தேடுதல்

எத்தியோப்பிய கர்தினால் Berhaneyesus D. Souraphiel எத்தியோப்பிய கர்தினால் Berhaneyesus D. Souraphiel  

துயருறும் எத்தியோப்பிய மக்களுக்கு நெருக்கமாக தலத்திருஅவை

எத்தியோப்பியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஆயுதம் தாங்கிய மோதல்களில் தலத்திருஅவை எந்த சார்பு நிலையையும் எடுக்காமல், துயருறும் மக்களின் சார்பாகவே உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

எத்தியோப்பியாவில் தொடர்ந்துகொண்டிருக்கும் போரால் துயருறும் மக்களுக்கு மிக நெருக்கமாக இருக்க தலத்திருஅவை விரும்புவதாகவும், அந்த ஊக்கத்தையே திருத்தந்தையும் எத்தியோப்பிய ஆயர்களுக்கு வழங்கிவருவதாகவும் தெரிவித்தார் அந்நாட்டு கர்தினால் Souraphiel.

திருத்தந்தையுடன் ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அட் லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்துள்ள எத்தியோப்பிய ஆயர்களின் சார்பாக பேசிய எத்தியோப்பிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Berhaneyesus Demerew Souraphiel அவர்கள், எத்தியோப்பியாவின் அமைதிக்காக திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதற்கும் அந்நாட்டிற்கான அவரின் ஆதரவுக்கும் திருத்தந்தைதையுடனான சந்திப்பின்போது ஆயர்கள் தங்கள் நன்றியை வெளியிட்டதாகவும் தெரிவித்தார்.

எத்தியோப்பிய நாட்டு மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் இளையோராக இருக்கும் நிலையில், போராலும் வேலைவாய்ப்பின்மையாலும் பலர் நாட்டை விட்டு வெளியேறும் சோதனைக்கு உட்படுவதாகவும், அந்த பிரச்சனை குறித்தே ஆயர்கள் அதிக கவலை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எத்தியோப்பியாவின் மொத்த மக்கள் தொகையில் 2 விழுக்காட்டினரே கத்தோலிக்கர்களாக இருக்கும் நிலையில் தலத்திருஅவையானது, அனைத்து ஏழைகள் மற்றும் உதவித் தேவைப்படுவோருக்கான உதவிகளையும், பள்ளிக்குச் செல்ல இயலாத குழந்தைகள், மருத்துவமனைக்கு செல்ல இயலா அன்னையர், புலம்பெயர்ந்த முதியோர் ஆகியோருக்கு வழங்கிவரும் உதவிகளையும் தொடர்ந்து ஆற்றுமாறு திருத்தந்தை ஊக்கமளித்ததாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் Souraphiel.   

எத்தியோப்பியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஆயுதம் தாங்கிய மோதல்களில் தலத்திருஅவை எந்த சார்பு நிலையையும் எடுக்காமல், துயருறும் மக்களின் சார்பாகவே இருப்பதாகவும், அகில உலக திருஅவையின் ஆதரவோடும், தங்களுடன் இணைந்து பணியாற்றும் வெளிநாட்டு மறைபோதகர்களின் ஒத்துழைப்போடும் அனைத்துப் பணிகளையும் ஆற்றமுடிகிறது எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் Souraphiel.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 July 2024, 15:38