தேடுதல்

விவசாய நிலம் விவசாய நிலம்  (ANSA)

திருஅவையில் யூபிலி 2025 – 2. நிலத்தை மீட்டல்

நிலங்கள் தனிப்பட்ட நபருக்குச் சொந்தமானவைகளாக அல்ல மாறாக ஓர் இனம், குடும்பம் அல்லது பிரிவிற்கேச் சொந்தமானதாகத் தொடக்க காலத்தில் கருதப்பட்டது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

நாம் வாழ்கின்ற இந்த உலகில் நிலப்பரப்பானது 29 விழுக்காடு உள்ளது. மீதமுள்ள 91 விழுக்காடு பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. நிலம் மனித வாழ்வில் மிக இன்றையமையாதது. இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சூழலில், தகவமைப்பில் வாழ்வதற்கு ஏற்றவாறு படைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் மனிதர்களாகிய நாம் நிலப்பரப்பில் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பினையும் உடலமைப்பினையும் பெற்றுள்ளோம். அரசன் முதல் அடிமைப்பணி செய்யும் மனிதர்கள் வரை அனைவரும் இயற்கையோடு இணைந்த வாழ்வையே வாழ விரும்புகின்றனர். இயற்கை இறைவனோடும் அவர் சாயலாகப் படைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரோடும் இரண்டறக் கலந்தது. திருஅவையில் கொண்டாடப்படும் யூபிலி ஆண்டு 2025-ஐ முன்னிட்டு அதன் தயாரிப்பாக கடந்த வாரம் நிலத்திற்கு ஓய்வளித்தல் என்ற தலைப்பிலானக் கருத்துக்களுக்கு நாம் செவிசாய்த்தோம். அதன் இரண்டாம் தலைப்பாக நிலத்தை மீட்டல் என்பது பற்றி  இன்றைய நம் நிகழ்வில் காணலாம்.      

தொடக்க கால மனிதர்கள் நாடோடி சமூகமாக இருந்து நாகரீக வாழ்க்கைக்கு மாறிய காலம் முதல் ஓரிடத்தில் தங்கி பயிரிட்டு வாழத் துவங்கினர். ஆதாம் ஏவாள் ஏதேன் தோட்டத்தில் இருந்த காலத்தில் இயற்கையாகக் கிடைக்கும் காய் கனிகளை உண்டு உயிர் வாழ்ந்தனர். அங்கிருந்து விரட்டபட்டபோது தாங்களே பயிரிட்டு விளைவித்து உண்ணப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பயிரிட்டு பராமரித்த நிலத்தை தங்களுடையதாகக் கருதினர். மேலும் இறைவனின் குரலுக்கு செவிசாய்த்து பல இடங்களை நோக்கிப் புறப்பட்ட மக்கள் தாங்கள் புதிதாக சென்ற இடம் இறைவனால் தங்களுக்கும் தங்களது வழிமரபினர்களுக்கும் கொடுக்கப்பட்ட பரிசு என்று நினைத்தனர். ஒவ்வொருவரும் தங்களுக்கென நிலப்பகுதியை தேர்வு செய்து அதனைப் பக்குவப்படுத்தி, விளைவித்து மகிழ்ந்தனர்.

இயற்கையை விரும்பாத உயிர்கள் இவ்வுலகில் கிடையாது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு மனித இனம் வரை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ அனைவரும் விரும்புகின்றனர். தான் வாழ்ந்த காலத்தில் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்த மகாகவி பாரதியார் கூட, “காணி நிலம் வேண்டும் அதுவும் இயற்கை எழில் மிளிரும் வகையில் மரம் செடி கொடிகளோடு வேண்டும்” என்ற பொருளில் பாடுகின்றார். இரவிலே நிலாவொளி தன் வீட்டில் சுடர்விடவேண்டும், கேணி,தென்னை மரம், அதிலிருந்து வரும் இளந்தென்றல் போன்றவையும் வேண்டும்” என்று பாடுகின்றார். திருப்பாடல்களின் ஆசிரியர் என்று கருதப்படும் அரசர் தாவீதும் இயற்கையில் இரண்டறக் கலந்திருக்கும் இறைவனைப் புகழ்ந்துப் பாடுகின்றார்.

