விளையாட்டு மைதானத்தில் வன்முறை - 12 சிறார் பலி
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் நிறைந்த அப்பாவி சிறாரின் உயிர்கள், சொல்ல முடியாத வன்முறைச் செயலில் சிக்கி அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், இறந்த சிறாரின் குடும்பங்கள் அவர்களின் உறவினர்கள் மற்றும் புனித பூமியில் மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது புனித பூமியில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டுமுறைகளுக்கானப் பேரவை.
அண்மையில் இஸ்ரயேலின் மஜ்தல் ஷம்ஸ் என்ற இடத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த வான்வழித் தாக்குதலினால் 12 சிறார் உயிரிழந்ததை முன்னிட்டு அக்குழந்தைகளின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது ACOHL எனப்படும் புனித பூமியில் உள்ள கத்தோலிக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை பேரவை.
குழந்தைகளின் இழப்பு ஒரு சொல்ல முடியாத சோகத்தை நம்மில் ஏற்படுத்தி அனைவர் மனதையும் ஆழமாக பாதித்துள்ளது என்றும், இத்தகைய வெறுக்கத்தக்க வன்முறைச் செயலினால் நாம் அடையும் துயரத்தையும் கோபத்தையும் வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது ACOHL.
அமைதிக்கான உறுதிப்பாட்டைப் புதுப்பித்தல், அனைத்து வகையான வன்முறைச் செயல்களை நிராகரித்தல் போன்றவற்றின் வழியாக இறந்த குழந்தைகளுக்கு நாம் நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என்றும், வன்முறை முடிவுக்கு வந்து புரிந்துணர்வும், இணக்கமும் மரியாதையும் அனைவரும் பெற உதவவேண்டுமென்று அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளது ACOHL.
குழந்தைகள் மற்றும் சமூதாயத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வன்முறை வெறுப்பு, அவமரியாதை ஆகியவற்றைக் கைவிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அப்பேரவையானது, ஆயுதம் மற்றும் போரின் தீமையால் எதுவும் தீர்க்கப்படாது என்று கூறி திருத்தூதர் பவுலின் வார்த்தைகளான (உரோ.12:21]. “தீமை உங்களை வெல்லவிடாதீர்கள், நன்மையால் தீமையை வெல்லுங்கள்!” என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்