தேடுதல்

இயேசு காற்றையும் கடலையும் அடக்கும் நிகழ்வு இயேசு காற்றையும் கடலையும் அடக்கும் நிகழ்வு  

பொதுக் காலம், 12-ஆம் ஞாயிறு : காக்கும் கண்ணயராக் கடவுள்!

நமது வாழ்வின் எத்தகைய சூழலிலும் அவர் நம்மை கரம்பிடித்து நடத்துவர் என்ற நம்பிக்கையில் இவ்வுலகம் என்னும் கடலில், நம்பிக்கை என்னும் நமது படகில் பயணத்தைத் தொடர்வோம்.
பொதுக் காலம், 12-ஆம் ஞாயிறு : காக்கும் கண்ணயராக் கடவுள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. யோபு 38:1, 8-11      II. 2 கொரி 5:14-17      III.  மாற் 4:35-41)

ஒரு தொலைதூர கிராமத்திற்குப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது, அந்தக் கிராமத்திற்குச் செல்லும் பாதை குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. ஒருசில இடங்களில் பேருந்து பெரும் அலைகள் நடுவே தத்தளித்துச் செல்லும் படகைப் போன்று சென்று கொண்டிருந்தது. இதனால் பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தனர். ஆனால் அதிலிருந்த ஒரு சிறுவன் மட்டும் எதைக் குறித்தும் கவலைப்படாமல், அந்தப் பேருந்து இப்படியும் அப்படியும் சாயும்போதெல்லாம் கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டு வந்தான். அவனது உள்ளத்தில் துளியும் பயமில்லை. அவன் செய்கைகளையெல்லாம் கவனித்துக்கொண்டு வந்த ஒரு முதியவர், "ஏண்டா தம்பி, நாங்களெல்லாம் ஊருக்குப் போய்ச்சேருவோமான்னு பயத்துல இருக்கோம். நீ என்னடான்னா, கொஞ்சம் கூட கவலைப்படாம இப்படி ஆட்டம்போட்டுகிட்டு வர்றியே... உனக்கு உண்மையிலேயே பயம் இல்லையா…" என்று சற்று கோபமாக கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் சிரித்துக்கொண்டே, "நான் ஏன் தாத்தா பயப்படணும். ஏன்னா, இந்தப் பஸ்ஸ ஓட்றதே எங்க அப்பத்தானே... நானும் இந்த பஸ்சுல இருக்கேன்னு அவருக்கு நல்லா தெரியும்... அதனால, எப்படியும் நம்ம எல்லாரையும் அவரு பத்திரமா கொண்டுபோய்ச் சேர்த்திடுவாரு. அதனால யாரும் பயப்படாதீங்க, கவலைப்படாதீங்க" என்று சொன்னான்.

