தேடுதல்

சிறுமியை உயிர்பெற்றெழச் செய்யும் இயேசு சிறுமியை உயிர்பெற்றெழச் செய்யும் இயேசு  

பொதுக் காலம் 13-ஆம் ஞாயிறு : நம்பிக்கையே நலம் தரும்!

உயிர்த்தெழுதலும் வாழ்வு தருபவருமான இயேசுவில் நமது நம்பிக்கையை ஆழப்பதித்து, நிலைவாழ்வுக்கு நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம்.
பொதுக் காலம் 13-ஆம் ஞாயிறு : நம்பிக்கையே நலம் தரும்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்  I. சாஞா 1:13-16, 2:23-24      II. 2 கொரி 8:7,9,13-15      III.  மாற் 5:21-43)

இன்று நாம் பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் இறைவன்மீது ஆழமான நம்பிக்கை கொண்டோர் இறந்தாலும் வாழ்கிறார்கள் என்றும், மரணம் என்பது அவர்களுக்கு ஒரு கடத்தல் நிகழ்வுதான் என்ற பேருண்மையையும் பதிவுசெய்கின்றன. இப்போது ஓர் உண்மை நிகழ்வுடன் நமது மறையுரைச் சிந்தனைகளைத் தொடங்குவோம். உலகப் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் Crisda Rodriguez கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி வயிற்றுப்புற்று நோயால் மரணமடைந்தார். இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட பத்தே மாதத்தில் தனது 40-வது வயதில் இறந்து போனார். அவர் கடைசியாக எழுதிய வார்த்தைகளைப் படிக்கும்போது, அவை நம் வாழ்வுக்குப் பல்வேறு படிப்பினைகளை வழங்குகின்றன என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இப்போது அவரது  வார்த்தைகளுக்குச் செவிகொடுப்போம். "மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை! இந்த உலகத்தில் விலை உயர்ந்த வசதிகள் கொண்ட கார் என்னுடைய வண்டிக்கொட்டிலில் (garrage) நிற்கிறது. ஆனால் நான் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறேன்.! இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான வடிவங்களிலும் வண்ணங்களிலும் விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த காலணிகள், விலை உயர்ந்த பொருள்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளன. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய மேல் அங்கியை அணிந்துகொண்டு இருக்கிறேன்.!  என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் இருக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!! என் வீடு அரண்மனை போன்றும் கோட்டை போன்றும் உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர தங்கும் விடுதிகளுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் இப்போது, மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு நான் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.! அன்று ஒவ்வொரு நாளும் 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை...

உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர உணவகங்களில் விதவிதமான உணவுவகைகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று, பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு அவ்வளவுதான். அன்று தனியார் ஜெட் விமானத்தில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராண்டாவிற்கு வருவதற்கு இரண்டு நபர்கள் எனக்கு உதவுகின்றனர். நான் பெற்றிருந்த எந்தவிதமான வசதி வாய்ப்புகளும் எனக்கு இப்போது உதவவில்லை... எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை...ஆனால் சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது வேண்டல்களும்தான் இன்று எனக்கு உதவி வருகின்றன"  

பூவுக்கும் புல்லுக்கும் ஒப்பான மனித வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை இவரது வாழ்வு நமக்கு எடுத்துரைக்கின்றது. இன்றைய முதல் வாசகம், "சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும்  என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்" என்று உரைக்கின்றது. இதன் இறுதிப்பகுதி நமது முதல்பெற்றோரான ஆதாம் ஏவாவைக் குறிப்பிட்டு பேசுகின்றது. அதாவது, அவர்கள் எவ்வாறு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் அலகைக்குக் கீழ்ப்படிந்து பாவத்தில் வீழ்ந்து சாவை வருவித்துக்கொண்டார்கள் என்பதை நமக்குப் நினைவூட்டுகிறது. இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லவிரும்பும் கருத்து என்னவென்றால், கடவுள் இறப்பைக் கடந்தவர், என்றென்றைக்கும் நிலைத்து நீடித்து வாழக்கூடியவர். அவரில் ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்பவர்கள் அவர்தரும் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்வர் என்பதுதான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஒன்றுக்குள் ஒன்றாக இரண்டு அருளடையாளங்களை செய்கின்றார் நமதாண்டவர் இயேசு. தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவரின் மகளை உயிர்பெற்றெழச் செய்யும் நிகழ்வில், இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல் நிகழ்வை இடைச்சொருகலாக உட்புகுத்துகின்றார் மாற்கு நற்செய்தியாளர். ஒன்றை இன்னொன்று விளக்கி வலிமை சேர்க்கும் உத்தியை கையாளுகிறார் மாற்கு. பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல் (6:6-13, 30-32) - திருமுழுக்கு யோவான் கொல்லப்படுதல் (6:14-29), அத்தி மரத்தைச் சபித்தல் (11:12-14, 20-25) - இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல் (11:15-19) - சீடர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்கள் (13:9, 11-13) - மக்களினத்தார் அனைவருக்கும் நற்செய்தி அறிவித்தல் (13:10) ஆகிய பகுதிகளை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம். ஆக, இந்தப் பகுதிகளை நாம் ஆழமாகப் படித்து ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அதன் உண்மை நமக்குப் புரியவரும்.