திருவிவிலியத்தின் பார்வையில் நிலம்

திருவிவிலியத்தின் பார்வையில் நிலம் என்பது மனிதர்களுக்குச் சொந்தமானதல்ல. கானான் நாட்டிற்கு இஸ்ரயேல் மக்கள் சென்றபோது ஒவ்வொருவரும் தத்தமது குடும்பத்தினரின் எண்ணிக்கையைப் பொருத்து தேவையான நிலங்களைத் தங்களுக்கென்று சேர்த்து வைத்துக்கொண்டனர். அதனால் நிலங்கள் தனிப்பட்ட நபருக்குச் சொந்தமானவைகளாக அல்ல, மாறாக ஓர் இனம், குடும்பம் அல்லது பிரிவிற்கே சொந்தமானதாகக் கருதப்பட்டது. எடுத்துக்காட்டாக யோசுவா முதுமை அடைந்த பிறகு அவருக்கு ஆண்டவரின் வாக்கு உரைக்கப்பட்டது. அதன்படி அவர் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களுக்கு என்று நிலத்தினை ஆண்டவர் விரும்பியபடி பிரித்துக் கொடுக்கின்றார். ஆக, நிலங்கள் தனிநபருக்குரிய சொத்து அல்ல மாறாக இனங்களுக்குரியது என்பதை வலியுறுத்துகின்றார். இதன் காரணமாகவே யூபிலி ஆண்டில் கடனைத் தள்ளுபடி செய்தல், நிலத்தை மீட்டல் என்னும் செயல்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

குலங்களின் எண்ணிக்கைக்கேற்ப பிரித்து கொடுக்கப்படும் இடங்களில் மக்கள் தங்களது கால்நடைகளைப் பராமரித்தும், பயிர்களை விளைவித்தும் தொழில் செய்து வாழ்ந்தனர். லேவியர் எனப்படும் குருக்கள் இந்த குலங்களிலிருந்து காணிக்கையாகப் பெற்ற நிலங்களில் வாழ்ந்தனர். மேலும் யூபிலி ஆண்டில் நிலமானது மீண்டும் அளவிடப்பட்டு மறுசீரமைக்கப்பட்டது. தனது நிலத்தை விற்றவர் அதனை மீட்கின்றார். அவரால் மீட்க முடியாவிட்டாலும் யூபிலி ஆண்டு முழுவதும் அந்த நிலத்தை அவர் உடைமையாகப் பெற்றிருக்கின்றார். யூபிலி ஆண்டின் நிறைவில் அவரது கடன், தள்ளுபடி செய்யப்பட்டு அவரிமே அந்த நிலம் திரும்பி வருகின்றது.

யூபிலி ஆண்டில் எல்லாரிடமும் எல்லாம் இருப்பது போல சமமான மனநிலையுடன் மக்கள் காணப்படுகின்றனர். இருப்பவர் இல்லாதவர் என்ற வேறுபாடின்றி எல்லாரிடமும் நிலம் இருக்கின்றது. அனைவரும் நிலத்தை உடையவர்களாக வாழ்கின்றனர். தொடக்கத்தில் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலத்தினை ஒரு சிலர் தங்களது சோம்பல், புலம்பல், அவநம்பிக்கை, செயலற்றதனம் போன்றவற்றால் கூடிய விரைவிலேயே இழந்து விடுகின்றனர். ஒரு சிலர் குடும்ப வறுமை காரணமாக அதனைப் பிறருக்கு விற்றுவிடுகின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது யூபிலி ஆண்டில் தங்களது பழைய வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பி புதிய ஆற்றலுடன் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக கடன்களை திருப்பியளித்தல் நிலத்தை மீட்டல் என்ற செயல்பாடு கடைபிடிக்கப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களது இலட்சியம், கற்பனை என்ன என்பதைக் கண்டறிந்து வாழ்கின்றனர். எல்லாம் எல்லாருக்கும் பொதுவானதாக மாறுகின்றது. தாங்கள் இழந்த நிலம், குடும்பம், உறவு, சொத்து என அனைத்தையும் மீட்டெடுக்க முயல்கின்றனர் மக்கள்.     

