இந்திய சிறுபான்மை விவகார அமைச்சருடன் கிறிஸ்தவர்கள் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இந்தியாவின் 11 மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க பயன்படுத்தப்பட்டு அமலில் இருக்கும் மதமாற்றத்தடைச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என இந்திய சிறுபான்மை விவகார அமைச்சருக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர் இந்திய கிறிஸ்தவ பிரதிநிதிகள்.
மதமாற்றத் தடைச்சட்டத்தை அமலில் வைத்திருக்கும் 11 மாநிலங்களை இந்திய ஒன்றிய அரசு வலியுறுத்தி அதனை திரும்பப்பெற வைக்கவேண்டும் என இந்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் Kiren Rijiju அவர்களிடம் விண்ணப்பம் ஒன்றை விடுத்த 8 பேர் அடங்கிய இந்திய கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழு, சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான ஆயுதமாக இந்த தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக அவரிடம் எடுத்துரைத்தது.
அமைச்சரிடம் வழங்கப்பட்ட விண்ணப்பத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள், கொலைகள், பொய்வழக்குகள், சமூக ரீதியாக ஒதுக்கிவைக்கப்படல், கல்லறைகள் இடமறுப்பு போன்ற விவரங்களையும் குறிப்பிட்டுள்ளது இந்த கிறிஸ்தவ பிரதிநிதிகள் குழு.
2023ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் 727 இடம்பெற்றதாகவும், இந்த ஆண்டு ஆறு மாதங்களில் மட்டும் 361 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஜே.பி. கட்சி ஆட்சி செய்யும் சட்டீஸ்கார் மாநிலம் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 96 வன்முறை சம்பவங்களுடனும், உத்தரபிரதேசம் 92 சம்பவங்களுடனும் முன்னணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் 2.3 விழுக்கட்டினரே கிறிஸ்தவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்