தடம் தந்த தகைமை - சிறு பிள்ளைகளை ஏற்பது
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்றார் இயேசு (மாற் 9:37).
இயேசுவின் குழுமத்தில் வாழ்வோர் தன்னகம் கொண்டிருக்க வேண்டிய மேலான குணங்களுள் ஒன்று குழந்தை மனம். ஏனென்றால் குழந்தைகள் பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள். சேர்ந்து வாழ, பழக, விளையாட விரும்புபவர்கள். எளிதில் சோர்ந்து போகா மனநிலை கொண்டவர்கள். உள்ளதை உள்ளவாறு உரைப்பவர்கள். பழிவாங்குதல், பாசாங்கு, பகட்டு, பொறாமை என்பவற்றை அறியாதவர்கள். இந்தக் கறைகள் தீண்டாத வெள்ளை மனச் சொந்தங்கள்தாம் எளிதாய் இயேசுவோடும் இறையாட்சியோடும் ஒட்டிக்கொள்ள முடியும்.
இங்கே, இயேசு குறிப்பிடும் சிறு பிள்ளைகள் வெறுமனே பருவ ரீதியிலானவர்களை மட்டுமன்று. சமூகத்தில் சாதி – சமயத்தால், சட்ட– திட்டங்களால், நிற– மொழியால், உடல்- உள்ளத் திறனால், பணம்- பலத்தால், ஆண்- பெண் பாகுபாட்டால் சிறுமைப்படுத்தப்பட்டவர்களை ஏற்பது இயேசுவை ஏற்பதாகும். ஏனெனில் மேல்தட்டிலிருந்து மட்டம் தட்டி, அடிமட்டத்தில் தள்ளப்பட்டவர்களின் விடுதலை வாழ்வே அவரது கனவாக இருந்தது. இன்று நம்மிடையே குழந்தை மனம் கரைந்து குழந்தைத்தனமே குலாவுகிறது. நம் செயல்பாடே நம் குணத்தின் மணம்.
இறைவா! எந்த நிலைக்கு வந்தாலும் நீர் தந்த குழந்தை மனதை இழக்காது வாழும் வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்