கடன்களை தள்ளுபடி செய்தல் மற்றும் நிலத்தை திரும்பப் பெறுதல்

திருவிவிலியத்தின் இணைச்சட்ட நூலானது (இ.ச 15 : 1-11) இந்த ஜூபிலி ஆண்டில் கடன்களை தள்ளுபடி செய்தல் மற்றும் நிலத்தை மீட்டலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி எடுத்துரைக்கின்றது. அவை பின்வருவன, “ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய். ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்”. ஆக இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்னும் நற்பண்பை வளர்க்கும் ஆண்டாக யூபிலி ஆண்டினைக் கொடுக்கின்றார் இறைவன். அடிமையாகவோ வறியவராகவோ உன்னிடம் யாரும் இருக்கக் கூடாது என்பதனை வலியுறுத்தும் இறைவன், குடும்பச்சூழல் காரணமாக தன்னுடைய நிலத்தை மற்றொருவரிடம் விற்கும் ஒருவன் யூபிலி ஆண்டில் அக்கடனிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்டு நிலத்தை மீட்க வேண்டும் என்றும் எடுத்துரைக்கின்றார். இதனால் இருப்பவன் இல்லாதவன், தொழிலாளி முதலாளி என்ற நிலை மாறி எல்லோருக்கும் எல்லாம் என்ற சூழல் உருவாக வழிவகுக்கின்றார்.

உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்”. தன்னிடம் அதிமகான சொத்துக்களை வைத்திருக்கும் ஒருவன் அதனை இல்லாதவர்களிடத்தில் பகிரும்போது கடவுள் அவன் வாழும் நாட்டில் அவன் மென்மேலும் செழிப்புற்றுத் திகழ ஆசீர் அளிக்கின்றார். பகிரும்போது பாதியாக குறைவதற்குப் பதிலாக செல்வம் இரட்டிப்பாக பெருகுகின்றது. இதனைப் பார்க்கும் பிற மக்களும் பகிரும் குணத்தில் வளர ஊக்குவிக்கப்படுகின்றனர். பொருள்களை சேமித்து வைப்பதில் அல்ல மாறாக அதனைப் பிறருடன் பகிர்வதிலேயே இன்பம் அடங்கி இருக்கின்றது, எண்ணற்ற இறையாசீர் நிறைந்து இருக்கின்றது என்பதனை எடுத்துரைக்கின்றன இந்த இறைவார்த்தைகள்.

யூபிலி ஆண்டில் நாம் அனைவரும், பகிரும் குணம், எல்லோரையும் சம மனநிலையுடன் பார்க்கும் குணம், இறைகுரலுக்கு செவிசாய்த்தல் என்னும் மூன்று பண்பு நிலைகளில் நாம் வளர இறைவன் வாய்ப்பளிக்கின்றார்.

பகிர்தல் குணம்

பகிரும் குணம் இருக்கும் ஒருவர் எல்லா குணநலன்களும் உடையவர்களாக மாறுகின்றார். “ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்; குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்”. என்று பகிரும் குணம் படைத்தவர்களைப் பற்றி நீதிமொழிகள் நூல் எடுத்துரைக்கின்றது. பகிர்தல் மனித வாழ்வின் மிக முக்கியமான குணநலன். ஒருவர் மற்றவரிடத்தில் அன்பைப் பகிர்ந்து வாழ்ந்தால் நாம் வாழ்கின்ற வாழ்க்கைச்சூழல் மகிழ்ச்சியானதாக மாறும் அன்பான மகிழ்ச்சியான வாழ்க்கை நம்மால் வாழ முடியும். நாம் பெற்றுக்கொண்ட அறிவைப் பிறருடன் பகிர்ந்து வாழ்ந்தால் நமது அறிவு இன்னும் மிகுதியாகும். நாம் ஞானிகள் என்று பிறரால் போற்றப்படலாம். நமது இன்பமான உணர்வுகளைப் பிறருடன் பகிரும்போது நாம் வாழ்கின்ற இந்த உலகமும் அதில் வாழ்கின்ற உயிர்களும் சிறக்கும். நமது நற்பண்புகளைப் பகிரும்போது நாட்டின் வீட்டின் ஒழுக்கம் நிலைத்து நிற்கும். நமது நற்சொல்லைப் பிறருடன் பகிரும்போது நம்மைச்சுற்றி நல்உறவுகள் அதிகரிக்கும். உண்மையைப் பகிரும்போது உலகில் வாய்மை என்றும் நிலைத்து நிற்கும். மனித நேயத்தைப் பகிரும்போது நாம் வாழ்கின்ற உலகில் அமைதியும் மகிழ்வும் நிலைக்கும். இரக்கத்தைப் பகிரும்போது என்றும் ஆனந்தம் நம் உள்ளத்தில் நிறைந்திருக்கும். ஆக பகிரும் குணம் நமக்கு மிகவும் முக்கியம். கடவுள் கூட நம்மிடம் “உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே. மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு” என்ற இறைவார்த்தைகள் வழியாக ஒருவர் மற்றவரிடத்தில் அனைத்தையும் பகிர்ந்து வாழ வலியுறுத்துகின்றார்.

