விடை தேடும் வினாக்கள் - நான் என்ன செய்ய வேண்டும்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” (மாற் 10:51) என இயேசு கேட்கும் கேள்வியைக் குறித்து இன்றையை விடை தேடும் வினாக்கள் நிகழ்ச்சியில் நோக்குவோம். நான் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை இயேசு மாற்கு நற்செய்தி பிரிவு 10ல் இரு வேறு சூழல்களில் இரு சகோதரர்களுடனும் பின்னர் பார்வையற்ற பர்த்திமேயு என்பவரிடமும் கேட்பதை காண்கிறோம்.
எரிக்கோ நகருக்கு வெளியே இரந்துண்ணும் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பர்த்திமேயுவை நோக்கி இந்த கேள்வியை இயேசு கேட்கும்போது, எதற்காக அந்த பார்வையற்றவர் தன்னை அழைக்கிறார் என்பது எல்லாம் அறிந்த இறைமகனுக்குத் தெரியாதா என்ன?. நாசரேத்து இயேசுதான் அங்கு போகிறார் என்பதை கேள்விப்பட்டு, இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும் என கத்தத் துவங்குகிறார் பர்த்திமேயு. இரண்டாம் முறையும் உரக்கக் கத்துகிறார். எதற்காக?. அவரிடம் பொருளுதவி கேட்கவா? இல்லை. அப்படியெனில் தாவீதின் மகனே என்ற விசுவாச வார்த்தைகளை சொல்லி அழைத்திருக்கத் தேவையில்லை. இயேசுவே இறைமகன், அவரால் தனக்கு பார்வை வழங்கமுடியும் என பர்த்திமேயு உறுதியாக நம்பியதால்தான் அப்படி உரக்கக் கத்துகிறார். கத்தவேண்டாம் என பிறர் கண்டித்தும் அவர் கேட்கவில்லை, மீண்டும் உரக்கக் கத்துகிறார். இதையெல்லாம் தெரிந்திருந்தும் இயேசு பர்த்திமேயுவிடம், “உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்ற கேள்வியை முன்வைக்கிறார். இதே கேள்வியை சிறிது நேரத்திற்கு முன்னால் தன் இரு சீடர்களிடம் இயேசு கேட்பதையும் காண்கிறோம். செபதேயுவின் மக்கள் யாக்கோபையும் யோவானையும் நோக்கி, “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” (10:36) என்று கேட்கிறார் இயேசு. அவர்களின் விண்ணப்பத்திற்கு, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள்”(10:38) என உங்களுக்குத் தெரியவில்லை என்று கூறும் இயேசு, பார்வை வேண்டி நின்ற பர்த்திமேயுவை நோக்கி, “நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்று கூறுகிறார். வழக்கம்போல் பணமோ உணவோ கேட்காமல், எனக்கு பார்வை வேண்டும் என பர்த்திமேயு கேட்பதிலிருந்தே, இயேசுவால் மட்டுமே கொடுக்க முடிந்ததை அவர் கேட்பதாகக் காண்கிறோம். அவர் விசுவாசம் அப்போதே வெளிப்பட்டுவிட்டது. அதனால்தான் இயேசுவும் கூறுகிறார், உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று என்று.
இதே கேள்வியை இயேசு தன் இரு சீடர்களிடம் கேட்டபோது, அவருக்கு கிடைத்த பதிலோ, அதிகாரத்திற்கும் மகிமைக்குமானது, ஆனால் இரந்துண்ணும் பார்வையற்றவரிடம் கிட்டியதோ, பார்வைக்கான விண்ணப்பம். ஒன்றை மறுக்கிறார், மற்றதை நிறைவேற்றுகிறார். இதே கேள்வியை நம்மை நோக்கி இறைமகன் கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்?. கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். செபதேயுவின் மக்களைப்போல், நாமும் அதிகாரத்தையும் உயரிய இடத்தையும்தான் தேடுகிறோம். எனக்குப் பார்வை வேண்டும் என கேட்பவர் வெகு சிலரே. கடவுள் நம்மிடம் கேட்கும்போது, அவரால் நமக்கு என்ன கொடுக்க முடியுமோ, அதைவிட மிகக் குறைவாகவே நாம் கேட்கிறோம்.
