விடை தேடும் வினாக்கள் - யார் அடுத்திருப்பவர்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நல்ல சமாரியர் உவமையை எடுத்துரைத்தப்பின், அந்த கதையில் வரும் கள்வர் கையில் அகப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தவருக்கு உதவாமல் விலகிச்சென்ற இருவரையும், உதவிச் செய்த சமாரியரையும் பார்க்கின்றோமே இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்கும் கேள்வியை இன்றைய நிகழ்ச்சியின் விவாதத்திற்கு நாம் எடுத்துக்கொள்வோம். முதலில், இந்த உவமையை இயேசு சொல்ல வந்த பின்னணியோடு நோக்குவோம்.
திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், “போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு இயேசு, “திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?” என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ என்று எழுதியுள்ளது” என்றார். இயேசு, “சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்” என்றார். அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: “ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, ‘இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்’ என்றார்.
“கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?” என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறிஞர், “அவருக்கு இரக்கம் காட்டியவரே” என்றார். இயேசு, “நீரும் போய் அப்படியே செய்யும்” என்று கூறினார்.
இயேசுவிடம் கேள்வி கேட்பவர்கள் பெரும்பாலும் அவரை எப்படியாவது மாட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் தான் கேள்விகளைக் கேட்டார்கள். அதிலும் குறிப்பாக, மறைநூல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், பரிசேயர்கள், குருக்கள் போன்றவர்களுடைய கேள்விகள் இரண்டு சிந்தனைகளை உள்ளடக்கியனவாகவே இருந்தன.
முதலாவதாக, தங்களுடைய மறை ஆளுமையை, மத அறிவை வெளிப்படுத்த வேண்டும் எனும் நோக்கம். இரண்டாவது, இயேசுவை அவரது வாயாலேயே மாட்ட வைக்க வேண்டும் எனும் சிந்தனை. இந்த கேள்வியும் அப்படிப்பட்ட ஒரு கேள்வி தான். இங்கே கேள்வி கேட்ட நபர் திருச்சட்டத்தை அலசி ஆராய்ந்தவர். மத சட்டங்களின் சந்து பொந்துகளில் உலவியவர். அவருடைய முதல் கேள்வி “நிலைவாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்” என்பது.
யூதர்களுடைய நம்பிக்கைப்படி, நிலைவாழ்வு பெறவேண்டுமெனில் மத சட்டங்களைக் கடைபிடித்தால் போதும். இது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இயேசு என்ன சொல்கிறார் என்பதைக் கேட்பதற்காக அவர் அந்தக் கேள்வியை இயேசுவின் முன்னால் வைக்கிறார். சட்ட அறிஞருக்கு பதிலளிக்கும் விதமாக இயேசு சட்டத்தின் வழியிலேயே சென்று ஒரு கேள்வியைக் கேட்கிறார். “திருச்சட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறது?” என்பதே அந்த கேள்வி. முதலில் கேள்வி கேட்டவருக்கு இயேசுவின் கேள்வி எளிதான ஒன்று என்பதால் சட்டென சொல்லி விடுகிறார் பதிலை. எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி, உன்னைப் போல உனக்கு அடுத்திருப்பவனை நேசி. அது தான் திருச்சட்டத்தின் சாரம்சம் என்கிறார்.
சரியாகச் சொன்னாய். அப்படியே செய், உனக்கு நிலைவாழ்வு கிடைக்கும் என்றார் இயேசு.
எல்லாவற்றுக்கும் மேலாக, இறைவனை நேசிப்பவன், மனிதனை நேசிக்காமல் இருக்க முடியாது. “என்னை நேசிப்பவன் என் கட்டளைகளைக் கடைபிடிப்பான்” என்பதே இயேசுவின் வாக்கு. இறைவனின் கட்டளைகள் மனிதனை அன்புசெய்வதில் தான் நிறைவு பெறுகின்றன.
கேள்வி கேட்டவருக்கு அத்துடன் திருப்தி வரவில்லை. தான் எல்லாவற்றையும் கடைப்பிடித்துவருவதாக அவருக்குள் இருந்த தற்பெருமை, அடுத்த கேள்வியாக உருவெடுக்கிறது. “யார் எனக்கு அடுத்திருப்பவன்”, எனது அயலான் யார்? யார் எனக்கு பிறன்? என்ற கேள்வியை அவர் முன்வைக்கும்போதுதான் இயேசு இந்த உவமையைச் சொல்கிறார். சொல்லி முடித்ததும், இயேசு கேள்வியை திருப்பிக் கேட்கிறார். அடிபட்டவனுக்கு யார் அயலான்? என கேட்கப்பட, “அவனுக்கு இரக்கம் காட்டியவனே” என்கிறார் திருச்சட்ட வல்லுநர். அவருடைய வாயில் ‘அந்த சமாரியன்’ எனும் வார்த்தையே வரவில்லை. அந்த அளவுக்கு வெறுப்பு அவருக்குள் இருந்தது. சமாரியரும் அடிபட்டுக் கிடக்கும் யூதரும் இனத்தால் பகைவராக இருந்ததை யோவான் நற்செய்தியில் (யோவா 4:9; 8:48) காண்கிறோம்.
