திருத்தந்தையின் கிழக்கு திமோர் திருப்பயணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிழக்கு திமோர் மற்றும் இந்தோனேசிய அரசின் எல்லையில் உள்ள மறைமாவட்டங்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக வாழும் ஆசிய நாட்டிற்கு வருகைதரும் திருத்தந்தையின் திருப்பயணத்தில் கத்தோலிக்கர்களுக்கு உதவ முன்வந்துள்ளதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்தோனேசியாவின் குபாங் உயர்மறைமாவட்டம் மற்றும் மேற்கு திமோரில் உள்ள அடம்புவா மறைமாவட்டம், கிழக்கு திமோருடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது என்றும், திருத்தந்தையின் கிழக்கு திமோர் திருப்பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் அருள்பணியாளர்கள், அருள்கன்னியர்கள், மற்றும் பொதுநிலை விசுவாசிகள் தங்களிடம் பெயர்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு விண்ணப்பித்துள்ளதாகவும் அச்செய்திக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
இதுகுறித்து கூறியுள்ள குபாங் உயர்மறைமாவட்டத்தின் செயலாளர் அருள்பணியாளர் எர்மினஸ் ஃப்குன் அவர்கள், கத்தோலிக்கர்கள் தங்களுடைய பங்குத் தளங்களில் தங்களைப் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரோத்தே, அலோர் மற்றும் சாபு போன்ற சிறிய தீவுகளில் வாழும் கத்தோலிக்கர்களின் நலனுக்காக, குடிவரவு அதிகாரிகள் கிழக்கு திமோருக்கு அவர்களின் பயணத்தை எளிதாக்குவதற்காக அவர்களைச் சந்திப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் ஃப்குன்.
கிழக்கு திமோர் ஆயர் பேரவையுடன் இதுகுறித்து கலந்துரையாட, குபாங் உயர்மறைமாவட்டம் ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளதாகவும் மேலும் உரைத்துள்ளார் அருள்பணியாளர் ஃப்குன்.
அதேவேளையில், அடம்புவா மறைமாவட்டத்தில் உள்ள மேய்ப்புப் பணி மையத்தின் செயலாளர் அருள்பணியாளர் Yosef Hello அவர்கள், இம்மமறைமாவட்டத்தின் கீழ் உள்ள பெலு, மலாக்கா மற்றும் வட மத்திய திமோர் ஆகிய மூன்று மாவட்டங்கள் கிழக்கு திமோருடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை கிழக்கு திமோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்