தேடுதல்

திருப்பலி நிறைவேற்றும் டோக்கியோ உயர்மறைமாவட்ட பேராயர் Tarcisius Isao Kikuchi. திருப்பலி நிறைவேற்றும் டோக்கியோ உயர்மறைமாவட்ட பேராயர் Tarcisius Isao Kikuchi. 

டோக்கியோவின் முதல் கத்தோலிக்க ஆலயம் - 150ஆவது ஆண்டு விழா

மாறிவரும் காலச்சூழலினால் முன்பிருந்த நிலை மாறிவிட்டது, துன்பங்கள், கவலைகள் பல இருந்த போதிலும் மிகுந்த நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றார்கள். - பேராயர் கிகுச்சி

மெரினா ராஜ் – வத்திக்கான்

பலவிதமான சவால்களை இக்காலத்தில் நாம் சந்தித்துக் கொண்டிருந்தாலும் நமது நம்பிக்கையானது 150 ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் ஆலயத்தை எழுப்பிய மறைப்பணியாளர்களின் நம்பிக்கையைப் போல ஆழமாக உள்ளது என்று கூறியுள்ளார் டோக்கியோ உயர்மறைமாவட்ட பேராயர் Tarcisius Isao Kikuchi.

அண்மையில் டோக்கியோ உயர்மறைமாவட்டத்தில் உள்ள 150 ஆண்டுகள் பழமையான தூய யோசேப்பு ஆலய நூற்றாண்டு விழா திருப்பலியில் பங்கேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறியுள்ளார் டோக்கியோ உயர்மறைமாவட்ட பேராயரும், பன்னாட்டுக் காரித்தாஸ் அமைப்பின் தலைவருமான பேராயர் Tarcisius Isao Kikuchi.

மறைப்பணியாளர்கள் இந்த ஆலயத்தைக் கட்ட பெரும் சிரமங்களையும் இடர்ப்பாடுகளையும் அனுபவித்தார்கள் என்றும், வெளிநாட்டு மறைப்பணியாளர்கள் மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கைக் கொண்ட ஜப்பானிய மக்களுக்கிடையே அசைக்கமுடியாத நம்பிக்கையும், ஒத்துழைப்பும் இருக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் கிகுச்சி.

மாறிவரும் காலச்சூழலினால் முன்பிருந்த நிலை மாறிவிட்டது, துன்பங்கள், கவலைகள் பல இருந்த போதிலும் மிகுந்த நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றார்கள் என்றும் கூறிய பேராயர் கிகுச்சி அவர்கள் உக்ரைன், காசா, மியான்மார் போன்ற பகுதிகளில் அமைதி நிலவ செபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

போர் மற்றும் வன்முறையினால் நல்வாழ்வைப் புறக்கணித்து வன்முறை ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில் நம்பிக்கையின் ஒளியைப் பரப்புகின்ற ஆலயமாக தூய யோசேப்பு ஆலயம் உள்ளது என்றும், இந்த ஒளியானது பரஸ்பர உறுதி, கூட்டொருங்கிய உறவு, ஒற்றுமை, இணக்கம், மற்றும் நம்முடன் நடக்கும் இறைப்பிரசன்னத்தால் தொடர்ந்து சுடர்விடுகின்றது என்றும் கூறியுள்ளார் பேராயர் கிகுச்சி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2024, 11:55