புனிதர் பட்ட பாதையில் மலேசிய செவிலியர் சிபில் கார்த்திகேசு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மலேசியாவின் பினாங்கு மறைமாவட்டம், இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய ஆட்சியில் இருந்த மலாயாவில் ஜப்பானிய எதிர்ப்புப் படைகளுக்கு மருத்துவம், தங்குமிடம் மற்றும் புலன் ஆய்வறிவுப் பணிககளை வழங்கியதற்காகக் கடுமையான துன்புறுத்தல்களை அனுபவித்த செவிலியரான சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu) என்பவருக்குப் புனிதர் பட்டம் வழங்கும் முயற்சியைத் தொடங்கியிருப்பதாக யூகான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1, இத்திங்களன்று, இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், சிபில் கார்த்திகேசு அவர்கள், மலேசியாவின் பேராக்கில் உள்ள பாப்பான் நகரில் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் துன்பப்பட்டவர்களிடம் அன்பும் இரக்கமும் கொண்ட சேவை வாழ்க்கை வாழ்ந்தார் என்றும், அவரது வாழ்வு இன்றுவரை சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும் ஊக்கப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார் பினாங்கின் கர்தினால் பேராயர் செபாஸ்டியன் பிரான்சிஸ்.
கடவுளின் அருளால், செவிலியர் சிபில் அவர்களின் புனிதர்பட்ட படிநிலைகளுக்கான செயல்முறைகளை நான் முன்னெடுத்துச் செல்வேன் என்று தான் நம்புவதாகக் கூறிய கர்தினால் பிரான்சிஸ் அவர்கள், இவர் புனிதர் பட்டம் பெற்றால் மலேசியாவின் முதல் புனிதராகப் போற்றப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருப்பயணிகள் அவரது கல்லறை மற்றும் அவரது மருத்துவமனை அமைந்த வீட்டை தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர் என்றும், கத்தோலிக்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமுழுக்கின்போது இவரது பெயரை சூட்டுகின்றனர் என்றும் பெருமிதத்துடன் கூறியுள்ள கர்தினால் பிரான்சிஸ் அவர்கள், செவிலியரான சிபில் ஒரு முன்மாதிரியான, சாதாரண கத்தோலிக்க சாட்சியாகப் பேசப்படுகிறார் என்றும் அவ்வறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
செவிலியர் சிபில் அவர்கள், கிறிஸ்தவ சமூகத்தில் கத்தோலிக்கர்கள், ஆங்கிலிகன் சபையினர் மற்றும் சீர்திருத்த திருஅவையினர் நற்செய்திகளை வாழ்வதற்கு ஊக்கமளித்துள்ளார் என்றும் புகழாரம் சூப்பியுள்ளார் கர்தினால் பிரான்சிஸ்.
சிபில் கார்த்திகேசு (Sybil Kathigasu, 1899-1948) மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு தமிழ்ப் பெண்மணி. இரண்டாம் உலகப் போரின் போது பல நூறு சீனர்களின் உயிர்களைக் காப்பாற்றியவர். ஜப்பானியப் படையினரை எதிர்த்துப் போராடியவர். மலேசியாவின் நட்பு படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர். இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளின் இரண்டாவது உயரிய விருதான 'ஜார்ஜ் பதக்கம்' பெற்றவர். மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது. ஈப்போ மாநகரின் முக்கிய சாலைக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டு உள்ளது (நன்றி தமிழ் விக்கிபீடியா)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்