தேடுதல்

காசாவில் போர்ப்பகுதி காசாவில் போர்ப்பகுதி  (AFP or licensors)

காசா பகுதியில் இடம்பெறுவது நீதியான போர் அல்ல

காசாவில் இடம்பெறும் வன்முறைகளை, நீதியான போர் என்ற வாதத்தினால் நியாயப்படுத்த முயல்வது கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருஅவைக் கோட்பாடுகளில் காணப்படும் நீதியான போர் என்ற கொள்கையை தவறான அர்த்தம் கொண்டு, மத்தியக் கிழக்குப்போரை நியாயப்படுத்த முயலும் இஸ்ராயேல் மற்றும் பிற சில நாடுகளின் போக்கு குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது புனித பூமியின் நீதி மற்றும் அமைதி அவை.   

அமைதியான உலகு குறித்த திருத்தந்தையின் கண்ணோட்டத்துடன் இணைந்துபோகும் கத்தோலிக்கர்களுக்கு, தற்போது காசா பகுதியில் நடப்பது நீதியான போரல்ல என்பது தெரியும் என உரைக்கும் இவ்வறிக்கை, கத்தோலிக்கக் கோட்பாட்டின் நீதியான போர் என்ற பதம் இங்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனவும் தெரிவிக்கிறது.

காசாவில் இடம்பெறும் வன்முறைகளை, நீதியான போர் என்ற வாதத்தினால் நியாயப்படுத்த முயல்வது கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சி தருவதாக உள்ளது என உரைக்கிறது புனித பூமி திருஅவையின் நீதி மற்றும் அமைதி அவையின் அறிக்கை.

தீமையை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், அழிக்க நினைக்கும் தீமையை விட பெரிய தீமையை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் நீதியான போர் என்பது கவனமாக இருக்கிறது என்ற இவ்வறிக்கை, இஸ்ராயேலின் இந்த அழிவுதரும் போர் நீதியான போர் என்ற கொள்கையை நிறைவேற்றவில்லை என்பதுடன், திருத்தந்தை உட்பட கத்தோலிக்கத் தலைவர்கள் அனைவரும் அழைப்புவிடுத்துவரும், போர் நிறுத்தம் மற்றும் போர்க் கைதிகள் விடுதலை என்பதற்கும் செவிசாய்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கிறது.

வன்முறைகளுக்கு, நீதியான போர் என்ற பதத்தைப் பயன்படுத்துவதை விடுத்து, அன்பு, சுதந்திரம், சரிநிகர்தன்மை, நீதி, அமைதி, பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்புரவிற்கு முக்கியத்துவம் கொடுத்து அதன்படிச் செயல்படவேண்டும் எனவும் அனைத்து தரப்பினருக்கும் அழைப்புவிடுத்துள்ளது புனித பூமியின் நீதி மற்றும் அமைதி அவை. (Agenzia Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2024, 15:55