தேடுதல்

இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து  

தடம் தந்த தகைமை - பழைய ஆடையில் புதிய துணியை

தமது அணுகுமுறைகள், பார்வைகள், திட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் புதியதாக்கி, புதியனவற்றைப் புதிய மனநிலையோடு எதிர்கொள்ள அறைகூவல் விடுத்தார் இயேசு.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” (மத் 9,16-17)என்றார் இயேசு.

இயேசு ஒரு சமயவாதி அல்லர், இயக்கவாதி. பழமைக்குள் பாழ்பட்டுக் கிடந்த யூத சமூகத்தின் பிற்போக்குத் தனங்களையும் அதன் பக்க விளைவுகளையும் கூர்ந்து பார்த்தார். அதனை நினைத்து வேதனைப்பட்டுக் கொண்டோ, அங்குமிங்குமாகப் பிதற்றிக்கொண்டோ, அவற்றை எதிர்க்க யாரோடு கூட்டுச் சேர்ந்து எப்படியெப்படித் தீர்த்துக்கட்ட வேண்டுமென்றோ எண்ணவில்லை. தமது அணுகுமுறைகள், பார்வைகள், திட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் புதியதாக்கி, புதியனவற்றைப் புதிய மனநிலையோடு எதிர்கொள்ள அறைகூவல் விடுத்தார்.

ஏராளமான உவமைகளை எதார்த்தமாக எடுத்துக்கூறும் பாணிதனை இயேசு கையாண்டார். அதில் இரண்டைக் குறிப்பிட்டால், 1. பழைய ஆடை – புதிய துணி, 2. பழைய தோற்பை – புதிய திராட்சை மது. அவரது இந்த உவமைகள் துணியையோ மதுவையோ பற்றியதல்ல. மாறாக, அச்சமூகத்தை அமுக்கி மூடி வைத்திருந்த பழைமை வாய்ந்த சட்ட, சம்பிரதாய, சடங்குகளோடு தான் சொல்லும் புதிய இறையாட்சி விழுமியங்களையும் ஒட்டுப்போட வேண்டாம் என்கிறார். ஒரு சமூகப் புதுப்பித்தலின் தேவையை சாதுர்யமாகச் சொல்லும் இயேசுவின் பாங்கு மிக அழகானது. பல நேரங்களில் நமக்கு என்ன தேவையென்று நமக்கே தெரிவதில்லை.

இறைவா! பழமையிலே நான் தேங்கிக் கிடக்காமல் என்னையும் என்னோடு வாழ்வோரையும் தினம்தினம் புதுப்பித்துக் கொள்ளும் மனம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2024, 11:32