நம் வாழ்வின் முழு அர்த்தத்தை தெரிந்துகொள்ள இறைவனின் உதவி வேண்டி நாம் எப்போதாவது வேண்டியிருக்கிறோமா?. பார்வை கிடைத்த பர்த்திமேயு என்ன செய்தார் என்பதை கொஞ்சம் பாருங்கள். இயேசுவைப் பின்பற்றி, அவருடன் வழி நடந்தார் என்பதை வாசிக்கிறோம். பார்வை கிட்டியவுடன், தான் பார்க்கத் தவறிய இடங்களைக் கண்டு களிக்கவோ, தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தன் புதிய நிலையைச் சொல்லி மகிழவோ அவர் செல்லவில்லை. மாறாக, தனக்குப் பார்வை அளித்தவரைப் பின்பற்றிச் செல்கிறார். அவரே உண்மையான வாழ்வு என்பதை பர்த்திமேயு கண்டுகொண்டார். ஆனால், தான் பார்வை பெறுவதற்கு முன்பே இயேசுவில் தன் முழு நம்பிக்கையையும் வைத்ததை நாம் பார்க்கிறோம். ஆம், இயேசு உன்னைக் கூப்பிடுகிறார் என்று சொல்லப்பட்டவுடனேயே பார்வையற்ற பர்த்திமேயு தன் மேலாடையை தூக்கி எறிந்துவிட்டு இயேசுவை நோக்கி ஓடி வருகிறார். தங்க இடமின்றி தெரு ஓரம் இரந்து கொண்டிருந்த அவருக்கு இருந்த ஒரே உடைமையான மேலாடையையும் தூர எறிந்துவிட்டு ஓடி வருகிறார். இயேசுவில் முழு நம்பிக்கைக் கொண்டிருந்ததால்தான் இதையெல்லாம் அவரால் செய்ய முடிந்தது. இருமுறை உரக்கக் கத்தியது, மேலாடையை தூக்கி எறிந்தது, பார்வை தாரும் என வேண்டியது, இயேசுவைப் பின்தொடர்ந்தது என அனைத்து நடவடிக்கைகளும் இயேசுவின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கைகளை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன.
இயேசுவும் அந்த பார்வையற்றவரும் நேருக்கு நேராக அந்த மண்பாதையில் சந்திக்கின்றனர். ஒருவர் உலகின் ஒளியாக நிற்கிறார், மற்றவரோ இருளில் தவழ்கிறார். அன்று பார்வையற்றவரைப் பார்த்துக் கேட்ட அந்த கேள்வியை இன்று நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கிறார் இயேசு. நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாய் என கேட்கிறார். புதிய ஒரு பார்வைக்கென கண்களைத் திறக்கவேண்டும் என கேட்கப்போகிறோமா?. அவருக்குத் தெரிந்திருந்தும் நம் வாயிலிருந்து நமக்குத் தேவையானது என்னவென வெளிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். நம் ஒத்துழைப்புடன் இணந்ததுதான் நம் குணப்படுத்தல் என்பது இதன் வழி தெளிவுபடுத்தப்படுகின்றது. உங்களுக்குக் கருணை காட்ட ஆண்டவர் காத்திருப்பார் (எசா 30:18) என இறைவாக்கினர் எசாயா கூறுவது போலவும், இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன் (திவெ. 3:20) என திருவிவிலிய இறுதி நூலில் கூறப்படுவதுபோலவும் இயேசு நம்முன் நம் வார்த்தைகளுக்காக காத்திருக்கிறார். என்னச் சொல்லப்போகிறோம்?. ஆண்டவா, நான் உமக்கு என்னச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர் என கேட்கப்போகிறோமா?.
இன்னுமொன்றை இங்கு நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். இறுதி முறையாக எருசலேம் நகர் நோக்கிச் செல்லும் இயேசு நிகழ்த்திய இறுதிப் புதுமையாகத்தான் இதனை நாம் பார்க்கிறோம். அத்திமரத்தை சபித்தது உண்மையில் புதுமையல்ல, என பல இறையியலாளர்கள் நிலைப்பாடு கொண்டிருக்க, இதுதான் இறுதிப் புதுமையாக மாற்கு நற்செய்தியில் நோக்கப்படுகின்றது. அதேவேளை, இந்த புதுமையை வெளியில் யாருக்கும் சொல்ல வேண்டாம் என வழக்கமான இயேசுவின் விண்ணப்பமும் இங்கு இல்லை. சாவை நோக்கி, அதுவும் சிலுவைச்சாவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் இயேசுவுக்கு இங்கு மறைப்பதற்கு என்று எதுவும் இல்லை. எல்லாம் வெளிப்படையானது. தன்னிடம் விண்ணப்பித்த யாக்கோபுக்கும் யோவானுக்கும் இயேசு அளித்த பதிலும் வெளிப்படையானதுதான்.
