தேடுதல்

அடிமைகள் விற்கப்படும் சந்தை அடிமைகள் விற்கப்படும் சந்தை 

திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 – அடிமைகளை விடுவித்தல்

அதிகாரம் மற்றும் சுரண்டலானது மனிதனை சமூக, இன, கலாச்சார, பொருளாதார, அரசியல், தனிப்பட்ட அளவு, உடல் மற்றும் உளவியல் அளவில் என எல்லா நிலைகளிலும் அடிமைப்படுத்துகிறது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அடிமைகள் என்பவர்கள் தங்களது உடைமைகள் நில புலன்கள், குடும்பத்தார் ஆகிய அனைவரையும் விட்டுவிட்டு மற்ரொருவரிடத்தில் அடிமைப்பணி செய்வதற்காக விற்கப்பட்டவர். ஒரு சிலர் தனி நபராகவோ அல்லது குடும்பமாகவோ அடிமைகளாக விற்கப்ப்டுகின்றனர். மற்றும் சிலர் பாரம்பரியமாகவே அடிமைகளாக தங்களைத் தாங்களே அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர். அன்பு நேயர்களே திருஅவையில் யூபிலி ஆண்டு 2025 என்னும் தலைப்பில் அடிமைகளை விடுவித்தல் என்னும் மூன்றாவது நிலை பற்றி இன்றைய நம் நிகழ்வில் நாம் காணலாம்.

இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் அடிமைத்தனம்

இஸ்ரயேல் மக்கள் வாழ்வில் அடிமைத்தன வாழ்க்கைமுறை என்பது இயல்பாக நடந்த ஒன்று. பழைய ஏற்பட்டில் குறிப்பிடப்படும் யோசேப்பு கூட தன் சகோதரர்களால் அடிமையாக வணிகர்களிடம் விற்கப்பட்டார். அவரை அவ்வணிகர்கள் எகிப்தில் விற்றனர். யோசேப்பு கூட கடவுள் இருந்த்தால் அவர் அவரைப் பன்மடங்கு ஆசீர்வதித்து அருள்பொழிந்தார். அதனால் பஞ்சகாலத்தின்போது யோசேப்பு குடும்பத்தார் பலர் எகிதுக்கு சென்று அங்கே பலுகிப்பெருக ஆரம்பித்தனர். யோசேப்பு இறந்தபின், நாளடைவில் இவர்கள் எண்ணிக்கையில் பெருகுவதைக் கண்ட எகிப்து மன்னன் அவர்களை அடிமைகள் போல நடத்தினான், இந்நிலையிலேயே கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கின்றார்.

நம்பிக்கையின் தோற்றத்திலும், இஸ்ரயேல் மக்கள் உருவாக்கத்திலும், கிறிஸ்தவ சமூகத்திலும், விடுதலையின் அனுபவம் உள்ளது. விடுதலையின் முதல் பலன் உடன்படிக்கை. அதாவது கடவுளுடைய திருவுளத்தின்படி விருப்பத்தின்படி வாழ்வதற்கான அர்ப்பணிப்பு. இத்தகைய அர்ப்பணிப்பானது விடுதலையை வெறுமனே "இதிலிருந்து" “இவற்றிலிருந்து" விடுதலை என்றில்லாமல் இதற்கான விடுதலை என்று உணர வைக்கின்றது. இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையின் உருவாக்கத்திலும், அவர்களின் அரசியலமைப்பிலும் விடுதலையின் அனுபவங்கள் பல உள்ளன. இஸ்ரயேல் மக்கள் தொடக்கத்தில், தங்களைப் படைத்த யாவே கடவுளை விடுதலையாளராக அறிந்து கொண்டார்கள்.

