தேடுதல்

காங்கோ மற்றும் சூடான் ஆயர்கள் காங்கோ மற்றும் சூடான் ஆயர்கள்  (Vatican Media)

நாட்டில் போர் நிறுத்தப்பட சூடான் ஆயர்கள் விண்ணப்பம்

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மோதல்கள் துவங்கியதிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் ஒரு கோடி சூடான் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

சூடானில் ஆயுதம் தாங்கிய குழுக்கள் போரை நிறுத்த மறுத்து மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதால், மனிதாபிமான நெருக்கடிகளை மனதில்கொண்டு அமைதிக்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என சூடான் ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

சூடான் நாட்டைத் துண்டுபோட்டுக் கொண்டிருக்கும் இந்த கொடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சூடான் மற்றும் தென்சூடான் ஆயர்கள் தொடர்ந்து விண்ணப்பித்துவரும் வேளையில், அந்நாட்டில் பரவலாகக் காணப்படும் வன்முறை மற்றும் பகைமை உணர்வுகள் குறித்து மக்களே பெருமளவில் அதிர்ச்சியடைந்து வருவதைக் காணும்போது, தாங்களும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

சூடானில் போரிட்டுவரும் இருதரப்பினரிடையே இடம்பெறும் மோதல்களுக்கு முடிவு என்பது கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை எனக்கூறும் ஆயர்கள், போரிடும் தரப்பினரின் முரட்டுப் பிடிவாதமே இதற்குக் காரணம் எனவும் கவலையைத் தெரிவித்துள்ளனர்.

சூடானின் தலைநகரான Khartoum கடந்த ஓராண்டிற்கு மேலாக மோதல்களை சந்தித்து வருவதையும் சுட்டிக்காட்டும் ஆயர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மோதல்கள் துவங்கியதிலிருந்து இதுவரை குறைந்தபட்சம் ஒரு கோடி சூடான் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதாகக் கூறும் ஐ.நா.வின் அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சூடானில் நடந்துகொண்டிருப்பது இரு சுயநலக்குழுக்களிடையேயான போர் எனவும் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் சூடான் ஆயர்கள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2024, 15:45