சமநிலையுடன் பிறரைப் பார்க்கும் குணம்

உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபடி எச்சரிக்கையாய் இரு. ஏனெனில், உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்காதே,  வறியவர் எவரும் இராதபடி அனைவரையும் சகோதரனாகக் கருது என்று இறைவன் வலியுறுத்துகின்றார். நம் உடன் வாழும் அனைவரும் சமமானவர்கள். யாரும் எதிலும் குறைந்தவர்கள் இல்லை. நாம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள். கடவுளின் அன்புப்பிள்ளைகள், உடன் சகோதர சகோதரிகள், எனவே நாம் அனைவரையும் சமமான மனநிலையுடன் பார்க்க அழைப்புவிடுக்கின்றார்.

இறைகுரலுக்கு செவிசாய்க்கும் குணம்

“நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு. அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான்”.

கடவுள் தரும் இந்த சட்டங்களைக் கடைபிடித்து வாழும் மனிதன் ஏராளமான இறையாசீரைப் பெற்றுக்கொள்கின்றான். கடன் கொடுப்பவன் கடன் வாங்கும் நிலைக்கு வரமாட்டான். மாறாக பல இனத்தாரை ஆளும் நிலைக்கு உயர்த்தப்படுவான் என்ற ஆசீர்மொழியைக் கடவுள் தருகின்றார். இறைகுரலுக்கு செவிசாய்த்து வாழ்ந்தால் நம் வாழ்வில் இறை அருளும் இறை ஆசீரும் என்றும் நிலைத்து நிற்கும்.   

இன்று கிறிஸ்துவை உண்மையாக அறிந்துள்ள ஒவ்வொருவருக்கும் பகிரும் குணம், அனைவரையும் சமமாகப் பார்க்கும் குணம், இறைவார்த்தைக்கு செவிசாய்க்கும் குணம் என்னும் இந்த மூன்று குண நலன்களும் பொருந்தும். உண்மையான மனந்திரும்புதல் தவறுகளை சரிசெய்யும் மனநலனிற்கு வழிவகுக்கிறது. ஒருவர் கிறிஸ்தவராக மாறும்போது, ​​​​அவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் உறுதியும் மனதில் பிறக்கின்றது. எவ்வாறு சக்கேயு தன் நிலை உணர்ந்து தான் பிறரிடம் ஏமாற்றி வாங்கியதை இரண்டு மடங்காகத் திருப்பியளிப்பேன் என்று இயேசு முன் வாக்களித்தாரோ அதுபோல நமது வாழ்வும் மாறும். நாமும் இறைவனுக்கு உகந்தவர்களாக அவர் முன் சிறந்து விளங்குவோம். நமது அயலாரை நேசிப்போம் அவர்களுக்குத் தாராள மனதுடன் உதவுவோம். இறைகுரலுக்கு செவிசாய்ப்பவர்களாக நம்மையே மாற்றுவோம். ஆண்டவரின் யூபிலி ஆண்டைக் கொண்டாட நம்மையே  நாம் நன்முறையில் தயாரிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 July 2024, 09:23