தேடுதல்

ஸ்டான் சாமி மரணத்திற்கு நீதிகேட்டு முழக்கம் ஸ்டான் சாமி மரணத்திற்கு நீதிகேட்டு முழக்கம்  

ஸ்டான் சாமியின் மரணத்திற்கு நீதி வேண்டும்!

இயேசு சபை அருள்பணியாளர் ஸ்டான் சாமி அவர்களின் கணணியில் இணையதள சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து தவறான சான்றுகளைப் பதிவுசெய்திருப்பதை அமெரிக்க ஐக்கிய நாட்டு டிஜிட்டல் தொடர்புடைய சட்ட நிபுணர்கள் கண்டுபிடித்தனர்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சிறையில் மரணமடைந்த மனித உரிமைகள் வழக்கறிஞரும் சேசு சபை அருள்பணியாளருமான  ஸ்டான் சுவாமியின் வழக்கில் நீதியை நிலைநிறுத்துமாறு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சேசு சபை பணியகம் மீண்டும் இந்திய உயர் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக ICN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சேசு சபை பணியகத்தின் நிர்வாக குழுமத்தின் தலைவரான அருள்சகோதரர் ஸ்டீபன் பவர் சே.ச. அவர்கள், இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமிக்கு ஜூலை 2, இச்செவ்வாயன்று, கடிதம் ஒன்றை அனுப்பி, அருள்பணியாளர் ஸ்டான் சாமியின் சிறைவாசம் மற்றும் மரணம் குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்தார் எனவும் அச்செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்தக் கடிதத்தில், உலகம் முழுவதும் உள்ள சேசு சபை அருள்பணியாளர்கள், அருள்தந்தை  ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கவும், அவருடன் இணைந்து கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடும் மற்ற அனைவருக்கும் விடுதலை கிடைக்கவும் வேண்டும் என்பதில் ஆர்வமுடன் இருக்கின்றனர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் அருள்சகோதரர் ஸ்டீபன்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பூர்வீகக்குடிகள் மற்றும், தலித் மக்கள் மத்தியில் பணியாற்றிய மனித உரிமைகள் ஆர்வலரான 84 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளோடு தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் (NIA) கைதுசெய்யப்பட்டார்.

அருள்பணியாளர் ஸ்டான் சாமி அவர்கள், மும்பை சிறையில் அவர் உடல்சார்ந்த பல்வேறு பிரச்சனைகளால் துன்புற்றபோது மருத்துவரீதியிலும் பிணையல் மறுக்கப்பட்டநிலையில், 2021-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி இறைபதம் சேர்ந்தார். (ICN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 July 2024, 12:49