தடம் தந்த தகைமை - துயருறுவோர் பேறுபெற்றோர்
அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் ஆறுதல் பெறுவர், என மொழிந்தார் இயேசு (மத் 5,4).
ஆசையே துன்பத்திற்குக் காரணம் என போதித்தார் போதி மர நிழலில் ஞானம் பெற்ற புத்தர்பிரான். ஆனால் அகம் ஆசைகளின்றி வாழினும் புறம் வாழும் மனிதர்களால் ஒருவர் துன்பத்திற்கு ஆளாகும் நிலை இன்று அதிகமாக உள்ளது. யூத சமூகத்தில் ஆதிக்கவாதிகளோடு ஒத்துப்போனால் அத்தனையிலும் ஆஹா! ஓஹோ! என வாழலாம். அங்கு அரங்கேறிக் கொண்டிருந்த அராஜகப் போக்குகளை ஆட்சேபித்தால் துயரமும் தூக்கி எறிதலும், துகிலுரிந்து சிலுவையில் அறைதலுந்தான் நிகழும் என்பதை நீதிச் சார்புடையோர் புரிந்திருந்தனர்.
துணிவுடன் சந்திக்கப்படும் துன்பம் தூர ஓடிவிடும். இயேசுவின் காலத்தில், தங்களது இயலாமை, வறுமை, நோய் என்பவற்றால் துயரப்பட்டு அழுதவர்களைவிட சமூக, சட்ட, சமய, அரசியல் நிலைகளில் அடிமைப்படுத்தப்பட்டதால் அழுதவர்களே அதிகம். அவர்களுக்கான ஆறுதல் என்பது அமைதியாகிப் போகுதலோ, அடங்கிக் கிடத்தலோ அன்று. மாறாக, அத்தகு அநீத அடிமைத்தனங்களுக்கு மாற்றாக சமூக–சமய அரசியல் நிலைப்பாடுடன் கூடிய ஓர் இயக்கமாகுதல்.
பல வேளைகளில் சிறிய துன்பங்கள் பேசுகின்றன, பெரிய துன்பங்கள் மௌனமாக இருக்கின்றன.
இறைவா! பிறருக்காகத் துயரப்படுதல், உம் மீட்புப் பணியில் துணையாதல் என தயங்காமல் ஏற்று பணியாற்றும் பக்குவம் தாரும்.
(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்