தேடுதல்

சிறுகுழந்தையின் மகிழ்வில் முதியோர் சிறுகுழந்தையின் மகிழ்வில் முதியோர் 

கடவுள் ஒருபோதும் தன் குழந்தைகளைக் கைவிடுவதில்லை

இயேசு நமது வாழ்வென்னும் அப்பத்தை பலுகி பெருக்கிக்கொண்டே போகின்றார், அவர் தமது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வயது அதிகரித்தாலும், உடல் வலிமை குறைந்தாலும், தலைமுடி வெண்மையாகி சமூகத்தில் ஆற்றும் பணிகளின் அளவு குறைந்தாலும், வாழ்க்கைக் குறைவானதாக, கடினமானதாக, பயனற்றதாக தோன்றும் காலத்திலும், கடவுள் ஒருபோதும் தன் குழந்தைகளை மறப்பதில்லை, கைவிடுவதில்லை என்று கூறினார் ஆயர் Dario Gervasi.

ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு உரோம் பிராத்தியில் உள்ள தூய சுவக்கீன் ஆலயத்தில் நடைபெற்ற நான்காவது ஆண்டு உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் திருப்பலியைச் சிறப்பித்து மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் உரோம் மறைமாவட்டத்தின் தெற்குப் பகுதி துணை ஆயரான ஆயர் Dario Gervasi.

நீ என்னை நம்புகின்றாயா? நான் அறிவித்த இறைவார்த்தைகளை நம்புகின்றாயா? என்ற இயேசுவின் கேள்விகள் அனைத்தும், எல்லாவற்றையும் கணக்கு பார்த்துபயன்படுத்த வேண்டும், ஒவ்வொன்றையும் பெற பணம் சம்பாதிக்க வேண்டும், எதுவும் இலவசமாகக் கொடுக்கப்படாது என்ற மனநிலை கொண்ட சமூகத்தில் வாழும் நம்மிடம் கேட்கப்படுகின்றன என்று கூறினார் ஆயர் Gervasi.

தனது ஆற்றல் கொண்டு எதையும் உருவாக்க இயலாதவரை சுமையாக, வீண்செலவாக, கருதுகின்ற சமூகத்தில் வாழும் நம்மிடம், இந்த அப்பங்களை பலுகி பெருக்க என்னால் முடியும் என்று நீங்கள் நம்புகின்றீர்களா என்று இயேசு கேட்கின்றார் என எடுத்துரைத்த ஆயர் அவர்கள், வாழ்க்கை என்பது மனித திட்டமிடுதல்கள், கருத்தியல்கள் மற்றும் கணக்கீடுகள் மட்டுமல்ல என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும் என்றும் கூறினார்.     

மேலும் இயேசு, நமது வாழ்வென்னும் அப்பத்தை பலுகி பெருக்கிக்கொண்டே போகின்றார் அவர் தமது பிள்ளைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார் ஆயர் Gervasi.

ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வைத்திருந்த சிறுவன் தன்னால் இயன்ற ஒரு சிறிய எளிய ஆனால் மிக முக்கியமான செயலை துணிச்சலுடன் செய்தான் என்றும்,   

தன்னைப் பற்றி மட்டும் நினைக்காமல், பிறரை நினைத்து, தன்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து, பிறரன்பு கலாச்சாரத்தை உருவாக்கினான் என்றும் கூறினார் ஆயர் Gervasi.

முதியோர்கள் தங்களிடம் இருக்கும்  பொருள்களை மட்டுமல்ல புன்னகையைப் பகிரும் அழகுள்ளம் படைத்தவர்கள் என்றும், பாராட்டுதல், கற்பித்தல், உற்சாகமூட்டுதல் தங்களது கதைகளைப் பகிர்தல் போன்றவற்றின் வழியாக வாழ்க்கையின் அப்பங்களை பலுகிப் பெருகச்செய்கின்றனர் என்றும் கூறினார் ஆயர் Gervasi.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2024, 10:49