தேடுதல்

எருசலேம் திருநகர் எருசலேம் திருநகர்   (AFP or licensors)

பாரிசிலிருந்து எருசலேமிற்கு நடைபயணமாகத் திருப்பயணம்!

பாரிசிலிருந்து தொடங்கிய Madeleine மற்றும் Marie-Liesse இருவரின் திருப்பயணம் சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவேனியா மற்றும் குரோஷியாவைக் கடந்து எருசலேமில் நிறைவுபெற்றுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த 2023-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ஆம் தேதியன்று தொடங்கி Madeleine (19) மற்றும் Marie-Liesse (22) இரண்டு சகோதரிகள் பாரிசிலிருந்து எருசலேமுக்கு ஏறத்தாழ எட்டு மாதங்கள் திருப்பயணிகளாக நடந்து சென்றுள்ளனர் என்றும் CNA  எனப்படும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் திருப்பயணம் கடவுளைக் கண்டறிவதையும், உண்மையிலேயே அவரைத் தேடுவதையும், எங்களது நம்பிக்கையை ஆழப்படுத்துவதையுமே நோக்கமாகக் கொண்டிருந்தது என்றும், கடவுளை எந்தளவுக்கு நாம் உறுதியாக நம்பலாம் என நாங்கள் கற்றுக்கொண்டோம்; எல்லாவற்றிலும் அவர் நம்மை மிகுந்த அக்கறையுடன் கவனித்துகொள்ள்கின்றார் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, நவம்பர் 2023-ஆம் ஆண்டின் மையப்பகுதியில், 24 வயதான Louis Antona என்பவர் பாரிசிலிருந்து நடைபயணமாக எருசலேமுக்குப் புறப்பட்டதாகவும், பின்னர் இம்மூவரும் அல்பேனியாவில் சந்தித்து, துருக்கி வழியாக ஒன்றாகப் பயணித்தாகவும், பின்னர் பிரிந்து எருசலேமில் மீண்டும் இணைந்ததாகவும் தங்களின் திருப்பயண அனுபவத்தை அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளனர்.

குறிப்பாகத் தனது திருப்பயண அனுபவத்தைப் பற்றி Antona கூறுகையில், இயேசு எருசலேமில் மட்டுமல்ல, எனது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள நான் 4,500 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது என்று கூறியதுடன், அவர் மொத்தம் 189 நாட்கள் நடந்து மே 18 அன்று எருசலேம் வந்தடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்தப் பயணத்தை இரந்துண்பவர்களாகத் தொடங்க முடிவு செய்தோம் என்று கூறிய மேரி-லிஸ்ஸி,  நாங்கள் ஒரு சில ஆடைகளுடன்தான் பயணித்தோம், வேறு எதுவும் இல்லை, உணவு இல்லை, பணம் இல்லை என்று கூறியதுடன், கடவுளின் பாதுகாப்பில் நாங்கள் முழுவதுமாக சரணடைய விரும்பினோம். ஒவ்வொரு மாலையும், தங்குமிடம், படுக்கை மற்றும் உணவு கேட்டு மக்களின் கதவுகளைத் தட்டினோம், ஆனால் கடவுள் எப்போதும் அதனைக் குறைவின்றி வழங்கினார் என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 June 2024, 14:18