தேடுதல்

2025  யூபிலி ஆண்டு இலச்சினை 2025 யூபிலி ஆண்டு இலச்சினை 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – வரலாறும் அதன் பின்னணியும்

2025ஆம் ஆண்டு யூபிலி ஆண்டை“எதிர்நோக்கின் திருப்பயணிகள்” என்ற தலைப்பில் நாம் நமது யூபிலி ஆண்டினை சிறப்பிக்க இருக்கின்றோம்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பின் 2025 ஆம் ஆண்டினை நினைவுகூரும் விதமாக வருகின்ற நவம்பர் 24 கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று யூபிலி 2025 ஆண்டிற்கான கொண்டாட்டங்கள் தொடங்க இருக்கின்றன. தொடங்க இருக்கும் இந்த யூபிலி ஆண்டு பற்றிய தகவல்களை திருஅவை யூபிலி ஆண்டு 2025 என்ற புதிய தொடர் வழியாக இன்றைய நம் நிகழ்ச்சியில் நாம் கேட்க இருக்கின்றோம்.   

ஆண்டின் நிறைவைக் கொண்டாடும் விதமாகவும், படைத்த கடவுளுக்கு நன்றி கூறும் விதமாகவும் யூபிலி ஆண்டுகள் தொடக்க காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. நம் கத்தோலிக்கத் தாய்த் திருஅவையானது வருகின்ற 2025 ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாகக் கொண்டாட நம்மை அழைக்கின்றது. இவ்வாண்டு “எதிர்நோக்கின் திருப்பயணிகள்” என்ற தலைப்பில் நாம் நமது யூபிலி ஆண்டினை சிறப்பிக்க இருக்கின்றோம்.

வரலாறும் பின்னணியும்

பழங்கால யூதர்கள் யூபிலி ஆண்டை யோபேலின் ஆண்டு என்று அழைத்தனர். யோபேல் அல்லது யூபில் என்பது ஆட்டின் கொம்பைக் கொண்டு எழுப்பப்படும் ஓர் எக்காள ஒலியைக் குறிக்கும். யூதர்கள் இத்தகைய ஒலியை எழுப்பியே தங்களது யூபிலி ஆண்டை எல்லோருக்கும் அறிவித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். யூபிலி ஆண்டு புனிதமான ஆண்டாக அறிவிக்கப்பட்டது.  மேலும் இவ்வாண்டில் கடவுளால் நிலத்தை உரிமையாகப் பெற்ற அனைவரும் இழந்த தங்கள் நிலத்தை மீண்டும் பெறவேண்டும் என்றும், அடிமைகளாக இருப்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற்று அடிமை நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மோயீசனின் சட்டம் வலியுறுத்துகின்றது. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த யூபிலி ஆண்டினை யூதர்கள் நினைவுகூர்ந்தனர்.

விவிலியத்தில் யூபிலி ஆண்டு

‘யூபிலி’ என்ற சொல் எபிரேய மொழியில், ஐம்பதாவது ஆண்டின் பிறப்பை அறிவிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது 7 முறை 7 ஆண்டுகள் ஆக 49 ஆண்டுகளின் நிறைவை அறிவிக்கப் பயன்படுத்தப்படும் எக்காளத்தைக் குறிக்கும் ‘யூபில்’ என்ற மூலச்சொல்லிலிருந்து யூபிலி என்ற வார்த்தை வருகிறது. “யோபேல்” ஆட்டுக்கிடாயின் கொம்பிலிருந்து வரும் எக்காள ஒலியானது எருசலேமிலிருந்து புறப்பட்டுக் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒவ்வொரு கிராமம் தாண்டி மற்றொரு கிராமமாகச் சென்று ஒலி எழுப்புகின்றது. எபிரேய மொழி திருவிவிலியத்தில் யோபெல் என்ற வார்த்தையானது 27 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் 6 முறை ஆட்டுக்கிடாயின் கொம்பிலிருந்து வரும் ஒலி என்ற பொருளிலும் மீதமுள்ள 21 முறை யூபிலி ஆண்டு என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருவிவிலியத்தில், பாரம்பரியமாகச் சொல்லப்படும் Septuagint அதாவது எழுபதின்பர் மொழிபெயர்ப்பின்படி ஜோபேல், என்றும் அபேசிஸ் என்றும் கிரேக்க மொழியில் எடுத்துரைக்கப்படுகின்றது. அபேசிஸ் (aphesis)  என்பதற்கு "நிவாரணம்", "விடுதலை" அல்லது "மன்னிப்பு" என்று பொருள். இயேசுவின் வாழ்வில் அபேசிஸ் என்ற இந்த வார்த்தை மிகவும் முக்கியமானதாக இருந்தது. லூக்கா நற்செய்தியின் கிரேக்க மூலத்தில் áphesis என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.

