தேடுதல்

இறைஊழியர் அன்னம்மாள் இறைஊழியர் அன்னம்மாள் 

நேர்காணல் – இறைஊழியர் அன்னம்மாள்

கைம்பெண்ணாக இருந்து ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலமாகவும், அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஈடேற்றம் தரும் வழியாகவும் அமைந்தவர் திருச்சி தூய அன்னாள் சபையை உருவாக்கிய இறைஊழியர் அன்னம்மாள்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

எந்த ஒரு மனிதன் இயல்பாக எல்லா உயிர்களிடத்திலும், கள்ளம் கபடமற்ற அன்பினை வெளிப்படுத்துகிறானோ, அவனிடத்தில் இறைவன் தன்னையே வெளிப்படுத்துகிறார். அம்மனிதனே இறைவனின் உண்மையான தொண்டனாகின்றான். தனது வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்து இறைவனின் அடியவராக ஊழியராகத் தன்னையே மாற்றிக்கொள்கின்றான். அவ்வகையில் கைம்பெண்ணாக இருந்து ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலமாகவும், அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஈடேற்றம் தரும் வழியாகவும் அமைந்தவர் திருச்சி தூய அன்னாள் சபையை உருவாக்கிய இறைஊழியர் அன்னம்மாள். ஜூலை 26 அன்று திருஅவை சிறப்பிக்கும் தூய சுவக்கீன் அன்னா திருநாளன்று தங்களது சபை விழாவினைக் கொண்டாடும் தூய அன்னாள் சபை சகோதரிகள் அனைவருக்கும் நம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.

இன்றைய நம் நேர்காணலில் இறைஊழியரான அன்னம்மாள் பற்றிய கருத்துக்களையும் திருச்சி தூய அன்னாள் சபை உருவான வரலாறு பணிகள் பற்றியும் நம்மோடு பகிர்ந்து கொள்ள இருப்பவர் அச்சபையின் தலைமை அன்னை அருள்சகோதரி மரிய சகாய தமிழரசி. விலங்கியல் துறையில் முதுகலை, மேல்நிலை, ஆய்வியல் நிறைஞர் என பட்டங்களைப் பெற்றுள்ள அருள்சகோதரி அவர்கள், கடந்த 2023 ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி முதல் சபையின் தலைமை பொறுப்பில் இருந்து வருகின்றார். சீரும் சிறப்புமாக சபையைத் திறம்பட ஆற்றிவரும் அருள்சகோதரி அவர்களை எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் இறைஊழியர் அன்னம்மாள் பற்றி எடுத்துரைக்க அன்புடன் அழைக்கின்றோம்.

அருள்சகோதரி மரிய சகாய தமிழரசி - தலைமை அன்னை - தூய அன்னாள் சபை

ஜூலை 26 அன்று திருஅவை அன்னைமரியாவின் பெற்றோர்களாக தூய சுவக்கீன் அன்னா இவர்களின் திருவிழாவினை நினைவுகூர்கின்றது. சுவக்கீன்  என்னும் பெயருக்கு “ஆண்டவரது தயாரிப்பு” என்றும், அன்னா என்னும் பெயருக்கு “இறைவனது அருள்” என்றும் பொருள்.  அன்னை மரியாவின் தாயான தூய அன்னா பெத்லகேமில் பிறந்தவர். இவர் நாசரேத்தில் வாழ்ந்த சுவக்கீன் என்பவரை மணந்து இல்லறவாழ்வை வாழ்ந்தார். சுவக்கீன் அன்னா இருவரும் தாவீது அரசருடைய குடும்ப வழிமரபைச் சார்ந்தவர்கள்.  பல ஆண்டுகளாக இவர்களுக்குக் குழந்தை இல்லை. பலவிதமான மன்றாடுகளுக்குப் பின்னரே கன்னி மரியா இவர்களுக்கு மகளாகப் பிறந்தார். மரியாவிற்கு மூன்று வயது ஆனதும்  அவரை ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அந்த அளவிற்கு கடவுளுக்குக் கொடுத்த வாக்கிலும் இறைபக்தியிலும் சிறந்து விளங்கினர் இத்தம்பதியினர். தியாக குணம் கொண்டவர்களான சுவக்கீனும் அன்னாவும் நெடுங்காலமாய் தவம் இருந்து கடவுளை மன்றாடிப் பெற்றெடுத்த அழகிய குழந்தையாம் மரியாவைக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யும் மனம் கொண்டிருந்தனர்.

திருஅவையில் பலகாலத்திற்கு முன்பிருந்தே தூய அன்னாவை கிறிஸ்தவ மக்கள் வணங்கி வந்திருக்கிறார்கள். அதனால் இவரின் பெயரில் பல கோவில்கள் கட்டப்பட்டன.  கிழக்கத்திய திருஅவையின் முதுபெரும்தந்தையர்கள் தூய அன்னாவின் தூய்மைத்தனம் பற்றியும் இவர் பெற்ற வரங்களைப் பற்றியும் அழகாகக் கூறியிருக்கிறார்கள்.  நான்காம் நூற்றாண்டிலேயே புனித சுவக்கீன் பெயரில் எருசலேமில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. திருஅவையில் சிறந்த பெற்றோர்களுக்கு முன்மாதிரிகையாகவும், இறைத்திருவுளத்திற்கு அடிபணியும் மனம் கொண்டவர்களாகவும் இத்தம்பதியினர் விளங்கினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 13:23