உயிர்தெழச் செய்பவரும் வாழ்வு தருபவரும் இயேசுவே

இப்போது இன்றைய  நற்செய்தியில் வரும் இரண்டு அருளடையாளங்கள் குறித்து சிந்திப்போம். முதலாவது, தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார் என்று வாசிக்கின்றோம். நற்செய்தி நூல்களில் மூன்று இடங்களில் ஆண்டவர் இயேசு வழங்கும் உயிர்ப்புக் குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. முதலாவது, இன்று நாம் காணும் தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிரின் மகளை உயிர்பெற்றெழச் செய்தல். இரண்டாவது, நயீன் ஊர்க் கைம்பெண் மகனை உயிர்பெற்றெழச் செய்தல் (காண்க. லூக் 7:11-17). மூன்றாவது, இறந்த இலாசரை உயிர்பெற்றெழச் செய்தல் (காண்க யோவா 11:1-44). இந்த மூன்று அருளடையாளங்கள் வழியாக, “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்" (யோவா 11:25) என்ற பேருண்மையை வெளிப்படுத்துகிறார் நமதாண்டவர் இயேசு. அதேவேளையில், இம்மூன்றிலும் ஒரு சில ஒற்றுமைகள் காணப்படுவதையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும். இயேசு இறந்தவர்களின் வீடுகளை அதாவது, தேவையில் இருப்போரைத் தேடிச்செல்கின்றார். நயீன் ஊர்க் கைம்பெண் மகனை உயிர்பெற்றெழச் செய்யும் நிகழ்வின் இறுதியில், “நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்” என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர் என்று வாசிக்கின்றோம். அடுத்து, யாயீர், கைம்பெண் மற்றும் மார்த்தா மரியாவிடம் ஏற்படும் நம்பிக்கை. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறுகின்றார் இயேசு. எனவே, யாயீர் இறுதிவரை தனது நம்பிக்கையில் உறுதியாக இருப்பதைப் பார்க்கின்றோம். அதனால் அவர் எதைக் குறித்து நம்பிக்கைக் கொண்டாரோ அதனைப் பெற்றுக்கொண்டார். அவ்வாறே, அந்தக் கைம்பெண் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததால்தான் அவரது மகன் மீண்டும் உயிர்பெற்றெழுகின்றார். இலாசர் உயிர்பெற்றெழும் நிகழ்வில், இயேசு மார்த்தாவிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார். மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்”  என்று உரைக்கின்றார்.

