தேடுதல்

ஈசபேலின் இறந்த உடலை உண்ணும் நாய்கள் ஈசபேலின் இறந்த உடலை உண்ணும் நாய்கள் 

தடம் தந்த தகைமை - ஈசபேல் கொலை செய்யப்படல்

“திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே; இஸ்ரயேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஏகூ இஸ்ரயேலுக்கு வந்து சேர்ந்ததைக் கேள்வியுற்ற ஈசபேல் தன் கண்களுக்கு மையிட்டு தன் தலைமுடியை அழகுபடுத்திக் கொண்டு பலகணி வழியாக எட்டிப் பார்த்தாள். ஏகூ நகர வாயிலில் நுழைந்த போது அவள், “உன் தலைவனைக் கொலை செய்து, சிம்ரிக்கு நிகர் ஆனவனே! சமாதான நோக்கோடுதான் வருகிறாயா?” என்று கேட்டாள். அவன் முகத்தை உயர்த்தி பலகணியைப் பார்த்து, “என் சார்பாக இருப்பது யார்? யார்?” என்றான். உடனே இரண்டு, மூன்று அண்ணகர் குனிந்து அவனைப் பார்த்தனர். ஏகூ, “ அவளைக் கீழே தள்ளிவிடுங்கள்” என்றான். அவ்வாறே, அவர்களும் அவளைத் தள்ளிவிட்டனர். அவளது இரத்தம் மதிற்சுவரிலும் குதிரைகள் மீதும் சிதறியது. மேலும், அக்குதிரைகள் அவளைக் காலால் மிதித்துக் கொன்றன.

அவன் உள்ளே சென்று உண்டு குடித்தபின், “நீங்கள் போய் அந்தச் சபிக்கப்பட்டவளைத் தகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யுங்கள். ஏனெனில், அவள் ஓர் அரசன் மகள்” என்றான். அவர்கள் அவளை அடக்கம் செய்யச் சென்றபோது அவளுடைய மண்டைஓடு, கால்கள், உள்ளங்கைகள் தவிர வேறொன்றையும் அவர்கள் காணவில்லை. எனவே, அவர்கள் திரும்பி வந்து அதை அவனுக்கு அறிவித்தனர். அப்பொழுது அவன், “திஸ்பேயைச் சார்ந்தவரும் தம் ஊழியருமான எலியாவின் வழியாக ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே; இஸ்ரயேல் நிலப் பகுதியில் ஈசபேலின் உடலை நாய்கள் தின்னும். ஈசபேலின் பிணம் இஸ்ரயேல் நிலப்பகுதியில் சாணத்தைப் போன்று கிடப்பதைப் பார்த்த எவருமே ‘இதுதான் ஈசபேல்’ என்று கூற முடியாது” என்றான்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2024, 09:49