தடம் தந்த தகைமை - கொலை செய்யப்பட்ட இஸ்ரயேல் அரசன் யோராம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இஸ்ரயேலின் காவல்மாடத்தில் நின்று கொண்டிருந்த காவலன், ஏகூ படையோடு வருவதைக் கண்டு, “படையொன்றைக் காண்கிறேன்” என்றான். அதற்கு யோராம், “ஒரு குதிரை வீரனைத் தயார் செய். அவனை அவர்களைச் சந்திக்குமாறு அனுப்பு. ‘அமைதிக்காவா?’ என்று அவன் கேட்கட்டும்” என்றான். அவ்வாறு, குதிரை வீரன் ஒருவன் ஏகூவைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்று, “‘அமைதிக்காகவா?’ என்று அரசர் கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு ஏகூ, “சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா” என்றான். அப்பொழுது காவலன், “தூதன் அவர்களைச் சென்றடைந்தான். ஆனால், இன்னும் திரும்பி வரவில்லை” என்று அறிவித்தான். அரசன் மற்றொரு குதிரை வீரனை அனுப்ப, அவன் அவர்கள் முன்பாக வந்து, “‘அமைதிக்காகவா?’ என்று அரசர் கேட்கச் சொன்னார்” என்றான். அதற்கு ஏகூ, “சமாதானம் பேசுவதற்கு நீ யார்? திரும்பி என் பின்னே வா” என்றான். காவலன் மீண்டும் “அவன் அவர்களைச் சென்றடைந்துவிட்டான். ஆனால், அவனும் இன்னும் திரும்பி வரவில்லை. வேறெவனோ தேரோட்டிக் கொண்டு வருகிறான். அது நிம்சியின் மகன் ஏகூவைப்போன்று உள்ளது. அவன்தான் பைத்தியக்காரன் போல் ஓட்டுவான்!” என்றான்.
உடனே யோராம், “தேரைப் பூட்டுங்கள்” என்று கூற, அவர்கள் அவனது தேரில் குதிரைகளைப் பூட்டினார்கள். இஸ்ரயேலின் அரசன் யோராமும் யூதாவின் அரசன் அகசியாவும் தம் தேரில் ஏறி ஏகூவைச் சந்திக்கச் சென்றனர்; அவனை இஸ்ரயேலைச் சார்ந்த நாபோத்தின் நிலப்பகுதியில் சந்தித்தனர். யோராம் ஏகூவைக் கண்டு, “ஏகூ! அமைதிக்காகவா வருகிறீர்?” என்று கேட்டான். அதற்கு அவன், “உன் தாய் ஈசபேலின் வேசித்தனமும் மாய வித்தைகளும் மிகுந்திருக்கும் வரை அமைதி எப்படி இருக்க முடியும்?" என்று மறுமொழி கூறினான். உடனே யோராம் கைகளால் கடிவாளத்தை இழுத்து, அகசியாவை நோக்கி, “அகசியா! சதி!” என்று சொல்லிக்கொண்டு தப்பி ஓட முயன்றான். உடனே ஏகூ தன் வலிமையோடு வில்லை வளைத்து யோராமின் புயங்கள் நடுவே அம்பினை எய்தான். அந்த அம்பு அவன் இதயத்தை ஊடுருவிச் செல்ல, அவன் தேரிலேயே சரிந்து விழுந்தான்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்