முடிவுக்கு வந்த சீரோ மலபார் வழிபாட்டு முறை திருஅவைப் பிரச்னை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் வழிபாட்டு முறை பிரச்னைகள் முடிவுக்கு வந்ததாகவும், எதிர்ப்புத் தெரிவித்து வந்த அருள்பணியாளர்கள், ஜூலை 3 முதல் ஆயர் மாமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருப்பலி முறையைக் கொண்டாட ஒப்புக்கொண்டுள்ளதாகவும் யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்செய்தி நிறுவனத்திடம் பேசிய, எர்ணாகுளம்-அங்கமாலி மறைமாவட்டத்தின் அருள்பணியாளர் அமைப்பின் செயலாளரான அருள்பணியாளர் குரியகோஸ் முண்டாடன் அவர்கள், மூன்று ஆண்டுகளாக, 450-க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்கள் மற்றும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கத்தோலிக்கர்கள் அவ்வழிபாட்டு முறை திருஅவையின் ஆயர் மாமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு முறைகளை ஏற்க மறுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இப்பிரச்சனை பல கட்டங்களாக விவாதிக்கப்பட்டு தற்போது முடிவுக்கு வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அருள்பணியாளர் முண்டாடன் அவர்கள், இதன்படி ஒவ்வொரு பங்குத்தளமும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பிற கடன் நாள்களில் ஆயர் மாமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருப்பலியைக் கொண்டாடவும், மற்ற எல்லா நாட்களிலும் பாரம்பரிய முறையில் திருப்பலியைக் கொண்டாடவும் நாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளோம் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சீரோ மலபார் கத்தோலிக்க வழிபாட்டு முறை திருஅவையின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராயர் இரபேல் தட்டில் அவர்களிடம், இந்தப் பிரச்சனைக் குறித்து ஓர் இணக்கமான தீர்வை காணுமாறு கேட்டுக்கொண்டதன் பேரில், தொடர் விவாதங்களுக்குப் பிறகு இத்தகையதொரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார் அருள்பணியாளர் முண்டாடன்.
எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அருள்பணியார்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள், திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் திருப்பலியின் முதல் பகுதியில் மக்களையும், இரண்டாம் பகுதியான நற்கருணை இறைவேண்டலின்போது பலிபீடத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற அவ்வழிபாட்டு முறை திருஅவையின் ஆயர் மாமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சடங்குமுறை விதிகளைப் பின்பற்றுவதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து, அதற்கு மாறாக, திருப்பலிக் கொண்டாட்டம் முழுவதுமே அருள்பணியாளர் இறைமக்களை நோக்கிதான் இருக்கவேண்டும் என்று கூறியதால் இந்தப் பிரச்சனை உருவாகியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்