யூபிலி ஆண்டு கடவுளின் இரக்கத்தை உணர உதவும் ஒரு காலம்!
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
Kyivல் உள்ள கிரேக்க-கத்தோலிக்க குருமடத்தின் துணை அதிபர் அருள்பணியாளர் Roman Ostrovskyy அவர்கள் வத்திக்கான் செய்திகளிடம் பேசுகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் யூபிலி ஆண்டிற்கான ‘‘நம்பிக்கை ஏமாற்றம் தருவதில்லை’’ (Spes non confundit) என்ற ஆணை பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவ்வாணையில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ள ''கிறித்தவ வாழ்க்கை என்பது ஒரு பயணம்'' என்ற கருப்பொருளை மேற்கோள் காட்டி பேசிய அருள்பணியாளர் Ostrovskyy அவர்கள், இந்த யூபிலி ஆண்டின் குறிக்கோள் இறைமகன் இயேசுவை எதிர்கொள்ளுதல் என்று கூறினார்.
மேலும் இயேசுவை எதிர்கொள்ளுதல் என்ற இப்பாதுகாப்பை உக்ரைனில் உள்ள அனைத்து கிறித்தவர்களும் உணர்வதாக தெரிவித்த அருள்பணியாளர் Ostrovskyy அவர்கள், மற்றொருபுறம் நம்பிக்கையிழக்கச் செய்யும் பல நிகழ்வுகளில் பெரும் வளர்ச்சியை காண முடிவதாகவும், போர் துவங்கிய இந்த இரண்டரை ஆண்டுகளில், மக்கள் இந்நிலையை ஆழமாக உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
போர் முழுமையாக ஏற்பட்டபோது, என்ன நிகழுமோ என்கிற பயமும் குழப்பமும் மக்களிடம் இருந்ததாகவும், அதேவேளை, உக்ரைன் அதை எதிர்த்து வலுவாக தன்னை தற்காத்துக்கொள்ள முனைந்ததாகவும் கூறிய அருள்பணியாளர் Ostrovskyy அவர்கள், போர் வெகு நாட்களாகத் தொடர்வதால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் நிச்சயமற்ற சூழல்களால் பலர் விரக்தி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இச்சூழலில் மக்கள் உயிர் வாழ எது உதவியாக இருக்கிறது என்ற கேளிவிக்குப் பதில் அளித்த அருள்பணியாளர் Ostrovskyy அவர்கள், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வின் அடிப்படை அம்சங்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம், அதற்கு நம் நம்பிக்கை நமக்கு உதவுகிறது என்றும், நம்முடைய வேண்டல்கள் கடினமான நாள்களில் நாம் முன்நோக்கிச் செல்ல உதவுகிறது, அதன் வழியாக நம்பிக்கை ஒளியைக் காணவும் இறைவன் நம்மை கைவிட மாட்டார் என்று நம்பவும் தூண்டுகிறது என்றார்.
இங்கு ஒவ்வொரு குடும்பத்தையும் சந்திக்கும்போது எவ்வாறு அவர்கள் தங்கள் குழந்தைகளிடத்தில் பொய் சொல்ல கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும் என்று விளக்கிய அருள்பணியாளர் Ostrovskyy அவர்கள், போரில் இறந்துபோன தந்தைக்கு அவரின் நான்கு வயது குழந்தை இன்னும் கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பதையும் காண முடிகிறது என்றும் குறிப்பிட்டார்.
யூபிலி ஆண்டு கடவுளின் இரக்கத்தை உணர உதவும் ஒரு காலமாகும், ஆனால் எதிர்பாராதவிதமாக இரண்டரை ஆண்டுகளாக நீடித்துவரும் போரினால் வறுமை அதிகரித்திருப்பதாகவும், இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும், முதியவர்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் Ostrovskyy.
மேலும் இரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பினால் மனிதரின் மேன்மை மிகத் தாழ்ந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும், மருத்துவமனைகளும் தாக்குதலுக்கு உள்ளாவதைப் பார்க்கும்போது, இது நம்மிடம் நம்பிக்கையற்ற நிலையை ஏற்படுத்துவதுடன் ஒருவரை பெரும் அவநம்பிக்கையுடன் அடுத்த நாளை எதிர்கொள்ளச் செய்கிறது என்றார் அருள்பணியாளர் Ostrovskyy.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்