தேடுதல்

இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர் இறைவேண்டல் செய்யும் தாவீது அரசர்  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 54-2, நமது நேர்மை நிலைபெறட்டும்!

நாமும் ஆண்டவரில் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழும்போது ஒருபோதும் அவமானமும், வெட்கமும், மானக்கேடும் அடைய மாட்டோம்.

 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 54-2, நமது நேர்மை நிலைபெறட்டும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘‘தீமையை நன்மையால் வெல்வோம்!’  என்ற தலைப்பில் 54-வது திருப்பாடல் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்கினோம். குறிப்பாக, இந்தத் திருப்பாடல் எழுதப்பட்டதன் பின்னணிக் குறித்து  விரிவாகக் கண்டோம். இவ்வாரம் அதன் இறைவார்தைகள் குறித்துத் தியானிக்கத் தொடங்குவோம். முதலில் 1 முதல் நான்கு வரையுள்ள இறைவார்த்தைகளை நமது தியானத்திற்கு எடுத்துக்கொள்வோம். இப்போது இறை ஒளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். "கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (வச. 1-4). ஒட்டுமொத்த இந்தத் திருப்பாடலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதற்பகுதியில் தாவீது தனது முறையீடல்களை முன்வைக்கின்றார். இரண்டாவது பகுதியில் கடவுள்மீது அவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். இந்நாளில் முதற்பகுதியில் வரும் தாவீதின் முறையீடல்கள் குறித்து ஆழ்ந்து சிந்திப்போம். முதலில் "கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்" என்கின்றார் தாவீது. இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் அவர்கள் கடவுளின் பெயர்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததைப் பார்க்கின்றோம். இதற்கு பல எடுத்துக்காட்டுகள் பழைய ஏற்பாட்டில் காணப்பட்டாலும் இரண்டை தற்போது நோக்குவோம். முதலாவது, தான் அதிகமாய் அன்புகூரும் தனது ஒரே மகன் ஈசாக்கை பலியிடுமாறு ஆபிரகாமிடம் கடவுள் கேட்டபோது, அவர் மறுப்பேதும் கூறாமல், தனது மகனை பலியிடத் துணிந்தார். ஆனால் அம்மலையில் தனது மகன் ஈசாக்கிற்குப் பதிலாக செம்மறி ஆடு ஒன்று பலியிடப்படுகிறது. இந்த ஆட்டுக்கிடாய் கடவுளால் கொடுக்கப்படுகின்றது. அப்பொழுது ஆபிரகாம் தம் கண்களை உயர்த்திப் பார்த்தார். இதோ, முட்செடிகளில் கொம்பு மாட்டிக்கொண்டு நின்ற ஓர் ஆட்டுக்கிடாயைக் கண்டார். உடனே ஆபிரகாம் அங்குச் சென்று அந்தக் கிடாயைப் பிடித்துத் தம் மகனுக்குப் பதிலாக எரி பலியாக்கினார் (தொநூ 22:13) என்று வாசிக்கின்றோம். அதனைத் தொடர்ந்து, ஆபிரகாம் அந்த இடத்திற்கு ‘யாவேயிரே’ என்று பெயரிட்டார். ஆதலால்தான் ‘மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்’ என்று இன்றுவரை வழங்கி வருகிறது என்றும் வாசிக்கின்றோம். இங்கே கடவுளின் வல்லமை பொருந்திய செயலை குறிக்கும் வகையில், அதாவது, அவரது பெயரில் கொண்ட நம்பிக்கையின் காரணமாக அந்த இடத்திற்குப் புதியதொரு பெயரை சூட்டுகின்றார் ஆபிரகாம். இது கடவுளுக்கு அவர் வைக்கும் ஒரு பெயராகவும் நாம் கருதலாம்.

