தேடுதல்

குவாத்தமாலா கோவில் குவாத்தமாலா கோவில்  (ANSA)

குவாத்தமாலாவில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ஆம் ஆண்டு

குவாத்தமாலா நாட்டில் இடம்பெற்ற அடக்குமுறைகள் மற்றும் சித்ரவதைகளின் மத்தியிலும் மக்களின் வாழ்வை ஒளிர்விக்க நற்செய்தி உதவியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

குவாத்தமாலா நாட்டில் கிறிஸ்தவம் பரந்து விரிந்துள்ளதாகவும், மாண்பில் வளர்ந்திட மக்களுக்கு உதவியுள்ளதாகவும், அந்நாட்டில் சிறப்பிக்கப்படும் 500ஆம் ஆண்டு தலத்திருஅவை விழாவையொட்டி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

குவாத்தமாலா நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ஆம் ஆண்டு கொண்டாட்டங்களையொட்டி செய்தி வெளியிட்ட அந்நாட்டு ஆயர்கள், நானே வாழ்வளிக்கும் அப்பம் என்ற தலைப்பில் சிறப்புக்கூட்டம் ஒன்றை அண்மையில் நடத்தி இக்கொண்ட்டாட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.

குவாத்தமாலா நகருக்கு 206 கிலோமீட்டருக்கு வடமேற்கேயுள்ள Quetzaltenango என்ற ஊரில் 500 ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதையொட்டி அதே ஊரில் தங்கள் 500ஆம் ஆண்டு கொண்டாடங்களை துவக்கி வைத்த குவாத்தமாலா ஆயர்கள், நாட்டில் இடம்பெற்ற அடக்குமுறைகள் மற்றும் சித்ரவதைகளின் மத்தியிலும் மக்களின் வாழ்வை ஒளிர்விக்க நற்செய்தி உதவியுள்ளது என தங்கள் அறிக்கையில் உரைத்துள்ளனர்.

குவாத்தமாலா நாட்டில் இயேசுவின் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 500ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இறைவார்த்தைக்கு நன்றியுணர்வை தெரிவிப்பதாகவும், நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் வழி பல ஆயிரக்கணக்கான விசுவாசிகளின் வாழ்வுக்கு அர்த்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

குவாத்தமாலா மற்றும் மத்திய அமெரிக்காவின் முதல் புனிதரான Pedro de San José Betancur அவர்கள் 2002ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டது பற்றியும் தங்கள் அறிக்கையில் குறிப்பிடும் ஆயர்கள்,  குவாத்தமாலா மக்களைக் காக்கும் விசுவாச மதிப்பீடுகளை மறைச்சாட்சிகள் தங்கள் இரத்தம் சிந்தல் வழியாக கற்றுக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் அமைதி, நீதி மற்றும் ஒப்புரவைப் பெற இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது என தங்கள் அறிக்கையில் கூறும் ஆயர்கள், மக்களின் வாழ்வு நற்செய்தி மதிப்பீடுகளுடன் தொடர்ந்து வளர தாங்கள் முழு முயற்சியுடன் உழைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2024, 16:11