தேடுதல்

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து  

தடம் தந்த தகைமை - எல்லாம் இடிக்கப்படும்

எருசலேம் கோவில் கி.மு. 19இல் 1000 குருக்கள் கொத்தர் பயிற்சி பெற்று 10000 பணியாட்களோடு, பற்பல கலைநுணுக்கங்களோடு யூதக் கலாச்சாரச் சின்னமாக எழுப்பப்பட்டது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எருசலேம் கோவிலைப்பற்றி இயேசுவின் சீடர், போதகரே எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும், என்றுரைக்க, இயேசுவோ, இந்த மாபெரும் கட்டங்களைப் பார்க்கிறீர் அல்லவா? இங்கு கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் (மாற் 13:1&2) என பதிலுரைக்கிறார்.

எருசலேம் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியது. மண்ணகத்தில் இறைஉறைவிட மையமாக, உடன்படிக்கைப் பேழையின் பேணிடமாக, எல்லா மாந்தரின் திருப்பயணத் திருத்தலமாகத் துலங்க வேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டது. கி.மு. 19-இல் பெரிய ஏரோதுவின் ஆணைப்படி 1000 குருக்கள் கொத்தர் பயிற்சி பெற்று 10000 பணியாட்களோடு, பற்பல கலைநுணுக்கங்களோடு யூதக் கலாச்சாரச் சின்னமாக எழுப்பப்பட்டது.

தகனப் பலிப்பீடம், கருவறை, குருக்கள் பகுதி, இஸ்ரயேல் முற்றம், பெண்கள் முற்றம், பிற இனத்தார் முற்றம், மண்டபங்கள் எனப் பல இடப் பிரிவுகள் கொண்டது. அழகு வாயில், அலங்கார வாயில், நிக்கனோர் வாயில் உட்பட 9 வாயில்களோடும் தங்கத் தகடுகள் வேயப்பட்ட கோபுரங்களோடும் பிரமாண்டமாக உயர்ந்து நின்றது. கோயிலைப் பற்றிப் பேசுவதையும், அதற்கென வரி செலுத்துவதையும் பெருமையாகக் கருதினர். அது இடிபடும் என இயேசு சொன்னார். அவ்வாறே கி.பி. 70-ல் உரோமையரால் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது. இன்றும் ஏழையர் சூழ்ந்திருக்க, பல கோடியில் வானுயரக் கட்டப்படும் கோயில்களும், அதன் கல்வெட்டுகளும், அதைப் பற்றிய கண்ணீர்க் கதைகளும் எத்தனை ஆண்டுகட்கோ! இதயத்திற்கு மேலான கோயில் இகமுண்டோ!

இறைவா! இதயமே நீர் விரும்பி வாழும் கோயில். அதைத் தூயதாய்க் காக்க வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 14:03