தேடுதல்

இந்தோனேசிய இராணுவத்தினர் இந்தோனேசிய இராணுவத்தினர்  

இந்தோனேசிய இராணுவம் வியாபாரத்தில் ஈட்பட தலத்திருஅவை எதிர்ப்பு!

இந்தோனேசிய இராணுவ வீரர்களை வணிக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது இராணுவத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்புடையது அல்ல : தலத்திருஅவை தலைவர்கள்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தோனேசிய அரசு இராணுவச் சட்டத்தைத் திருத்துவதன் வழியாக, வர்த்தகம் செய்ய வீரர்களை அனுமதிக்கும் முன்மொழிவிற்குத் தலத்திருஅவைத் தலைவர்களும் வழக்கறிஞர் குழுக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன என்று யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள நீதி மற்றும் அமைதிக்கான பிரான்சிஸ்கன் செயலகத்தின் இயக்குனர் அருள்பணியாளர் அலெக்ஸாண்ட்ரோ இரங்கா அவர்கள், இந்த முன்மொழிவு இராணுவத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்புடையதல்ல என்று அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இந்நிலை பொது அறிவாகிவிட்டது என்றும், தனியார் மற்றும் நிறுவனங்களால் செய்யப்படும் இராணுவ வணிகங்கள் மிகப்பெரியவை. ஏனெனில் அவை செல்வாக்கு மிக்க நபர்களால் ஆதரிக்கப்படுகின்றன என்றும் அருள்பணியாளர் இரங்கா கவலை தெரிவித்துள்ளார்.

பாப்புவாவில் சுரங்க நிறுவனங்களுக்கு இராணுவ வீரர்களை அனுப்புவதற்கும் பாதுகாப்பு வணிகங்களுக்கும் இடையே நேரடி மற்றும் மறைமுக தொடர்புகள் இருப்பதைக் கண்டறிந்த  குடிமைச் சமூகக் குழுக்களின் 2021-ஆம் ஆண்டின் அறிக்கையை மேற்கோள்காட்டி உரைத்துள்ளார் அருள்பணியாளர் இரங்கா.

மேலும் இந்தச் சட்டத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டால், அதிகாரிகளுக்கு இடையேயான மோதல், பாதுகாப்பின்மை, கையாளுதல், மிரட்டல், அடக்குமுறை போன்ற புதிய சவால்கள் உருவாகும் என்று எச்சரித்துள்ளார் அருள்பணியாளர் இரங்கா.

இந்தோனேசிய இராணுவ வீரர்கள் அரசியல் மற்றும் வணிக நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள 2004 இந்தோனேசிய இராணுவச் சட்டம் மற்றும் 2002 காவல் சட்டத்தை திருத்துவதற்கான பிரதிநிதிகள் சபையின் திட்டம் குறித்து ஒருங்கிணைப்பு அரசியல், சட்டம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களின் அலுவலகம் கடந்த வாரம் பொது விவாதங்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2024, 14:53