பிலிப்பீன்சிலுள்ள மாசின் பேராலயத்திற்குத் தேசிய ஆலயத் தகுதிநிலை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பிலிப்பீன்சிலுள்ள மாசின் புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்திற்குத் தேசிய ஆலய தகுதிநிலை கிடைத்திருப்பது அன்னையின் பக்தர்கள் அனைவர்மீதும் பொழியப்படும் இறையருளைக் குறிக்கிறது என்று பெருமகிழ்வுடன் கூறியுள்ளார் மாசின் மறைமாவட்டத்தின் முதன்மைகுரு பேரருள்திரு Oscar Cadayona
மேலும் இந்தப் புதிய அறிவின்படி, தேசிய ஆலய தகுதிநிலை பெற்றுள்ள இத்திருத்தலப் பேராலயம், இனி பிலிப்பீன்சின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCP) கட்டுப்பாட்டின்கீழ் வரும் என்றும் யூகான் செய்தி நிறுவனதிடம் தெரிவித்துள்ளார் பேரருள்திரு Cadayona.
நாடு முழுவதிலும் இருந்தும் திருப்பயணிகள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறிய கடயோனா அவர்கள், எங்கள் மறைமாவட்டப் பேராலயத்திற்குத் தேசியத் திருத்தலப் பேராலயம் என்ற தகுதிநிலை வழங்கப்பட்டுள்ளதில் நாங்கள் பெருமையடைகிறோம் மற்றும் ஆசீர்வதிக்கப்படுகிறோம் என்று மேலும் அச்செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
மறைமாவட்டத் திருத்தலம் என்று அறியப்படும் இவ்வாலயம், கிழக்கு விசாயாஸ் பகுதியில் உள்ள முதல் தேசியத் திருத்தலப் பேராலயமாகும் என்றும், இதில் ஆறு மாநிலங்கள் உள்ளன மற்றும் 40 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் கத்தோலிக்கர்கள் என்றும் உரைக்கிறது அச்செய்தி நிறுவனம்.
ஜூலை 6, சனிக்கிழமையன்று, தெற்கு தீவான மின்டானாவோவில் உள்ள ககாயன் டி ஓரோ நகரில் பிலிப்பீன்சின் ஆயர் பேரவையின் 128-வது அமர்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்றும் அச்செய்திக்குறிப்பு உரைக்கின்றது.
85,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ள மாசின், 1771-- ஆம் ஆண்டில், சேசு சபை அருள்பணியாளர்களின் கீழ் ஒரு பங்குத்தளமாக மாறியது என்றும், பின்னர் பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர்கள் பொறுப்பேற்றவுடன், இந்தப் பங்குத்தளம் 1843- ஆம் ஆண்டில் விண்ணேற்பு அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்