இறுதியாக, திருச்சட்ட வல்லுநரின் பதிலுக்கு இயேசு கூறும் வழிகாட்டுதலோ, “நீயும் போய் அவ்வாறே செய்” என்பதாகும்.
''நல்ல சமாரியர்'' பற்றி இயேசு கூறிய கதையில் வருகின்ற பாத்திரங்களாகிய குருவும் லேவியரும் அக்கால யூத சிந்தனையைப் பிரதிபலிக்கின்றனர். இவர்கள் சமய சம்பிரதாயத்தைக் காரணமாகக் காட்டி, இரக்கத்திற்கு முற்றுப்புள்ளி இட்டவர்கள்.
அந்த வழியே வந்த சமாரியர் ஒருவர் குற்றுயிராகக் கிடந்த மனிதன் மீது இரக்கம் கொள்கிறார். இவ்வளவு அக்கறையோடு செயல்பட்ட சமாரியர் யார்? அவர் யூத குருவுமல்ல, லேவியரும் அல்ல, சாதாரண யூதரும் அல்ல. மாறாக, எல்லா யூதர்களாலும் தாழ்ந்தவர் எனக் கணிக்கப்பட்டவர் அந்த சமாரியர். அக்காலத்தில் சமாரியருக்கும் யூதர்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்கவில்லை. அந்நிலையிலும் அந்த சமாரியர் குற்றுயிராகக் கிடந்த மனிதர்மீது இரக்கம் கொண்டு, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார். யார்யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். இந்த உண்மையை வாழ்க்கையில் காட்டியவர் நல்ல சமாரியர்.
ஆண்டவர் இயேசு எல்லாரையும் நல்ல சமாரியராக மாற அழைக்கிறார். ஆனால் அனைவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில்லை.
இயேசுவின் காலத்திலிருந்து இன்றுவரையிலும் உள்ள பெரிய பிரச்சனையே அயலான் யார் என்ற தெளிவு இல்லாததுதான். அருகில் இருப்பவன் எல்லாம் அயலான் அல்ல. தேவையில் இருப்பவன் அயலான். சமூகம், பொருளாதாரத்தால் தாக்குண்டு தவிக்கும் மனிதன் அயலான். கொள்ளை, கொலை, வன்முறையால் பாதிக்கப்பட்டவன் அயலான். அநீதியாலும் சாதியத்தாலும் நசுக்கப்பட்ட மனிதன் ஓர் அயலான். தனிமையில் வாடுவோர், அனாதைகள், ஆதரவற்றோர் அனைவரும் அயலானே. இன்று இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றார்கள்; மனித மாண்பு மறுக்கப்பட்டு, உரிமைகள் மீறப்பட்டு, இழிவாக நடத்தப்படுகிறார்கள். இவர்கள் எல்லாருமே நமக்கு அடுத்திருப்பவர்கள்தாம். அப்படியென்றால், இயேசு அறிவித்த அன்புக் கட்டளையின் பொருள் என்ன? ''உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக'' என்னும் கட்டளையைக் கடைப்பிடிக்க அனைவருக்கும் கடமை உண்டு. யாருக்கு அன்புகாட்டுவது என்றொரு கேள்வி எழுப்புவதே முறையல்ல, ஏனென்றால் அன்பின் அரவணைப்பிலிருந்து விலகிநிற்போர் அல்லது விலக்கப்பட்டோர் ஒருவர்கூட இவ்வுலகில் இருக்கமுடியாது, இருக்கவும் கூடாது. எங்கு மனிதர் உள்ளனரோ அங்கு அன்புக் கட்டளை செயல்படுத்தப்பட வேண்டும். அக்கட்டளைக்கு விதிவிலக்கு கிடையாது. எனினும், சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டோர் நமது தனி அன்புக்கு உரித்தானவர் என்பது இயேசு நமக்கு அளிக்கின்ற போதனை. தன்னலம் கோலோச்சுகின்ற நம் சமுதாயத்தில் இது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. நம் கண்ணெதிரே உதவிக்காகத் தவிப்போர் எவராக இருந்தாலும், அருகில் சென்று நம்மால் முடிந்த உதவிசெய்யும்போது, கடவுளின் இரண்டாம் கட்டளையாகிய, உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக என்பதை நிறைவேற்றுகிறோம். தேவையில் இருக்கும் நபருக்கு உதவுபவனே அடுத்திருப்பவன். அதாவது இதயங்களால் அடுத்திருக்க வேண்டும், உடலாலோ, நில எல்லைகளாலோ அடுத்திருப்பதில் எந்த பயனும் இல்லை. மனித நேயத்தை மறுதலிக்கும் விடயங்களில் இறைவன் இருப்பதில்லை.