இரண்டாவதாக, விடுதலைப்பயண நூலில் மோசேயை அழைக்கும் நிகழ்வில் காண்கின்றோம். இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மீட்க ஆவல்கொள்ளும் கடவுள், முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் மோசேவுக்குத் தோன்றி அவரை அழைக்கிறார். ஆனால் அந்த அழைத்தலை ஏற்க மறுக்கிறார் மோசே. ஆனாலும் கடவுளை அவரை விடுவதாக இல்லை. அப்பொழுதுதான் அவரின் பெயர்குறித்து வினவுகிறார் மோசே. அப்பகுதியை இப்போது வாசிப்போம். மோசே கடவுளிடம், “இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, ‘அவர் பெயர் என்ன?’ என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?” என்று கேட்டார். கடவுள் மோசேயை நோக்கி, “இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே” என்றார். மேலும் அவர், “நீ இஸ்ரயேல் மக்களிடம், ‘இருக்கின்றவர் நானே’ என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்” என்றார் (விப 3:13-14). ஆக, இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளும் கடவுளின் பெயர்மீதான வல்லமையை எடுத்தியம்புகின்றன. அதேவேளையில், இப்படிப்பட்ட பெரும் வல்லமை கொண்ட கடவுளின் பெயர் வீணாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதும் மோசேவுக்கு கடவுள் வழங்கிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளதையும் பார்க்கின்றோம். "உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். (விப 20:7). ஆக, இதன் அடிப்படையில்தான் தாவீது அரசர் தொன்றுதொட்டு தம் முன்னவர்கள் கடவுளின் வல்லமையான பெயரின்மீது கொண்டிருந்த அதே நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். மேலும் “ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது (திபா 8:1) என்றும், என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்” (திபா 34:3) என்றும் வேறுசில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர்.  

இரண்டாவதாக, "உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்" என்கின்றார் தாவீது. இங்கே எதை 'நேர்மை' என்று குறிப்பிடுகின்றார் தாவீது? கோலியாத்தை கொன்றொழித்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றிய தாவீதை பொறாமைக் கண் கொண்டு பார்க்கலானார் மன்னர் சவுல். அதுமட்டுமன்றி, அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு அவரைக் கொன்றொழிக்கவும் முடிவுசெய்தார். இதனால் அவரது பார்வையிலிருந்து தப்பிச்சென்ற தாவீதை துரத்தித்துரத்தி வேட்டையாடத் துடிக்கின்றார் சவுல். அப்போது இரண்டுமுறை தாவீதிடம் சிக்கிக்கொள்கின்றார் மன்னர் சவுல். ஆனால் பெருந்தன்மைகொண்டு அவரைக் கொல்லாது விட்டுவிடுகின்றார் தாவீது. முதலாவது, ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரைத் தேடிச் செல்லும்போது குகையொன்றில் தாவித்திடம் மாட்டிக்கொள்கிறார் சவுல். அப்போது தாவீது தம் ஆள்களைப் பார்த்து, “ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கு எத்தீங்கும் செய்யாதவாறு ஆண்டவர் என்னைக் காப்பாராக. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானதால் நான் அவர் மேல் கைவைக்கக்கூடாது” என்று கூறியது மட்டுமன்றி, தன்னோடு இருந்த ஆள்களையும் சவுலைத் தாக்காதவாறும் பார்த்துக்கொள்கின்றார் (1 சாமு 24:6-7). இரண்டாவதாக, தாவீது எசிமோனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான் என்று சீபியரால் காட்டிக்கொடுக்கப்பட்டு அவரைத் தேடிச்செல்லும்போது, தாவீதிடம் வசமாக சிக்கிக்கொள்கிறார் மன்னர் சவுல். இங்கேயும் நேரிய உள்ளம் கொண்டவராக அவரைக் கொல்லாது விட்டுவிடுகிறார் தாவீது. அதாவது, தாவீதும் அபிசாயும் இரவில் சவுல் தங்கியிருந்த பாளையத்திற்குச் செல்கின்றனர், சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தலையில் குத்தியிருப்பதையும் காண்கின்றனர். அப்னேரும் படைவீரர்களும் அவரைச் சுற்றிலும் படுத்து உறங்குவதையும் அவர்கள் காண்கின்றனர். அப்போது அபிசாய் தாவீதிடம், “இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார்; ஆதலால், இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பதிய குத்தப்போகிறேன்” என்கின்றான். ஆனால், தாவீது அபிசாயியை நோக்கி, “அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்?” என்று சொல்லித் தடுக்கிறார் (1 சாமு 26:7-9). என்னே தாவீதின் அன்பு! என்னே தாவீதின் உயர்ந்த உள்ளம்! என்னே தாவீதின் நேர்மை! இங்கே, நாம் இன்னொரு விடயத்தையும் நம் மனதில் நிறுத்த வேண்டும். அது என்னவென்றால், அதிகாரத்திற்கும், பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாத தாவீதின் நேரிய உள்ளம். சவுலின் மகனான யோனத்தான், தாவீதே  இஸ்ரயேல் மக்களின் அரசனாக வேண்டும் என்றும், தான் அவருக்கு அடுத்த நிலையில் இருக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தாவீதுடன் உடன்படிக்கை செய்துகொண்டுவிட்டார். இப்போது தாவீது நினைத்திருந்தால் மன்னர் சவுலை கொன்றுவிட்டு அவரின் அரச பதவியைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் அதை அவர் செய்ய விரும்பவில்லை. காரணம், அவர் இறையச்சம் கொண்டவராக இருந்தார். அதுமட்டுமன்றி, என்னதான் சவுல் தன்மீது கொலைவெறி கொண்டிருந்தாலும், அதையெல்லாம் மறந்துவிட்டு அவர்மீது தான்கொண்டிருக்கும் மாறாத அன்பை வெளிப்படுத்துகின்றார். "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கை வைக்க வாட்டேன்" என்று கூறும் அவரது அன்புகனிந்த வார்த்தைகளிலிருந்தே நாம் அதனைப் புரிந்துகொள்ளலாம். இதன் காரணமாகவே, "உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும்" என்கின்றார் தாவீது.