அடுத்து இறந்தவர்களை பெயர் சொல்லி அழைத்து உயிரளிகின்றார் இயேசு. "சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” அதாவது, “சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு" என்கின்றார்.  அவ்வாறே, இறந்த கைம்பெண்ணின் மகனை நோக்கி, “இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு” என்றுரைக்கின்றார் (வச 7:14). மேலும் இறந்த இலாசரை நோக்கி இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” (11:43) என்று கூவி அழைக்கின்றார். இதன் வழியாக, இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்து அவரில் இறந்தவர்களை இறுதிநாள் உயிர்த்தெழுதலின்போது அவர் பெயர்சொல்லி அழைப்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம் அன்றோ?  மேலும் இந்த மூன்று உயிர்த்தெழச்செய்யும் நிகழ்வுகளிலும் இறுதியாக இயேசு கூறும் வார்த்தைகள் மிகவும் கவனத்துக்குரியவை. முதலாவதாக, சிறுமியை உயிர்தெழச் செய்தபிறகு, 'அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்' (வச. 43b) என்றும், இளைஞனை உயிர்தெழச் செய்தபிறகு, 'இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார்' (வச.15) என்றும், இலாசரை உயிர்தெழச் செய்தபிறகு, “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” (வச.44) என்றும் சொன்னார் என்பதைப் பார்க்கின்றோம். ஆக, இயேசுவின் இந்த வார்த்தைகளில் ஒருவித கரிசனையும் அக்கறையும் வெளிப்படுகின்றது. குறிப்பாக, “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு கூறிய வார்த்தைகள் இந்த  உலகின் கட்டுகளிடமிருந்து அதாவது, அலகைக்குரிய இவ்வுலக வாழ்வின் கட்டுகளிலிலிருந்து விடுதலையடைந்து என்றுமுள்ள நிலைவாழ்விற்குள் சுதந்திரமுடன் உட்செல்வத்தைக் குறிப்பதாக நாம் உணர்ந்துகொள்ளலாம். அடுத்து, "சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” (வச.49) என்று இயேசு கூறும் வார்த்தைகள் அங்கிருந்தோரை மிகவும் நகைக்கச்செய்கிறது. ஆனால், இயேசு கூறும் இந்த வார்த்தையின் பொருள் என்ன? தொடக்க கால திருஅவையில், இறந்தவர்கள் இயேசுவின் உயிர்ப்பில் பங்குபெற்று மீண்டும் வாழ்வார்கள் என்றதொரு நம்பிக்கை இருந்தது. மேலும் இயேசுவின் இத்தகைய வல்லமை சாவை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் தீமையின் வடிவான அலகையை அழித்தொழித்து என்றுமுள்ள நிலைவாழ்வுக்கு நம்மை உயிர்த்தெழச் செய்யும் என்ற பேருண்மை இங்கே வெளிப்படுத்தப்படுகிறது.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது அருளடையாளமாக அமைவது, இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல் நிகழ்வு. பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று என்று பதிவு செய்கின்றார் மாற்கு நற்செய்தியாளர். நாம் வாசித்த இந்தப் பகுதி அந்தப் பெண்ணின் கையறு நிலையையும், அவள் மேற்கொண்டிருந்த போராட்டங்களையும், அவளது தோல்விகளையும் நமக்கு எடுத்துரைக்கின்து. அதேவேளையில், அவரது தேடுதல் முயற்சியில் அவருக்கு வெற்றி கிடைக்கிறது என்பதையும் பார்க்கின்றோம். இயேசுவின் மீதான அவரது நம்பிக்கை அவர் விரும்பியதைப் பெறச் செய்கின்றது.

இறுதியாக உண்மையான நோயிலிருந்து மட்டுமல்ல தனது பழைய பாவ வாழ்விலிருந்தும் விடுதலை அளிக்கக் கூடிய ஓர் ஒப்பற்ற மருத்துவரைக் கண்டுகொள்கிறார் அப்பெண். அவர் இயேசுவைத் தொட்டதும் வல்லமை அவரிடமிருந்து வெளியேறிதாக மாற்கு கூறுவது, இயேசுவின் மெசியாத்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இங்கே, இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்று கூறும் அவரின் வார்த்தைகளும் அகவிடுதலை தரும் நிலைவாழ்வைக் குறிப்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில், "எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம்" என்று புனித பவுலடியார் கூறும் வார்த்தைகள், இவ்வுலகின் சமத்துவத்தை மட்டும் குறிக்கவில்லை மாறாக, நிலைவாழ்வில் எவ்வித வேறுபாடுமின்றி சமநிலையில் நம் ஆண்டவர் இயேசுவைக் கண்டுகளிக்கும் ஒரு பேரின்ப வாழ்வையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது என்பதை உணர்வோம். ஆகவே, உயிர்த்தெழுதலும் வாழ்வு தருபவருமான இயேசுவில் நமது நம்பிக்கையை ஆழப்பதித்து, நிலைவாழ்வுக்கு நம்மைக் காப்பாற்றிக்கொள்வோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2024, 15:35