பழைய ஏற்பாட்டில் விடுதலை

பழைய ஏற்பாடு நூலானது விடுதலையைப் பற்றி கருத்துரீதியாகவோ, அருவமாகவோ, பேசவில்லை. விடுதலைப் பயண நூலில் எகிப்திலிருந்து வெளியேறிய மக்களின் நிலை தெளிவாக விவரிக்கப்படுகின்றது. இதன் வழியாக விடுதலை என்பது ஒரு கருத்து அல்ல, கடவுளோடு மக்கள் கொண்டுள்ள உறவு என்பதை வெளிப்படுத்துகின்றது. விடுதலைப்பயண் நூல் குறிப்பிடும் விடுதலையானது இதிலிருந்து இவர்களிடமிருந்து பெற்ற விடுதலை என்பதை மட்டும் குறிக்கவில்லை மாறாக இதை நோக்கி இவரை நோக்கி என்பதற்கான விடுதலையாகப் பார்க்கப்படுகின்றது. இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த அநீதி மற்றும் ஒடுக்குமுறையின் சூழ்நிலையை உடைக்கும் ஓர் அம்சத்தையும் இந்த விடுதலையானது எடுத்துரைக்கின்றது.

அதிகாரம் மற்றும் சுரண்டலானது மனிதனை சமூக, இன, கலாச்சார, பொருளாதார, அரசியல், தனிப்பட்ட அளவு, உடல் மற்றும் உளவியல் அளவில் என எல்லா நிலைகளிலும் அடிமைப்படுத்துகிறது. இந்நிலையில் விடுதலை என்பது கடவுளின் பரிசாக இஸ்ரயேல் மக்களுக்கு வருகிறது. இதில் மக்களை வழிநடத்த மோசேயை அவரது பணிக்காக இறைவன் பயிற்றுவிக்கின்றார். பாலைவனத்தின் வழியாகக் கடந்து செல்ல அழைக்கப்படும் மனிதன் தனது இயலாமையிலிருந்து இறைவனை நோக்கிக் கேட்கும் கேள்வி, அதற்கு இறைவன் அளிக்கும் பதில் ஆகியவை அடங்கிய இடமாக இந்த பாலைவன அனுபவம் உள்ளது. இப்பாலைவனத்தில் தெய்வீக விடுதலை என்பது உண்மையானதாகவும் அனுபவப்பூர்வமானதாகவும் எதார்த்தமானதாகவும் விளங்குகின்றது.

விடுதலை ஆண்டு

விடுதலை, லிபெர்டி லிபெர்தா என்னும் இத்தாலிய வார்த்தையின் எபிரேய பொருள் மேலே ஏறுதல், வெளியேறுதல் என்பதாகும். மேலும் பாரவோன் என்ற பெயரும் விடுதலையை அடையாளப்படுத்தும் வகையில் புறப்படுதல், வெளியே அனுப்புதல் என்றும் பொருள்படுகின்றது. அடிமைகளுக்கு விடுதலையளித்தல் என்பது ஒரு புதிய சமூகத்தை மீண்டும் உருவாகக்குதல் என்ற நோக்கத்தில் செய்யப்படுகின்றது. எனவே தான் ஆண்டவர் அறிவிக்கும் யூபிலி ஆண்டில் மக்கள் கடைபிடிக்கவேண்டிய மூன்றாவது செயலாக தங்களிடமிருக்கும் அடிமைகளுக்கு விடுதலை அளித்தல் வலியுறுத்தப்படுகின்றது. இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் (46:17) தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது “விடுதலை ஆண்டு” வரை அவ்வூழியனுக்குச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யூபிலி என்னும் மீட்பின் ஆண்டானது குடும்ப துன்பத்தின் காரணமாக அடிமைப் பணிக்குச் சென்றவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் ஆண்டு. இவ்வாண்டில் அடிமைகள் பெற்ற கடன்கள் மன்னிக்கப்பட்டு, அவர்களின் நிலமும் உடைமையும் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கப்படுகின்றது. அடிமைத்தனம் மற்றும் பாகுபாடு என்ற ஆடையிலிருந்து விடுபட்ட மக்கள், தங்களது சொந்த நிலம் நாடி பயணிக்கின்றனர். ஒருவர் மற்றவரை அடிமையாக பார்க்காமல் சகோதர சகோதரனாகப் பார்க்க வேண்டும் ஒரே சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாக இச்செயல்முறை விளங்குகின்றது. மக்கள் தங்களுடன் வாழும் ஒவ்வொருவரும் உடன் சகோதர சகோதரிகள் என்ற எண்ணம் கொண்டு வாழவும் ஒருவரையொருவர் துன்புறுத்தும் பிணைப்புகளைக் கொண்டிருக்காமல், முன்னேற்றத்தை முடக்கும் தளைகள் இல்லாமல், ஓர் இலக்கை நோக்கி ஒற்றுமையாக நடக்க வழி வகுக்கின்றது.