அடிபட்டுக் கிடந்தவனுடைய மதம், இனம், குலம், கோத்திரம் எதுவுமே சமாரியனுடைய மனதில் எழவில்லை. தன்னைப் போல அவனும் ஒரு மனிதன் எனும் சிந்தனையே அவனிடம் இருந்தது. அதுவே மனிதநேயப் பணிகளின் முக்கியமான தேவை. பிறரை நிராகரித்துவிட்டு நாம் விண்ணகம் செல்ல முடியாது.
குருவும், லேவியரும் அடிபட்டுக் கிடந்தவனுக்கு உதவிசெய்யாமல் போனதற்கு முக்கியக் காரணம், கண்டுகொள்ளாத் தன்மை. யாரும் எப்படியும் இருந்துவிட்டுப் போகிறார்கள், நாம் நம்முடைய வழியில் செல்வோம் என்று கண்டுகொள்ளாத மனநிலையில் அவர்கள் இருந்திருக்கலாம். அதனால்தான் அவர்கள் உதவி செய்யாமல் செல்கின்றார்கள். பலநேரங்களில் நாமும்கூட இத்தகைய ஒரு கண்டுகொள்ளாத மனநிலையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறோம், அல்லது தேவையில் இருப்பவர்களைப் புறக்கணித்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது ஓர் உண்மையான கிறிஸ்தவ மனநிலையாகாது. இயேசு சொல்லக்கூடிய உவமையில் வரும், எருசலேமிலிருந்து எரிக்கோ நோக்கிச் செல்லும் மனிதரை இந்தச் சமூகம் என எடுத்துக்கொண்டால், அவருடைய ஆடையை எப்படிக் கள்வர்கள் உரிந்துகொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்களோ, அதுபோன்று இந்த சமூகத்திலுள்ள மக்களிடமிருந்து, அதுவும் வறிய, எளிய மக்களிடமிருந்து இருப்பதையும் பறித்துக்கொண்டு போக அரசியல்வாதிகள் தொடங்கி, பன்னாட்டு நிறுவனங்கள் வரை எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்கள். இவர்களைப் போன்று நாம் மக்களுடைய இரத்தத்தையும் உழைப்பையும் உறிஞ்சி வாழும் அட்டைகளாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மறைநூல் அறிஞர்கள் கைம்பெண்களின் வீடுகளை அபகரித்தார்கள்; வரிதண்டுபவர்கள் மக்களிடமிருந்து பணத்தையெல்லாம் பிடுங்கினார்கள். இவர்களைப் போன்றும் நாம் இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்ப்பது நமது கடமையாகும்
உவமையில் வருகின்ற இரண்டாவது வகையான மனிதர்கள், குருவும் லேவியரும். இவர்கள் சக மனிதரை விட சமயமே பெரிதென்று நினைத்து வாழக்கூடியவர்கள். இங்கு சமயக் கடமைகள் வேண்டாம் என்று அர்த்தமில்லை. மாறாக, அடிபட்டுக் குற்றுயிராய்க் கிடப்பவர்க்கு அந்த நேரத்தில் உதவி செய்யாமல் வேறு எந்த நேரத்தில் உதவிசெய்ய முடியும்!
நீரும் போய் அப்படியே செய்யும்" (லூக் 10, 37) என்பது இயேசு இறுதியாக நமக்குத் தரும் கட்டளை. அதாவது, இறையன்பு, பிறரன்பு ஆகிய நியமங்கள், வெறும் மனப்பாடக் கட்டளைகளாக, சிந்தனைகளாக இருப்பதில் பயனில்லை; அவை செயல்வடிவம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தவே, இயேசு இவ்வுவமையின் துவக்கத்திலும், இறுதியிலும் "நீர் அப்படியே செய்யும்" (10: 28,37) என்ற சொற்களை நம்முன் ஒரு சவாலாக வைக்கிறார். இறையன்பால் மட்டும் ஒருவர் கடவுளின் கட்டளையை நிறைவு செய்தவர் ஆக முடியாது; இறையன்போடு பிறரன்பும் இணையும்பொழுதுதான் கடவுளின் கட்டளைகள் ஒருவரது வாழ்வில் நிறைவு செய்யப்படுகின்றன என்பதை இயேசு தெளிவு படுத்துகிறார். அன்பின் எதிர்பதம் வெறுப்பு அல்ல, "அக்கறையின்மை". ஒரு பிறரன்பு செயலை ஒதுக்கி தள்ளுதல், ஒரு துன்பத்திலிருந்து விடுபட பிறருக்கு ஏதாவது செய்ய வேண்டிய நேரத்தில் ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது, அக்கறையின்றி செயல்படுவது என்பவைதான் அன்பின் எதிர் செயல்கள் ஆகும்.
எந்த அளவிற்கு, நாம் கடவுளை அன்பு செய்கிறோம் என்பதற்கான பதில், நாம் எவ்வளவு தூரம் மற்றவர்களுக்காக நம்மையே தியாகம் செய்கிறோம் என்பதைப் பொறுத்தது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்