ஒரே கேள்வியைக்கேட்டு மூவரின் கண்களைத் திறக்கிறார் இயேசு. ஏற்கனவே பேதுருவுடன் இணைந்து, இயேசுவுக்கு நெருங்கிய முக்கிய மூன்று சீடர்களுள் இருவராக இருந்த யாக்கோபும் யோவானும், இதே நெருக்கத்தின் தொடர்ச்சியாக தாங்கள் இயேசுவின் அரசில் வலப்பக்கமும் இடப்பக்கமும் அரியணையில் அமர ஆவல் கொள்கின்றனர். ஆனால் இயேசுவோ அதிகாரத்திற்கும் உயர்ந்த நிலைக்குமான அவர்களின் நியாயமற்ற ஆசையை மறுக்கிறார். ”உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என செபதேயுவின் இரு மகன்களின் விண்ணப்பத்திற்கான பதிலாகக் கூறுகிறார் இயேசு. இயேசுவைப் பின்பற்ற விரும்பும் நாமும் எதற்காக அவரைப் பின்பற்றுகிறோம்?. அன்று திருமுழுக்கு யோவானின் இரு சீடர்கள் தன்னைப் பின்பற்றுவதைக்கண்டு இயேசு கேட்ட கேள்வி இன்றும் நமக்கு முன்வைக்கப்படுகிறது, ”என்ன தேடுகிறீர்கள்” (யோவா 1, 38) என்பதுதான் அது.
நான் என்ன செய்யவேண்டும் என இயேசு கேட்கும் இந்த கேள்வியை நாம் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்ற கதையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். என்ன கேட்டாலும் அது கொடுக்கும் என்ற நிலையில், அந்த விளக்கு நமக்குக் கிடைத்தால் நாம் என்ன கேட்போம்?. இயேசுவும் நம்மைப் பார்த்து கேட்பதும் அதுதான். உனக்கு என்ன வேண்டும் கேள் என்பதுதான் அது. ஆனால், நாம் யோசிக்கிறோம். ஏன் என்றால் நாம் அவரிடம் முழு நம்பிக்கைக் கொள்ளவில்லை. இந்த பெரிய விடயத்தை அவர் தருவாரா என யோசிக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒருவர் நம்மைப்பார்த்து உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் எனக் கேட்டால் நம் பதில் என்னவாக இருக்கும்?. வழங்க விரும்புபவரின் கொள்ளளவுத்திறனைப் பொறுத்து அது அமையும். அதாவது, நம்மைப் போன்ற ஒரு வறியவர் நம்மிடம் என்ன வேண்டும் என கேட்கும்போது, நாம் ஒரு பத்து ரூபாய், அல்லது நூறு ரூபாய் கேட்போம். ஆனால், ஒரு பணக்காரர் கேட்டால், ஆயிரம் இரண்டாயிரம் என்று கேட்போம். இதையே அதானியோ அம்பானியோ நம்மிடம் கேட்டால், நூறு என்றோ ஆயிரம் என்றோ அவர்களிடம் கேட்பது, அவர்களையே அவமானப்படுத்துவதாகிவிடும். ஆனால், அகில உலகத்திற்கும் அதிபதியான இறைவனை நோக்கி நாம் என்றாவது முழு நம்பிக்கையுடன், அதாவது, கேட்பது கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் கேட்டிருக்கிறோமா?. நமக்குள்ளேயே நாம் கேட்கவேண்டிய கேள்வி இது. நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்(John 15:7) என்ற இயேசுவின் வார்த்தைகள் நம் ஒவ்வொரு விண்ணப்பத்திலும் பின்பலமாக நின்று செயலாற்ற வேண்டும்.
அதுதான் நாம் பார்வை பெறுவது. அதாவது இயேசுவை தெளிவாகக் காணும் வரம் தருவது. யாக்கோபு மற்றும் யோவான் போல் நாம் சொந்த நலனுக்காக இறைவேண்டல் செய்கிறோமா, அல்லது புதிய பார்வை பெறவும், பாவங்களிலிருந்து குணம்பெறவும் இறைவேண்டல் செய்கிறோமா?. அல்லது, உலக பாவங்கள் கழுவப்படவும், அமைதி நிலவவும் செபிக்கிறோமா?. எத்தனை முறை நம் வாழ்வில் நாம் பார்வையற்றவராக, துயருவோர் குறித்து பாராமுகமாகச் செயல்பட்டிருக்கிறோம், எண்ணிப்பார்ப்போம். இயேசுவின் கரங்கள் நம்மைத் தொட்டுக் குணப்படுத்த அனுமதிப்போம். அதன் வழி நமக்கு புது பார்வை கிட்டட்டும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்