தேடுதல்

உப்பு தயாரிப்பு உப்பு தயாரிப்பு 

தடம் தந்த தகைமை - மண்ணுலகிற்கு உப்பு நீங்கள்

உப்பின் அர்ப்பணம் சுவையாய், இழப்பாய், பாதுகாப்பாய், தியாகமாய், அடையாளமாய்ப் பொருள் கொடுப்பதுபோல் நம் வாழ்வும் அமைந்திடல் வேண்டும்.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது (மத் 5:13), என்றார் இயேசு.

பல்வேறு தன்மைகளைத் தன்னுள் கொண்டதே உப்பு. ஆகவே அது பல நன்மைகளைச் செய்கின்றது. உப்பு உணவிற்குச் சுவையூட்டி பொருட்களைக் கெடாமல் பாதுகாக்கிறது. மரம், செடிகளுக்கு நல்ல உரம். பிறந்த குழந்தையை உப்பினால் தேய்ப்பது யூத மரபு (எசே 16:4). எலிசா இறைவாக்கினர் கெட்டுப்போன தண்ணீரை உப்பிட்டு நன்றாக்கிய நிகழ்வும் (2அர 2:19-22) நாமறிவோம். எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரயேல் மக்கள் இறைவனோடு செய்த உடன்படிக்கையின் நினைவாக பலிப்பொருளோடு சிறிது உப்பிட்டு பலி நிறைவேற்றினர் (லேவி 2:13). ஆக, உப்பு உயிர் கலந்த பொருளாகிவிட்டது.

கடவுளின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் உப்பின் இழப்புத் தன்மையை தங்களுள் கொண்டு வாழ்வதற்கான அழைப்பு இங்கே இயேசுவால் விடுக்கப்படுகின்றது. உப்பின் அர்ப்பணம் சுவையாய், இழப்பாய், பாதுகாப்பாய், தியாகமாய், அடையாளமாய்ப் பொருள் கொடுப்பதுபோல் நம் வாழ்வும் அமைந்திடல் வேண்டும். இத்தகு அர்ப்பண மனநிலையற்றோர் சாரமற்ற உப்புக்கு ஒப்பாவர். அவர்கள் வாழ்ந்தும் வீண்.

நேரம் மதித்து, நேர்மையாக, நேயமாகச் செய்யும் பணிகளால் நாம் உப்பாகிறோம். பிறர் வாழ்வுக்கும் உப்பு சேர்க்கிறோம்.

இறைவா! உப்பின் உட்பொருள் உணர்ந்து உயிருள்ளவரை வாழ என்னுள் உப்பாய் சேரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 July 2024, 13:34