லெபனோனில் பாதிப்பை ஏற்படுத்தும் காசா போர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காசாவில் நிகழ்ந்து வரும் போரின் காரணமாக லெபனோனின் தெற்குப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றது என்றும், இங்கே அமைதி நிலவ வேண்டுமென தலத்திருஅவை மக்கள் விரும்புகின்றனர் என்றும் ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம் தெரிவித்துள்ளார் தீர் மரோனைட் பேராயர் Charbel Abdallah.
லெபனோனின் தெற்குப் பகுதி மக்கள், குறிப்பாக இஸ்ரேலிய எல்லைக்கு அருகில், நாள்தோறும் ஏவுகணை தாக்குதலை அனுபவித்து வரும் வேளை, இவ்வாறு கவலை தெரிவித்துள்ள பேராயர் Abdallah அவர்கள், இத்தகையதொரு சூழல் 2019 -இல் தொடங்கிய நாட்டின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட துயரங்களை இன்னும் தீவிரப்படுத்துகிறது என்றும் தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.
பெய்ரூட் அல்லது அதற்கு மேலும் வடக்கே இடம்பெயர்ந்து சென்ற பெரும்பாலான மக்கள் இப்போது திரும்பி வந்துள்ளனர், ஏனெனில் அவர்களிடம் பணப் பற்றாக்குறை ஏற்பட்டது என்றும், மேலும் அவர்களின் உறவினர்களுக்கு இவ்வளவு நபர்களுக்கு இடமளிக்கும் திறன் இல்லை என்றும் உரைத்துள்ளார்.
இப்பகுதியின் முக்கிய வருமான ஆதாரமாக இருக்கும் விவசாயத்தின் மீதான கடுமையான பாதிப்பை குறித்து எடுத்துரைத்த பேராயர் அப்துல்லா அவர்கள், இந்தப் பத்து பங்குத்தளங்களிலும் உள்ள மக்கள் இனி தங்கள் விளைச்சலைக் கொண்டு வர முடியாது, ஏனெனில் அவர்களின் வயல்கள் இப்போது மோதல் நிகழும் பகுதிகளாக மாறியுள்ளன என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
லெபனோன் அரசின் ஆதரவற்ற நிலையைக் குறித்தும் கவலையை வெளியிட்டுள்ள பேராயர் அப்துல்லா அவர்கள், இந்தப் பல தேவைகளை எதிர்கொள்வதில், அரசின் பங்களிப்பு முற்றிலும் இல்லை, மக்கள் மேலும் மேலும் ஏழைகளாக மாறி வருகின்றனர் என்றும், அவர்கள் இனி மனித மாண்புடன் கூடியதொரு வாழ்க்கையை வாழ முடியாது என்றும் வருத்தமுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்