தேடுதல்

இந்தோனேசிய கிறிஸ்தவர் இந்தோனேசிய கிறிஸ்தவர்  (AFP or licensors)

திருத்தந்தையின் வருகை குறித்து இந்தோனேசிய இஸ்லாமியர் மகிழ்ச்சி

உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு திருத்தந்தையின் பயணங்கள் உதவும் என்பதால் இந்தோனேசிய திருப்பயணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக இஸ்லாமிய அமைப்புகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தோனேசியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம், மத சமூகங்களிடையே நம்பிக்கையையும் இணக்கவாழ்வையும் ஊக்குவிக்க உள்ளதால் அது குறித்து மகிழ்ச்சியடைவதாக அந்நாட்டின் இரு முக்கிய இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

பல்வேறு மோதல்களால் துன்புறும் உலகில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு திருத்தந்தையின் பயணங்கள் உதவும் என்பதால் இந்த இந்தோனேசிய திருப்பயணத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக Nahdlatul Ulama மற்றும் Muhammadiyah இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இஸ்லாம் மதத்தின் செல்வாக்குமிக்க கெய்ரோ அல் அசார் பல்கலைக் கழக தலைமைக்குரு Muhammad Ahmad Al Thayyib அவர்கள், இந்தோனேசியாவில் ஜூலை மாதம் 9 முதல் 11 வரை பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரண்டே மாதங்களில் திருத்தந்தையின் திருப்பயணம் செப்டம்பர் 2 முதல் 6 வரை இடம்பெற உள்ளது முக்கியத்துவம் நிறைந்தது என கூறினார் Nahdlatul Ulama அமைப்பின் தலைவர் Ulil Abshar Abdalla.

Ulil Abshar Abdalla இஸ்லாமிய இயக்கம் உலகில் 8 கோடி அங்கத்தினர்களைக் கொண்டு இயங்கிவருகிறது.  

திருத்தந்தையின் திருப்பயணம் இஸ்லாமியர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் மட்டுமல்ல, இந்தோனேசியாவின் அனைத்து மதத்தினருக்கும் புதியக் காற்றின் சுவாசத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார் Ulil Abshar Abdalla.

உலகில் 5 கோடி அங்கத்தினர்களைக் கொண்டுச் செயல்படும் Muhammadiyah இஸ்லாம் அமைப்பின் Syafiq A Mughni  அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தோனேசிய திருப்பயணம் இஸ்லாமியர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே நல்லுறவை பலப்படுத்த உதவும் என்றார்.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியை குறைக்கவும், உலகம் முழுவதும் அநீதி தொடர்புடையவைகளைக் களையவும் இஸ்லாம் மற்றும் கத்தோலிக்க மதங்கள் ஒன்றிணைந்து உழைக்க முடியும் என மேலும் கூறினார் அவர்.

27 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில் 85 விழுக்காட்டினர் இஸ்லாமியர், இங்கு 70 இலட்சம் கத்தோலிக்கர்கள் உட்பட 2 கோடியே 40 இலட்சம் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

ஏற்கனவே இந்நாட்டில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள் 1970ஆம் ஆண்டு டிசம்பரிலும், திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் 1989 அக்டோபரிலும் திருப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2024, 15:53