தடம் தந்த தகைமை - இன்று தேவையான உணவு
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும் (மத் 6:11) என வானகத்தந்தையை நோக்கி செபிக்க கற்றுக்கொடுத்த செபத்தில் விண்ணப்பதை முன்வைத்தார் இயேசு.
ஒவ்வொரு மனிதரின் அன்றாட அடிப்படைத் தேவை உணவு. உணவின்றி உயிர் வாழ்வு இல்லை. ஆனால் அடிப்படை உணவுக்காக மனிதர்கள் போராட வேண்டியுள்ளது. உழைப்பிலிருந்து, விளைச்சலிலிருந்து, உற்பத்தியிலிருந்து பெறும் உணவு சிலரால் பதுக்கப்படுகின்றது. மனித குலத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் தயார் செய்த பின்னரே கடவுள் மனிதரைப் படைத்தார். ஆனால் தன்னலம் மிகுந்திட ஒரு மனிதருக்குரிய உணவு இன்னொரு மனிதனால் பதுக்கப்படுவதும், பறிக்கப்படுவதுமாயிற்று. இது மாபாதகமன்றோ!
ஏழைகள் பட்டினியில் புரள்வதும் செல்வந்தர்கள் செரிக்காமல் புரள்வதும் இன்றைய உலகின் நிலை. கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் 1 இலட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு வீணாக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் உலக உணவு உற்பத்திக் கழகத் தகவலின்படி இந்தியாவில் 21 கோடி பேர் ஒருவேளை மட்டும் உணவு உண்டு ஒவ்வொரு நாளையும் கடத்துகின்றனர். உணவுக்கு முன் இருந்துகொண்டு உணவு பெறாத ஏழையரையும் நினைவுகூரத்தானே இயேசு உணவானார் நற்கருணை வடிவிலே. உணவைப் பகிர்வதும், பசியைத் தீர்ப்பதும் கடவுளின் கரங்களாகச் செயல்படுவதாகும்.
இறைவா! ஒவ்வொரு பருக்கையும், ஒவ்வொரு துளி நீரும் உம் அன்பின் அருள்கொடை. அதை நன்றியோடு பகிரவும் உண்ணவும் வரம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்