தடம் தந்த தகைமை - அவர் என் சீடர் என்பதால்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் (மத் 10:42) என்றார் இயேசு.
யார் சிறியவர்? வயதிலும், உயரத்திலும் குறைந்தோரல்லர் சிறியவர். சமூகத்தில் சிறுமைப்படுத்தப்பட்டோரே சிறியவர். சாதிக் கயமையால், சமயக் காழ்ப்புணர்வால், குடும்பப் பிரிவினையால், மொழிச் சார்பால், நிறவெறித்தனத்தால், பால் பாகுபாட்டால், திறன் குறைவால் ஒருவர் பொதுவெளியிலிருந்து புறந்தள்ளப்படுகையில் இயேசுவின் சிந்தனைப்படி அவர் சிறியவர். அவ்வாறு புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும், உறவுக்கரம் நீட்டுவதும் அவர்தம் சீடராம் நம் கடமை.
கொரோனா காலத்து முதல் கட்ட ஊரடங்கு. மிகக் கடுமையான சட்டங்களால் ஊர்ப்புற ஏழையர் உணவுக்கு ஊசலாடினர். மிகவும் பாதிக்கப்பட்ட ஏழையரின் வீடு தேடி இரவு நேரத்தில் அரிசி, மளிகை, காய்கறி எனப் பகிர்ந்து வந்தோம். மறுநாள் முன்பின் தெரியாத ஓர் இந்துச் சகோதரி என்முன் வந்து நன்றி சொல்லி நின்றார். நான் புரியாமல் விழித்தபோது, நேற்று நீங்கள் கிறிஸ்தவ வீட்டுக்குக் கொடுத்ததில் எனக்கும் பங்கு கிடைத்தது என்று விழிநீர் வழிய கைகூப்பினார். அவரது நன்றி பல பாடங்களைக் கற்பித்தது. அடுத்தக்கட்ட ஊரடங்கில் ஊரில் வாழும் எல்லாருக்குமாக உதவி நீண்டது. எதையும் எதிர்பாராமல் அடுத்தவருக்கு வழங்குவதே உண்மையான தர்மம்.
இறைவா! நான் பெற்ற வாழ்வு பிறரைக் கெடுக்க அல்ல, கொடுக்கவே என்பதை உணர்ந்து உரியதை, உரியவருக்கு உரிய நேரத்தில் ஈந்து வாழ நீதி மனம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்