புதிய ஏற்பாட்டில் யூபிலி என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. எழுபதின்பர் மொழிபெயர்ப்பின்படி இந்த யூபிலியானது கிப்பூர் எனப்படும் இஸ்ரயேல் மக்களின் திருவிழாவுடன் இணைந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது. கிப்பூர் எனப்படுவது இஸ்ரயேல் மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாகக் கொண்டாடிவந்த ஒரு திருவிழாவாகும். திருவிவிலியத்தில் உள்ள லேவியர் நூலின்படி (25:8-13) யூபிலி விழா கொண்டாட்டம் அடிமைகள் விடுவிக்கப்படுதல், கடன்கள் மன்னிக்கப்படுதல், நிலபுலன்கள் திருப்பிக் கொடுக்கப்படுதல் போன்றவற்றை விவரிக்கின்றது. அதாவது, REST, REVIEW, RESTORE, RECONCILE எனப்படும் ஆங்கில மொழியில் உள்ள ‘R’ என்னும் நான்கு ‘R’ களை அடையாளப்படுத்தும் வகையில் யூபிலி கொண்டாடப்பட்டு வந்தது.

 நான்கு ‘R’ – REST - ஓய்வு. மக்கள் தங்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்த நிலத்திற்கு ஓய்வு. REVIEW - கணக்கெடுப்பு. மக்கள் மற்றும் கால் நடைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்தல், மற்றும் நிலத்தின் அளவுகளைப் பரிசீலனை செய்தல். RESTORE - புதுப்பித்தல். அனைத்தையும் புதுப்பித்தல், மக்கள் தாங்கள் வாழ்கின்ற சமூகத்தை அதன் தொடக்கநிலைக்கு நகர்த்தி தங்களையேப் புதுப்பித்தல், RECONCILE - ஒப்புரவாதல். கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒப்புரவு செய்து வாழ்தல் ஆகிய நான்கின் அடிப்படையில் யூபிலி கொண்டாடப்பட வேண்டும் என்பதை திருவிவிலியம் வலியுறுத்துகின்றது. இறைவாக்கினர் எசாயா (எசா 61; லூக் 4) “ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும்” என்று கூறும் இறைவார்த்தைகள் புனித ஆண்டாகிய இந்த யூபிலி ஆண்டினையே குறிக்கப்படுகின்றது. இங்கு புனித ஆண்டு, கடவுளின் தயவையும், கருணையையும் நினைவுகூர்ந்து அறிக்கையிடுவதை வலியுறுத்துகின்றது. திருவிவிலியக் கண்ணோட்டத்தில் யூபிலி ஆண்டு என்பது மக்கள் தங்களது கடந்த பழைய அடிமைத்தன வாழ்வில் தாங்கள் பெற்ற அனுபவங்களை உள்வாங்கி அதனைக் கடந்து செல்லவும், முழு விடுதலையை நினைத்து மகிழும் தருணமாகவும், நிகழ்காலத்தில் நடைபெறும் தருணங்களை முழுமையாக வாழ்ந்து ஆறுதல் பெறவும், வருங்காலத்தை எதிர்கொண்டு முன்னோக்கிச் செல்லவும், அழைப்புவிடுக்கின்றது.