எனவே தான் யூபிலி ஆண்டில் அடிமைகளை விடுவித்தல் என்பது மிகவும் வலியுறுத்தப்படுகின்றது. “உன் சகோதரர் ஏழ்மைப்பட்டு உனக்கு விலையாகிப் போனால் அவர்களை அடிமைபோல் நடத்த வேண்டாம். 40அவர் கூலியாள்போலும் விருந்தினர்போலும், உன்னோடு தங்கி யூபிலி ஆண்டுவரை உன்னிடத்தில் பணியாற்றட்டும்”. என்று லேவியர் நூல் இதனைக் குறித்தே எடுத்துரைக்கின்றது. ஒரே சமூகமாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதனையே இந்த யூபிலி ஆண்டு எடுத்துரைக்கின்றது.  

இக்கால அடிமைத்தனம்

இன்று அடிமைத்தனம் என்பது பல வகைகளில் நடைபெறுகின்றது. போதைக்கு அடிமையாதல், பாலியல் தொழில், குழந்தைகள் சுரண்டல் அல்லது கடத்தல், ஆபாசப் படங்கள், கொடூரமான அடிமைத்தன வடிவங்கள் என பல வகைகளில் அடிமைத்தனங்கள் இக்காலத்தில் உள்ளன. வெளிப்புற அடிமைத்தனம் மட்டுமல்ல உள்ளார்ந்த வகையில் நாம் கட்டுண்டு கிடக்கும் சில அடிமைத்தனங்களில் இருந்து நாம் வெளிவர வேண்டும் என யூபிலி ஆண்டு நமக்கு அழைப்புவிடுக்கின்றது.

இந்தியாவில் அடிமைமுறை சட்ட விரோதமானது என்று 1843 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது கிழக்கத்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் பிரிட்டிசாரால் இந்தியாவில் 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் வழியாக யாரையும் அடிமையாக விற்பதும்,  அடிமைகளை வாங்குவதும் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. இதனை மீறுபவர்களுக்குக்  கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் சட்டம் எடுத்துரைத்துள்ளது. இச்சட்ட அமலாக்கத்தின்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்  எல்லன்பரோ பிரபு.

பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள்

சாதி, மதம், இனம், மொழி, நிறம், அரசியல், நாடு, சமூகம், பண்பாடு போன்ற பல்வேறு நிலைகளில் அடிமைப்படுத்தப்பட்டவர்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாளானது 1986ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. “நாம் யாரும் அடிமையில்லை, நமக்கு யாரும் அடிமையில்லை” என்ற அரசியல் முழக்கத்தை செவிமடுத்து அக்கிய நாடுகள் அவையினால் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாளானது சட்ட ரீதியாக  அமலுக்கு வந்தாலும் இன்னும் ஒரு சில இடங்களில் இந்த அடிமை முறை இருந்து கொண்டு தான் இருக்கின்றது. சமூகத்தின் கடை நிலையில் வாழ்கின்ற மக்கள் இன்னமும் ஒருசில பணம் படைத்த அதிகார வர்க்கத்தினரால் சுரண்டப்பட்டும் அடிமைப்படுத்தப்பட்டும் இருக்கின்றார்கள். ஒரு சில இடங்களில் இந்த அடக்கு முறைக்கு எதிரான போராட்டமும் கிளர்ச்சியும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

