தேடுதல்

சூடான் புலம்பெயர்ந்தோர் சூடான் புலம்பெயர்ந்தோர்  

சூடானில் தொடரும் முடிவற்ற மோதலால் 1 கோடி மக்கள் இடம்பெயர்வு!

சூடானில், கடந்த ஏப்ரல் 2023-இல் மோதல் தொடங்கியதிலிருந்து 92 இலட்ச மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 71 இலட்ச மக்கள் உள்நாட்டிற்குள்ளும் 19 இலட்ச மக்கள் அண்டை நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர் : ஆயர் Tombe Trille.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சூடானில் தொடரும் முடிவற்ற மோதல்களால், ஒரு கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ள வேளை, கடவுளின் குரலையும் மக்களின் குரலையும் யாரும் கேட்பதில்லை என்று Fides செய்தி நிறுவனத்திடம் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் El Obeid-இன் ஆயர் Yunan Tombe Trille Kuku Andali

உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் பேரழிவுகள் பற்றிய முன்னணி மனிதாபிமான தகவல் ஆதார அமைப்பான Reliefweb-இன் புள்ளிவிபரங்கள் படி, ஏப்ரல் 2023-இல் மோதல் தொடங்கியதிலிருந்து 92 இலட்ச மக்கள் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளனர் என்றும், அவர்களில் 71 இலட்ச மக்கள் உள்நாட்டிற்குள்ளும் 19 இலட்ச மக்கள் அண்டை நாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார் ஆயர் Tombe Trille.

மேலும் தெற்கு சூடான் மற்றும் சாட் ஆகிய இரண்டு நாடுகள், எல்லை தாண்டிய புலம்பெயர்ந்தோரால் முற்றுகையிடப்பட்டுள்ளன என்று கூறியுள்ள ஆயர் Tombe Trille அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு, இப்போது பெரும்பாலும் தண்ணீர், உணவு, தங்குமிடம், மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தேவைப்படுகின்றன என்பதையும் அச்செய்தி நிறுவனத்திடம் எடுத்துக்காட்டியுள்ளார்.

மோதலில் ஈடுபட்டு வரும் இருதரப்பின் பொறுப்பில் உள்ளவர்களை தான் முழங்கால்படியிட்டு இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும், கடவுளின் குரலையும், அமைதிக்காகக் கூக்குரலிடும் மக்கள், குழந்தைகள் மற்றும் பெண்களின் குரலையும் கேட்குமாறும் தான் அவர்களிடம் விண்ணப்பிப்பதாகவும் கூறியுள்ளார் ஆயர் Tombe Trille.

யாரும் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை, தலைவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள், ஒவ்வொருவரும் தங்களுக்கு மேலான பலம் இருப்பதாக நம்புகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள ஆயர் Tombe Trille அவர்கள்,  மோதலை  முடிவுக்குக் கொண்டுவரவோ, எல்லாவற்றிற்கும் மேலாக, உரையாடலைத் தேடவோ அவர்கள் தயாராக இல்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2024, 14:08