வன்முறை மற்றும் உணவு நெருக்கடியைப் போக்கத் தவறிய நைஜரிய தலைவர்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நைஜீரியாவில் கிறிஸ்மஸ் தினத்தன்று, நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகும், உயிர்ப்பு ஞாயிறன்று நிகழ்ந்த மற்றொரு படுகொலைக்குப் பிறகும், அந்நாட்டின் அரசு மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தவறிவிட்டதாக அருள்பணியாளர் Andrew Dewan அவர்கள் ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவும் பிறரன்பு அமைப்பிடம் கூறினார்.
நைஜீரியாவில் இடம்பெயர்ந்த மக்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள Pankshin மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் Andrew Dewan அவர்கள், இந்தத் தாக்குதலில் தப்பிப் பிழைத்தவர்கள் அனைவரும் பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்று தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள அருள்பணியாளர் Dewan அவர்கள், வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகங்களுக்கு எவ்வித பாதுகாப்பையோ அல்லது பிற நடைமுறை ஆதரவையோ அரசு வழங்கவில்லை, மாறாக, தலத்திருஅவை மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் உள்நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் உயிர்வாழப் போராடும் பிற மக்களுக்குத் தங்குமிடம், உணவு, உடை மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை வழங்கி வருவதாகவும் கூறினார்.
இத்தாக்குதல்களுக்குத் தெளிவான மத பரிமாணம் பின்புலமாக உள்ளது என்றும், நிலம் தொடர்பான மோதல்களும் இதற்கொரு காரணியாக இருந்தாலும், முஸ்லீம்-பெரும்பான்மையுள்ள கால்நடை வளர்ப்பவர்கள் பெருமளவில் கிறிஸ்தவ விவசாய சமூகங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர் என்றும் வேதனைத் தெரிவித்தார் அருள்பணியாளர் Dewan.
விவசாயிகளுக்குப் பாதுகாப்பு இல்லாததால் வரும் ஆண்டில் பட்டினி அதிகரிக்கும் என்றும், கடந்த மாதத்தில் மட்டும் உணவுப் பொருள்களின் விலை ஏற்கனவே இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார் அருள்பணியாளர் Dewan.
விடாமுயற்சியையும் மன்னிப்பையும் ஊக்குவிக்க தலத்திருஅவை முயற்சிகள் எடுத்துவரும் போதிலும், கிறிஸ்தவ சமூகத்தின் நம்பிக்கை சோதிக்கப்படுவதாகவும், பலர் பொறுமை இழந்து வருவதாகவும் வருந்தினார் அருள்பணியாளர் Dewan.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்