இன்றைய நற்செய்தி இயேசு காற்றையும் கடலையும் அடக்குவது குறித்து எடுத்துரைக்கிறது. இந்நிகழ்வைக் குறித்து நாம் தியானிப்பதற்கு முன்பாக, அதன் பின்புலம் குறித்து நாம் அறிந்துகொண்டால் இந்நிகழ்வை இன்னும் சற்று அழமாகப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். பழைய ஏற்பாட்டிலும் சரி, ஏனைய பழம்பெரும் இனங்களின் வரலாற்றிலும் சரி, கடல் ஒரு மாபெரும் எதிர்ப்பு சக்தியாகவே பார்க்கப்பட்டது. கடல் சார்ந்த பல்வேறு விலங்குகளும், கடலிலிருந்து உருவாகும் கடல்கொந்தளிப்பு, சுனாமி போன்றவைகளும் மக்களுக்குப் பெரும் பேரழிவை விளைவிப்பவையாக கருதப்பட்டது. யூதர்கள் இத்தகைய நம்பிக்கையை அதிகம் கொண்டிருந்தார்கள். செங்கடல் பிரிந்ததை இதற்கோர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.  திரும்பி வந்த நீர்த்திரள் தேர்கள், குதிரைவீரர்கள் மற்றும் கடலுக்குள் துரத்திச் சென்ற பார்வோனின் படைகள் அனைவரையும் மூடிக்கொண்டது. அவர்களில் ஒருவன் கூடத் தப்பவில்லை. ஆனால், இஸ்ரயேல் மக்கள் கடலின் உலர்ந்த தரையில் நடந்துசென்றனர். நீர்த்திரள் வலப்புறமும் இடப்புறமும் அவர்களுக்குச் சுவராக நின்றது என்றும் கடற்கரையில் எகிப்தியர் செத்துக் கிடப்பதை இஸ்ரயேலர் கண்டனர். எகிப்தியருக்கு எதிராக ஆண்டவர் கைவன்மை காட்டிச் செயல் புரிந்ததை உணர்ந்து ஆண்டவர்மீது மக்கள் அச்சம் கொண்டனர். மேலும், அவர்கள் ஆண்டவரிடமும் அவர் அடியார் மோசேயிடமும் நம்பிக்கை வைத்தனர் (காண்க விப 14:28-31) என்று வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு கடலைக் குறித்த ஓர் அச்சத்தையும், அவற்றின்மீதான கடவுளின் வல்லமையையும் இஸ்ரயேல் மக்கள் கண்டு பயமும் வியப்பும் அடைந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது. அதுமட்டுமன்றி, இத்தகைய மாபெரும் வலிமைகொண்ட கடலை என்றும் வாழும் கடவுள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் சீடர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ!” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள் என்று பார்க்கின்றோம். மேலும், இந்தச் செங்கடல் பிரிதல் நிகழ்விற்குப் பிறகு மோசே பாடும் வெற்றிப்பாடலில், "நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்; கடல் அவர்களை மூடிக்கொண்டது; ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள் ஈயம் போல் அமிழ்ந்தனர்" என்று பாடுகின்றார். மேலும் "சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும். பெருவெள்ளம் என்னை அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!” (திபா 69:14-15) என்று தாவீது அரசரும் பாடுவதைப் பார்க்கின்றோம்.

இந்தப் பின்னணியில் இப்போது நற்செய்தியை உற்றுநோக்குவோம். இயேசு காற்றையும் கடலையும் அடக்கும் நிகழ்வை மற்ற ஒத்தமை நற்செய்தியாளர்களான மத்தேயும் லூக்காவும் தருகின்றனர் (காண்க. மத் 8:23-27; லூக் 8:22-25). இவ்விருவரும், ‘இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்’ என்று பதிவு செய்திருந்தாலும், மாற்கு மட்டும், 'அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார்' (வச 38) என்று சற்று கூடுதலான செய்தியைத் தருகின்றார். அவ்வாறே மத்தேயும் லூக்காவும் காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார் என்று கூறினாலும் மாற்கு மட்டும், “இரையாதே, அமைதியாயிரு”  என்று கடலை நோக்கி கூறியதாகப் பதிவு செய்கின்றார். இந்த ஒரு வார்த்தையை நாம் ஆழமாகச் சிந்திக்கும்போது சீடர்கள்மீது இயேசு கொண்டிருந்த கரிசனையை நம்மால் காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு தாய் தன மகனுடன் நடந்துபோகிறார். அப்போது அவனைவிட வலியவன் ஒருவன் வந்து அவரின் மகனை ஏதோவொரு காரணத்திற்காக மிரட்டுகிறான் என்று வைத்துக்கொள்வோம். உடனே அச்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் தனது மகனின் நிலைகண்டு, "டேய், சும்மா கத்தாத.. கொஞ்சம் அடங்கு... தேவையே இல்லாம ஏன் இப்படி ஆட்டம்போடுற... நான் அவன் கூட இருக்கும்போதே இப்படி சவுண்டு விடுற... பேசாம வந்த வேலையை பார்த்துக்கிட்டுப போவியா" என்று அந்த வலியவனை நோக்கி ஓர் அதட்டல் போட்டால் பதைபத்துக்கொண்டிருந்த அக்குழந்தையின் மனம் என்ன சொல்லியிருக்கும்? ‘என் அம்மா என்னோட இருக்கும்போது நான் ஏன் கவலைப்படணும், என்னய யாரும், எதுவும் செய்ய முடியாது' என்ற அசாத்திய துணிச்சல் வருமில்லையா? அதே துணிச்சல் சீடர்களுக்கும் வந்தது. ஆனால் "ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்ற கேள்வியை இயேசு எழுப்பியதாக மூன்று நற்செய்தியாளர்களுமே பதிவிட்டுள்ளனர். அப்படியென்றால், தன்னோடு இத்தனை நாள்களாக உடன்பயணித்தும் கூட அவர்களிடம் நம்பிக்கை குன்றியுள்ளதை இயேசு கடிந்துகொள்வதைப் பார்க்கின்றோம். இங்கே இயேசு அவர்களிடம் அறவே நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடவில்லை மாறாக, அந்த நம்பிக்கை குறைந்துள்ளதைத்தான் கண்டிக்கிறார் என்பதை நம் நினைவில் நிறுத்துவோம். நாம் தொடக்கத்தில் கண்டதுபோல, மாபெரும் தீய சக்திகள் கடலிலிருந்து  செயல்பட்டதாக யூதர்கள் நம்பினர். மேலும் கடலில் வாழும் 'லவியத்தான்' என்ற கொடிய மிருகம் கூட கடலில் இருப்பதாக நம்பப்பட்டது. அதனால்தான், சீடர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். நமது வாழ்க்கையிலும் கூட பல்வேறு தருணங்களில் அலகையினால் கட்டவிழ்த்துவிடப்படும் பல்வேறு சோதனைகளால் நமது இறைநம்பிக்கை என்னும் படகு தத்தளிக்கின்றது. இதனால் நாம் குறைவான நம்பிக்கை கொள்ளும் அல்லது அந்த நம்பிக்கையை கைவிடும் சூழலுக்குத் தள்ளப்படுகிறோம். அத்தகைய சூழல்களிலெல்லாம் நம்முடன் இருக்கும் இயேசுவை நோக்கிக் குரலெழுப்பிக் கூப்பிடுவோம்.

