பூர்வீகக் குடியினருடன் ஒப்புரவு பாதையில் தலத்திருஅவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கானடா நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணம் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி, குணப்படுத்தல் மற்றும் ஒப்புரவை நோக்கி உண்மையில் நடைபோடுவோம் என கானடா ஆயர்கள் மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கானடா நாட்டின் பூர்விகக் குடிமக்களுடன் ஒப்புரவை ஏற்படுத்தும் நோக்கத்தில் முயற்சிகளை மேற்கொண்டுவரும் தலத்திருஅவை, ஒப்புரவு நிதி ஒன்றை உருவாக்கி குணப்படுத்தலை ஊக்குவிக்கவும், பூர்வீகக்குடியினருக்கு எதிரான உரிமை மீறல்கள் இடம்பெற்ற மறைமாவட்டங்கள் மற்றும் துறவு சபைகளின் ஆவணக் காப்பகங்களை அணுக அனுமதி வழங்கியும், பூர்வீகக் குடினரின் உயர் அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடத்துதல், ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கையின் பாதையில் நடைபோடுதல் போன்றவைகளை மேற்கொண்டும் தன் ஒப்புரவுப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 முதல் 30 வரை கானடாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனை ஓர் ஒப்புரவுப் பயணமாக நடத்தி தவறிழைக்கப்பட்ட பூர்வீக இனத்தவரிடம் உண்மையான வருத்தத்தை வெளியிட்டு இறை மன்னிப்புக்கும் அழைப்பு விடுத்தார்.
துறவு சபை ஒன்றால் நடத்தப்பட்ட பூர்வீகக்குடி மக்களின் குழந்தைகளுக்கான தங்கும் விடுதியில் பல உரிமை மீறல்கள் இடம்பெற்றது குறித்து பூர்வீகக்குடி மக்களிடம் வருத்தத்தை வெளியிடுவது திருத்தந்தையின் அப்பயண நோக்கமாக இருந்தது.
பூர்வீகக்குடி மக்களுடன் ஒப்புரவு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலான திட்டங்களுக்கென 3 கோடி கானடா டாலர்களை திரட்ட திட்டமிட்டுள்ள தலத்திருஅவை, இதுவரை 1 கோடியே 50 இலட்சம் டாலர்களைத் திரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கிறது.
தலத்திருஅவையின் மனித உரிமை மீறல்கள் குறித்த அனைத்து ஆவணங்களும், அது குறித்து அறிய விரும்பும் அனைவருக்கும், குறிப்பாக பூர்வீகக்குடி மக்களுக்கு எளிதில் அணுகும்வகையில் திறந்த புத்தகமாக இருக்கும் எனவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்