தடம் தந்த தகைமை - இப்போது சிரித்து இன்புறுவோரே
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இப்போது உண்டு கொழுந்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் , பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், துயருற்று அழுவீர்கள் (லூக் 6,25) என்றார் இயேசு.
'முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும்' என்பது பழமொழி மட்டுமன்று, இயற்கையின்
நியதியும் கூட. தான் உண்டு கொழுக்க வேண்டுமென்ற தன்னல மனதோடு, பெற்றதை ஏழையரோடு பகிராமல் வாழ்வது பாவம். தானும் தன் தலைமுறையும் சொகுசாக வாழ, தன் ஊழியருக்கு உரிய ஊதியம் வழங்காமலிருப்பதோ, சுரண்டுவதோ, காலம் தாழ்த்துவதோ, ஏமாற்றுவதோ பாவத்திலும் கேடானது. அது நாளைய தலைமுறைக்கு அவர் சேர்த்து வைக்கும் தீவினை.
ஏழையர் அழ, செல்வர் சிரிக்கும்போது கடவுள் கதறி அழுவார். ஏனெனில் நம் கடவுள் ஏழையர் சார்பானவர். அவர் வடிவில் வாழும் ஏழையரைக் கண்டுகொள்ளாமல் உண்டு கொழுப்பதும், அக்களித்து ஆர்ப்பரிப்பதும் மனித அவமதிப்பு மட்டுமன்று, இறைநிராகரிப்பு.
மகிழ்வாருடன் மகிழ்ந்து அழுவாருடன் அழுது (உரோ 12:15) மனிதாபிமான மனிதராக வாழ்பவரே உண்மையான மனிதர். ஏனையோர் மனித உருக்கொண்ட மண்கட்டிகள்.
வாழ்வில் எதைப் பகிருகிறீர்கள் என்பதுதான் எதைப் பெறுகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.
இறைவா! உம் பரிவின் பார்வைகள் எனக்கு இல்லையெனில் நான் பார்வையற்றுப் போவேனாக.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்