இன்றைய முதல் வாசகத்தில் யோபுவுக்கு அளிக்கப்படும் கடவுளின் வார்த்தைகளில் இதைத் தெளிவாகக் காணமுடிகிறது. வாழ்க்கை என்னும் கடலிலே எத்தனை சூறைக்காற்று வீசினாலும் புயல்காற்று புரட்டிப் போட்டாலும் கடவுள்மீது கொண்ட விசுவாசத்திலும் பிரமாணிக்கத்திலும் உறுதியாக இருக்க வேண்டும் என்பற்கு அவர் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. யோபு எல்லாவற்றையும் இழந்து, தனது நண்பர்களால் கைவிடப்பட்ட நிலையிலும் கூட, தான் பிறந்த நாளை சபித்தாரே தவிர கடவுளை ஒருபோதும் பழித்துரைக்கவில்லை. அப்படிப்பட்ட விசுவாசம் குன்றாத யோபுவுக்கு கடவுள் வழங்கும் அருமொழிகள்தாம் இவை. "கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடியபொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதிதுணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி ‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!" என்ற வார்த்தைகளில் கடலை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் தனது வல்லமை குறித்து உரைக்கின்றார் கடவுள். மேலும் இத்தனை வல்லமையும் ஆற்றலும் கொண்ட நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன், உன்னுடன் என்றும் இருப்பேன், உன்னை எல்லாத் தீமைகளிலிருந்து தப்புவித்து பெருமைப்படுத்துவேன். எனவே கவலைப்படாதே, என்மீது கொண்டுள்ள இறைநம்பிக்கையில் தொடர்ந்து முன்னேறு என்பதன் அடையாளமாகத்தான் இந்த வார்த்தைகள் அவருக்கு அருளப்படுவதைப் பார்க்கின்றோம்.