அடுத்து, “கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும்" என்று உரைக்கின்றார் தாவீது அரசர். ஆக, ‘இப்படிப்பட்ட இறையச்சம் நிறைந்த, நேரிய உள்ளம் கொண்ட, தீங்கு விளைவிக்க விரும்பாத, அமைதியை விரும்புகின்ற, என்னை கண்ணோக்கும், என்னை கைவிட்டுவிடாதேயும்’ என்று கூறி இறைவேண்டல் செய்கின்றார் தாவீது. மேலும் "ஆண்டவரே! என்னைக் கைவிடாதேயும்; என் கடவுளே! என்னைவிட்டு அகன்றுவிடாதேயும். என் தலைவரே! மீட்பரே! எனக்குத் துணைசெய்ய விரைந்து வாரும்" (திபா 38:21-22) என்றும், “உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்; நீரே எனக்குத் துணை; என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும்; என்னைக் கைவிடாதிரும். என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார். ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்; என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும்" என்று வேறுசில திருப்பாடல்களிலும் தாவீது அரசர் இதே கருத்தை வெளிப்படுத்துவதையும்  நாம் பார்க்கின்றோம்.

இறுதியாக, "செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை" என்று உரைக்கின்றார் தாவீது. இவ்விடத்தில் செருக்குற்றோர், கொடியவர் ஆகிய இரண்டு வார்த்தைகளும் மன்னர் சவுல், அவரது படைவீரர்கள், தாவீதை இரண்டுமுறை காட்டிக்கொடுத்த சீபியர், கடவுளின் குருக்கள் கொல்லப்பட காரணமாக இருந்த தோயேகு ஆகிய அவருடைய எதிரிகளைக் குறிக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. இங்கே மன்னர் சவுலை தாவீது தனது எதிரியாகக் கொள்ளவில்லை என்றாலும் கூட, சவுல் தாவீதை தனது பரம எதிரியாகத்தான் பாவித்தார் என்பதே நிதர்சனமான உண்மை. நல்லது செய்த இளைஞனாகிய தாவீதுக்கு எதிராக ஓர் அரசரும் அவரின் படைகளும் வெகுண்டெழுந்து அவனை அழித்தொழிக்க முற்படும்போது, தன்னோடு பயிற்சியே இல்லாத வெறும் முன்னூறு பேரை வைத்துக்கொண்டு அவனால் என்ன செய்ய முடியும்? ஆனாலும், திடம்கொண்ட ஒரு மனிதராக தனது எதிரிகளின் சதித்திட்டங்களையெல்லாம் முறியடித்து அவரால் முன்னேற முடிந்ததென்றால் அதற்கு அடிப்படைக் காரணம், அவர் நம்பியிருந்த ஆண்டவரின் உடனிருப்புதான். ஆகவே, நாமும் தாவீதைப் போல, கற்பாறையாய் இருந்து நம்மை நாளும் காக்கும் கடவுளிடம் நம்பிக்கை கொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 June 2024, 12:38