தேடுதல்

வங்கதேச கிறிஸ்தவர்கள் வங்கதேச கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வழக்குகள் பதிவு!

சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புத் தேவை. மேலும் சிறுபான்மையினருக்குரிய உரிமைகளை வங்க தேச அரசு வழங்கினால் அவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் பெருமளவில் குறையும் : BHBCUC

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வங்க தேசத்தில் இன மற்றும் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்கள், அநீதிகள், குற்றவாளிகளுக்குத் தண்டனையின்மை ஆகியவை தொடர்கதையாகி வருவதாகக் கூறுகிறது அந்நாட்டிற்கான இந்து பௌத்த கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு (BHBCUC).

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஆசிய நாடாகிய வங்க தேசத்தில், சிறுபான்மையினருக்கு எதிராக ஏறத்தாழ 1,045 மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளதாக அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளது அவ்வமைப்பு.

ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரையிலான காலகட்டத்தில், ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 கொலை முயற்சிகள் நடந்துள்ளன மற்றும் 36 கொலை மிரட்டல்கள் விடப்பட்டன என்றும் அவ்வறிக்கை உரைக்கின்றது.

மொத்தம் 479 பேர் தாக்கப்பட்டனர், மேலும் 11 பேர் மிரட்டி பணம் பறிக்கப்பட்டனர் என்றும், வன்முறையில் 25 கூட்டு  பாலியல் வன்புணர்வுகளும் இதில் அடங்கும் என்றும் எடுத்துக்காட்டும் அவ்வறிக்கை, அதேவேளையில் 12 பேர் கடத்தப்பட்டனர், அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர் என்றும், தெய்வ நிந்தனை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு எதிரான 102 தாக்குதல்கள், நாசகார செயல்கள், கொள்ளை, தீ வைப்பு ஆகிய சம்பவங்களையும் குறிப்பிட்டுக் காட்டும் அவ்வறிக்கை,  70 முதல் 75 விழுக்காடு வன்முறை நில அபகரிப்பை மையமாகக் கொண்டது என்றும், பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் செல்வாக்கின் கீழ் மற்றும் அரசு நிறுவனங்களின் உடந்தையுடன் இவை நிகழ்த்தப்படுவதாகவும் கவலையுடன் குறிப்பிடுகிறது.

மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை மற்றும் தீவிரவாதக் குழுக்களின் செல்வாக்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டியுள்ள அவ்வறிக்கை, சிறுபான்மையினருக்கு கூடுதல் பாதுகாப்புத் தேவை என்பதையும், சிறுபான்மையினருக்குரிய உரிமைகளை அரசு வழங்கினால் இந்த வன்முறைச் சம்பவங்கள் பெருமளவில் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2024, 13:15