெழுப்பி இறைவேண்டல் செய்கின்றார். அதன்பிறகு இங்கிருந்தும் தப்பிச் செல்கின்றார் தாவீது. மீண்டும் தாவீதைத் தேடிவரும் மன்னர் சவுல் அவரிடம் வசமாகக் சிக்கிக்கொண்டாலும் தாவீதின் பெருந்தன்மையால் உயிர்பிழைக்கிறார். தன் உயிரைக் காப்பாற்றியதற்காகத் தாவீதை வாயார புகழ்ந்து பாடுகின்றார் சவுல். ஆனாலும் அவர் உள்ளத்திற்குள் கனன்றுகொண்டிருந்த அந்தப் பழிவாங்கும் உணர்வு மட்டும் அழியாத அளவிற்குத் தீய ஆவியால் அவர் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நேரத்தில், சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, ‘தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறுகின்றனர். ஆதலால், சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கிப் புறப்பட்டுச் செல்கின்றார். சவுல், எசிமோனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைக்கின்றார்" (காண்க 1 சாமு 26:1-3). தான் காட்டிக்கொடுக்கப்பட்ட இரண்டாவது முறையும் தனது நெருக்கடியான நிலைகுறித்து ஆண்டவரிடம் முறையிடுகிறார் தாவீது. ஆக, இந்த இரண்டுவிதமான சூழலையும் இந்தத் திருப்பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது. தாவீதின் பெரும்பாலான திருப்பாடல்கள் அவர் நெருக்கடியான சூழலில் இருந்தபோது எழுதப்பட்டதுதான். நாம் தியானிக்கும் இத்திருப்பாடலும் இத்தகையதொரு சூழலைக் கொண்டிருப்பதாலேயே நாம் இவ்வளவு நேரமும் அதன் பின்புலம் குறித்து அறிந்துகொண்டோம்.

ஒரு துறவு மடம். அதில் புதிதாக ஒரு மாணவன் வந்து சேர்ந்தான். இறையச்சத்திலும், அறிவிலும், அடக்கத்திலும் சிறந்து விளங்கிய அவனை அந்தத் துறவி பெரிதும் அன்பு கூர்ந்தார். இதனால் அவன்மீது மூத்த மாணவர்கள் பொறாமைப்பட்டனர். அதனால் எப்பொழுது பார்த்தாலும் அவனைப்  பற்றி  துறவியிடம்  ஏதேனும் புகார் சொல்லி, கோள் மூட்டிக்கொண்டே இருந்தனர். அப்புதிய மாணவனை விரட்டியடிக்க அவர்கள் பல சூழ்ச்சிகள் செய்தனர். இதனை அறிந்துகொண்ட அத்துறவி, மூத்த மாணவர்களுக்கு சரியான பாடம் புகட்ட விரும்பினார். ஆகவே, ஒருநாள் எல்லா மாணவர்களையும் தன்னிடம் அழைத்தார். “அன்புச் செல்வங்களே! உங்கள் அறிவாற்றலுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் என் வாரிசாவார்” என்றார். எல்லா மாணவர்களும் போட்டிக்குத் தயாராகினர். அவர்களுக்கு எதிரே, ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று மனித பொம்மைகள் வைக்கப்பட்டன. அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து சொல்லும்படி துறவி ஆணையிட்டார். மூத்த மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து பொம்மைகளைப் பல கோணங்களில் பார்த்தனர்; யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னரும் சிறந்த பொம்மையை அவர்களால் கண்டறிய முடியவில்லை. அவர்கள் குருவிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

இப்பொழுது அந்தப் புதிய மாணவரின் முறை. அவன் மெல்லிய, நீண்டதொரு கம்பியைக் கொண்டு வந்து முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். கம்பி, பொம்மையின் மறு காது வழியே வெளியானது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது வாய் வழியே கம்பி வெளியானது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது கம்பி வயிற்றுக்குள் சென்றது. மூன்றாவது பொம்மையே சிறந்த பொம்மை என அறிவித்து, அதற்கான காரணத்தையும் அவன் சொன்னான்! “முதல் பொம்மை எந்த அறிவுரையைக் கேட்டாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடும். இரண்டாவது பொம்மை, அறிவுரையைப் பிரச்சாரம் செய்யுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ள முயலாது. மூன்றாவது பொம்மையோ, அறிவுரையை கிரகித்து தன் வாழ்வை சீர் செய்துகொள்ளும் சீர்மை மிக்கது. ஆகவே மூன்றாவது பொம்மையே சிறந்தது.” அவனது அறிவாற்றல் மிக்கப் பதிலைக் கண்டு துறவியும் மாணவரும் வியந்து நின்றனர்.

இவ்வுலகில் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமே பொறாமை உணர்வுதான். அதேவேளையில், எவனொருவன் தனது செயல்பாடுகளில் இறையச்சமும், அர்ப்பண உணர்வும், பொறுமையும் கொண்டிருக்கின்றானோ, அவனால் எல்லா காரியங்களிலும் வெற்றிபெறமுடியும் என்பது திண்ணம். காரணம், கடவுள் அவனுக்கு ஞானத்தை அருளுகின்றார். இன்று நாம் தியானித்துக் கொண்டிருக்கும் இத்திருப்பாடலில் தாவீதுக்கு நிகழ்ந்த எல்லாவிதமான தீமையான செயல்களுக்கும் காரணம், மன்னர் சவுல் அவர்மீது கொண்டிருந்த போட்டியும், பொறாமையும், காழ்ப்புணர்வும்தான். அதேவேளையில், தீமையை தீமையால்தான் வெல்ல வேண்டும், ஆயுதமோதலை ஆயுதமோதலால்தான் வெல்ல வேண்டும் என்ற தப்பறை கொள்கைகளை விட்டொழித்துவிட்டு தீமையை நன்மையால்தான் வெல்ல வேண்டும் என்பதை தாவீது அரசரின் வாழ்வு நமக்குக் கற்பிக்கிறது. தாவீது, மன்னர் சவுலிடம் கொண்டிருந்த அணுகுமுறை இதனை நமக்குத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆகவே, தீமைக்கு எதிராகத் தீமை செய்யாமல், தீமைக்கு எதிராக நன்மை செய்ய வேண்டும் என்ற இறைபடிப்பினைகளை இதயத்தில் ஏந்தி வாழ்ந்த தாவீது அரசரின் வாழ்வு நமக்கொரு வாழ்க்கைப் பாடமாகட்டும். அவரின் வழியில் நமது வாழ்வு சிறக்க இந்நாளில் இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2024, 11:09