வரலாற்றில் யூபிலி ஆண்டு

1300 ஆம் ஆண்டில் முதல் யூபிலியானது கொண்டாடப்பட்டது. அப்போதைய திருத்தந்தையாக இருந்த எட்டாம் போனிபாஸ் அவர்கள் யூபிலி கொண்டாடுவதற்கான விதிமுறைகளை வழிவகுத்தார். அதிலிருந்து ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் யூபிலி ஆண்டைக் கொண்டாட வலியுறுத்தப்பட்டது. அதன்பின் திருத்தந்தை ஆறாம் கிளமெண்ட் 1342 ஆம் ஆண்டு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை என்பது மாற்றியமைக்கப்பட்டு ஒவ்வொரு 50 ஆண்டுகளுக்கும் யூபிலி கொண்டாடலாம் என்று ஆண்டுகள் குறைக்கப்பட்டன.

1389 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் உர்பான் அவர்கள் கிறிஸ்துவின் வாழ்க்கை ஆண்டுகளின் எண்ணிக்கையை நினைவுகூரும் வகையில், 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூபிலி சுழற்சியை அமைக்க விரும்பினார். அதன்படி, 1390 ஆம் ஆண்டில் ஒரு யூபிலிக்கு அழைப்பு விடுத்தார். அவர்  அதற்குள் இறந்து போகவே அவரது மரணத்திற்குப் பிறகு திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபேஸ் அவர்கள், 1400 ஆம் ஆண்டு உரோம் நகருக்கு வந்திருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் நிறைபேறுபலனுடன் கூடிய பாவமன்னிப்பினை வழங்கி யூபிலி ஆண்டினை சிறபித்தார். திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் அவர்கள் 1425 ஆம் ஆண்டு உரோமில் உள்ள தூய யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் முதன் முதலாக யூபிலி ஆண்டினை முன்னிட்டு புனித கதவினை திறந்து வைத்தார். 50 ஆண்டுகளுக்கு ஒருமுறைக் கொண்டாடப்படும் யூபிலியை 1450 ஆம் ஆண்டு கடைசியாகக் கொண்டாடிவர் திருத்தந்தை ஐந்தாம் நிக்கோலாஸ். ஏனெனில் அதன்பின் திருத்தந்தை இரண்டாம் பவுல் அவர்கள் யூபிலி ஆண்டை 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை எனக் குறைத்தார். 1475ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் சிக்ஸ்துஸ் என்பவரால் 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பிக்கப்படும் யூபிலியானது முதன்முறையாகக் கொண்டாடப்பட்டது. ஏனைய பிற விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் அதற்கேற்றக் கால இடைவெளியில் கொண்டாடப்பட்டன. 1800 முதல் 1850 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நெப்போலியன் போர்களினால் யூபிலி கொண்டாட்டங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. 1875ஆம் ஆண்டு யூபிலி ஆண்டுகள் மீண்டும் கொண்டாடத் தொடங்கப்பட்டன. 1933-ஆம் ஆண்டு திருத்தந்தை 11-ஆம் பயஸ் 1900-ஆம் ஆண்டினை மீட்பின்  யூபிலி ஆண்டாகக் கொண்டாட அழைப்புவிடுத்தார்.  

 ‘மாபெரும் யூபிலி 2000’ – ஜூபிலிக்காக 1997 முதல் 1999 ஆம் ஆண்டுவரையிலான மூன்று ஆண்டுகள் நம்மை நாமே தயாரித்தோம். 1997 ஆம் ஆண்டில் இறைமகனாம் கடவுள், 1998 ஆம் ஆண்டில் தூய ஆவியாராம் கடவுள் மற்றும் 1999 ஆம் ஆண்டில் தந்தையாம் கடவுள் என்றும் மூன்று நிலைகளில் நாம் நம்மைத் தயாரித்தது நம் நினைவில் இருக்கும். 2015-ஆம் ஆண்டை திருத்தந்தை பிரான்சிஸ் இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ‘கற்றறிந்து கொள், இறைவேண்டல் செய், எழுந்து நட’ - என்ற சொற்களை நினைவில் கொண்டு 2023 முதல் 2024 ஆண்டை யூபிலி 2025 ஆம் ஆண்டிற்கானத் தயாரிப்பு ஆண்டாக நாம் சிறப்பித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 July 2024, 12:23