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று இயேசு தனது சீடர்களிடம் கூறுவதைப் பார்க்கும்போது யோபுவிடம் விளங்கிய நம்பிக்கை இவர்களிடம் இல்லை என்பதை அறிந்துகொள்கின்றோம். மேலும் ‘அவர் தூங்கிக்கொண்டிருந்தார்’ என்றே மூன்று நற்செய்தியாளர்களும் கூறுவதாகக் கண்டோம் அல்லவா? அப்படியென்றால் அவர் தூங்கும் கடவுளா அல்லது தூங்காக் கடவுளா? நம் கடவுள் தூங்கும் கடவுள் அல்ல, அவர் தூங்காக் கடவுள். பச்சிளங்குழந்தையுடன் இருக்கும் தாய், இரவெல்லாம் கண்விழித்து அதனை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்டதால் சற்று உறங்குவதுபோல தெரிந்தாலும் அவள் உள்ளூர உறங்குவதில்லை. தன் குழந்தைக்கு எந்த நேரத்தில் என்ன நிகழுமோ என்ற எண்ணத்தில் அவள் விழிகள் மூடியிருந்தாலும் இதயம் இப்போதும் விழித்துக்கொண்டுதான் இருக்கும். காதலன் காதலி விடயத்திலும் இதுதானே நிகழும்! "நான் உறங்கினேன்; என் நெஞ்சமோ விழித்திருந்தது" (இபா 5:2) என்று இனிமைமிகு பாடலின் வார்த்தைகளில், காதலி தன் காதலனுக்காகக் காத்திருப்பதுபோல, கண்ணயராக் கடவுளும் நம்மைக் காக்க காத்திருக்கிறார் என்பதை உணர்வோம். இதனைத்தான், "அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை"  என்று கூறும் தாவீது, “ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்” (திபா 121:3-4) என்றும் உரைக்கின்றார்.

இயேசு காற்றையும் கடலையும் அடக்கும் நிகழ்ச்சி முதல் நூற்றாண்டு திருஅவையில், கிறிஸ்தவ மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துன்பங்களுக்கு ஆளாகியிருந்த காலகட்டத்தில், அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் தருவதற்காக மாற்கு இப்பகுதியை கொடுத்திருக்க வேண்டும் என்று விவிலிய அறிஞர்களும் கருதுகின்றனர். மேலும் திருஅவை என்னும் இந்த மாபெரும் கப்பல் இயேசுவின் தலைமையில் எத்தகைய எதிர்ப்புக்களைச் சந்தித்தாலும், அது மனம்தளராது துணிவுடன் தொடர்ந்து பயணிக்கும் என்ற இறைநம்பிக்கையை கிறிஸ்தவ மக்களின் மனங்களில் வளர்த்தது என்றும் விவிலிய அறிஞர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதனடிப்படையில் பார்க்கின்றபோது,  "ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்" என்று இன்றைய இரண்டாம் வாகசத்தில் புனித பவுலடியார் கூறும் கருத்துக்கள் நமது சிந்தனைகளுக்கு வளம்சேர்கின்றன. இங்கே ஒப்புரவாக்கும் திருப்பணி என்பது நம்பிக்கையற்று உடைந்துபோன உள்ளங்களில் நம்பிக்கையை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது. இதுவே கிறிஸ்துவில் மனிதரைப் புதிய படைப்பாக மாற்றுகின்றது. ஆகவே, நம்பிக்கை குறைந்த நிலையிலிருந்து நம்பிக்கை மிகுந்த நிலைக்கு உயர்வோம். கண்ணயராதுக் காக்கும் கடவுள் நம்முடன் இருக்க நமக்கு அச்சம் வேண்டாம், கலக்கம் வேண்டாம். இதைத்தான், "உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்" (காண்க. 1 பேது 5:7) என்கின்றார் புனித பேதுரு.

ஆகவே, நமது வாழ்வின் எத்தகைய சூழலிலும் கடவுள் நம்மை கரம்பிடித்து நடத்துவர் என்ற நம்பிக்கையில் இவ்வுலகம் என்னும் கடலில், நம்பிக்கை என்னும் படகில் நமது பயணத்தைத் தொடர்வோம். அதற்கான அருளை இந்நாளில் இறைவன் நம்மீது பொழியட்டும்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2024, 12:41