போரில் வெல்லும் அரசர்களுக்கு எளிதாக நிறைய அடிமைகள் கிடைத்தார்கள். கானான் நாட்டை ஒருமுறை படையெடுத்து சென்ற மூன்றாம் தட்மோஸ் என்ற எகிப்திய ராஜா 90,000 பேரை கைதிகளாக பிடித்து வந்தான். சுரங்கத்தில்  வேலை செய்வதற்கும், கோயில்களைக் கட்டுவதற்கும், கால்வாய்களை வெட்டுவதற்கும் இவர்களை அடிமைகளாகப் பயன்படுத்தினான். காலங்கள் மாறினாலும் அடிமைகளைக் கொடுமைப்படுத்துவது ஒன்றும் குறைந்தபாடில்லை. 16-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டு வரை, ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் நடந்தது. அந்த சமயத்தில், இந்த பூமியிலேயே அதிக லாபத்தை ஈட்டித் தந்த வியாபாரம், அடிமை வியாபாரம்தான். அடிமைகளைக் கூட்டிக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து போன பயணங்களில், இலட்சக்கணக்கான பேர் இறந்து போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுக்கு கிடைத்த விடுதலைதான் இதுவரை மனித வரலாற்றில் அடிமைகளுக்கு கிடைத்த மாபெரும் விடுதலை என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் அடங்கிய ஒரு நாடே எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானது. அந்த விடுதலை அவர்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்றாக இருந்தது. ஏனென்றால், எகிப்தியர்கள் இஸ்ரயேலர்களை அடிமைகளை விடவும் மோசமாக நடத்தினர்.

கொத்தடிமைகள்

அமெரிக்க ஆய்வு கட்டுரையாளர் பெஞ்சமின் ஸ்கின்னர் அமெரிக்காவின் ஹார்வார்ட் கென்னடி பள்ளியின் மனித உரிமைக் கொள்கைக்கான மையத்தில் பணியாற்றி வருகிறார். உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2.7 கோடி பேர் கொத்தடிமைகளாக உள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். மனித குல வரலாற்றில் இந்த அளவுக்கு இவ்வளவு அடிமைகள் இதுவரை இருந்ததில்லை என்றும் இப்போதுதான் அதிக அளவில் கொத்தடிமைகள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இத்தகைய அடிமைகள் பல்வேறு கட்டாயப் பணிகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், தென் கிழக்கு ஆசிய நாடுகள், ருமேனியா, சூடான் ஆகிய நாடுகளிலும், சூடான், பிரேசில், இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும் அடிமைத்தன முறை இன்றும் உள்ளது என்று கூறுகின்றார் ஸ்கின்னர்.

நாம் அனைவரும் கடவுளின் அன்புப்பிள்ளைகள், அவரால் படைக்கப்பட்டவர்கள், நம்மிடையே ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது. நம்முடன் வாழும் அனைத்து மக்களும் நம் சகோதர சகோதரிகள். இறைவனால் நமக்குக் கொடுக்கப்ப்ட்டவர்கள் என்பதை நாம் உணர்ந்து வாழவேண்டும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்துடனும், ஏற்றத்தாழ்வு கொண்ட மனதுடனும் தலைவன் பணியாளர் என்ற வேறுபாடின்றியும் வாழ நாம் இறைவனால் அழைக்கப்படுகின்றோம். சமத்துவ சகோதரத்துவ மனதுடன் ஒருவர் மற்றவரை அன்பு செய்து உறவுடன் வாழவும், முழுமனதுடன் பிறரை அன்பு செய்து வாழவும் இந்த யூபிலி ஆண்டில் நம்மையே நாம் தயாரிப்போம். அதற்கான இறையருளைப் பெற முயல்வோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2024, 12:20