விவிலியத் தேடல்: திருப்பாடல் 54-3, இன்னல்களில் விடுவிக்கும் இறைவன்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'நமது நேர்மை நிலைபெறட்டும்!' என்ற தலைப்பில் 54-வது திருப்பாடலில் 1 முதல் 4 வரையுள்ள இறைவார்த்தைகளை நமது தியானத்திற்கு எடுத்துக்கொண்டோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 4 முதல் 7 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது பக்தி நிறைந்த மனமுடன் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக! ‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்! தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’ ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டுள்ளேன். (வச. 4-7).
கடந்த வார விவிலியத் தேடலில் நாம் கேட்டதுபோன்று, இன்று இரண்டாவது பகுதிக்குள் நுழைகின்றோம். முதல் பகுதியில் எதிரிகளின் தீச்செயல்களைப் பற்றி பேசிய தாவீது, இரண்டாவது பகுதியில் தனது இறைநம்பிக்கை குறித்து பேசுகின்றார். முதலாவதாக, "இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர் திருப்பிவிடுவாராக!" என்கின்றார் தாவீது அரசர். இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான காரியம், தாவீதின் எதிரிகள் எப்படி வீழ்ந்தார்கள் என்பதுதான். இஸ்ரயேல் மக்களின் முதல் அரசராக கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மன்னர் சவுல், ஆண்டவர்மேல் நம்பிக்கை வைக்காமல் ஆயுதங்கள்மீது நம்பிக்கை வைத்தார். அதனால்தான் அவர் வீழந்தார். அதுமட்டுமன்றி, தனக்கு உதவிய தாவீதை படுகொலை செய்ய விரும்பினார். அதற்காக அவர் எப்படியெல்லாம் செயல்பட்டார் என்பதையும் கண்டோம். தனது மக்களையும் தனது அரசையும் பாதுகாப்பதை விட்டுவிட்டு ஒன்றுமறியாத, வஞ்சகமற்ற, தீமைக்குப் பதிலாக நன்மையே செய்ய விரும்பிய தாவீதைத் தேடிச்சென்று பழிதீர்க்க விரும்பினார்.
அதன் காரணமாகவே, சவுல் பிலிஸ்தியருடனான போரில் வீழ்ந்தார். மாசற்ற மனிதரான தாவீதுக்கு எதிராக வெகுண்டெழுந்த சவுல், இப்போரில் படுதோல்வியடைந்து தன் வாளைக்கொண்டே தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் கோரநிலைக்குத் தள்ளப்பட்டார். ‘தன்வினை தன்னைச் சுடும்’, ‘வினைவிதைத்தவன் வினையறுப்பான்’ என்ற இரண்டு பழமொழிகளும் சவுலின் வாழ்வில் மிகவும் பொருந்திப் போகின்றது. சவுல் செய்த மதியற்ற செயலால் அவர்மட்டும் மடியவில்லை, மாறாக, அவருடைய மூன்று புதல்வர்களும், எண்ணற்ற படைவீரர்களும் அழிந்தனர். குறிப்பாக, தாவீதின் உயிர் நண்பனான யோனத்தானும் இப்போரில் இறந்துபோனதுதான் பெரும்சோகம்! அதுமட்டுமன்றி, தாவீதைக் காட்டிக்கொடுத்த சீபியர், அநியாயமாக 84 கடவுளின் குருக்களை வெட்டி படுகொலை செய்த தோயேகு உட்பட அவருடைய எதிரிகள் அனைவரும் அழியநேரிட்டது. அதனால்தான், தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’ ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டுள்ளேன்" என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது.
கடவுள்மீது ஆழமான பக்திகொண்டிருந்த ஏழை மனிதர் ஒருவர் இருந்தார். அவர் ஒருநாள் கடவுளிடம், “உங்களுக்காக எதையும் செய்யா நான் தயாராக இருக்கிறேன், நான் என்ன செய்யவேண்டுமென எனக்குக் கட்டளையிடுங்கள்” என்றார். அப்போது அவர்முன் தோன்றிய கடவுள், "உன் வேண்டுதலை நான் ஏற்றுக்கொண்டேன். நீர் போகுமிடமெல்லாம் இதனைச் சுமந்துகொண்டு போ" என்று கூறி மூட்டை ஒன்றை அவரிடம் கொடுத்தார். மேலும், "நான் சொல்லும்வரை இந்த மூட்டையை எக்காரணம் கொண்டும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்றும் அப்பக்தருக்குக் கட்டளையிட்டார். அந்த மூட்டை பார்ப்பதற்கு மிகவும் அழுக்கடைந்ததாகவும், அதிகம் பாரம் கொண்டதாகவும் தோன்றியது. ஆயினும், கடவுள்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கையாலும் அன்பினாலும் அதனை அவர் சுமந்துகொண்டு நடந்தார். இடையில் அவ்வப்போது சோர்வடைந்தார். அவர் அந்த மூட்டையைச் சுமந்து சென்றபோது, வழியில் அவரைப் பார்த்த அனைவரும் அவரைக் கேலியும், கிண்டலும், பரிகாசமும் செய்யத் தொடங்கினர். “இதெல்லாம் குருட்டு நம்பிக்கை” என்றும், “இந்த அழுக்கு மூட்டையை பேசாமல் தூக்கி எறிந்துவிட்டு போகவேண்டியதுதானே” என்றும், எள்ளிநகையாடினர். ஆனால் அந்த ஏழைப் பக்தர் அதுகுறித்தெல்லாம் சிறிதும் கவலைகொள்ளாமல், அதனை தூக்கிக்கொண்டு போனார். பல மாதங்கள் பயணித்தப் பிறகு ஓரிடத்தில் மிகவும் சோர்வாக வந்து அமர்ந்தார். அப்போது, அவர் முன் தோன்றிய கடவுள், “அன்பு மகனே, என் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, பல சிரமங்களுக்கு மத்தியில் இந்த மூட்டையை நீர் செல்லுமிடமெல்லாம் சுமந்து வந்திருக்கிறாய். நீ மட்டும் அதை சுமந்து வரவில்லை. மாறாக, உன்னோடு சேர்ந்து நானும் அதனை சுமந்து வந்திருக்கிறேன். உன்னை நான் தன்னந்தனியாளாய் விட்டுவிடவில்லை. இப்போது அந்த மூட்டையைத் திறந்து பார்” என்றார். அதனைத் திறந்து பார்த்த அவருக்கு மிகப்பெரிய வியப்பு ஒன்று காத்திருந்தது. ஆம்... அந்த மூட்டை முழுவதும் தங்கக் காசுகளும், வெள்ளியும் பொன்னும் நிறைந்திருந்தன. அப்போது கடவுள் அப்பக்தரைப் பார்த்து, “நீ, முணுமுணுக்காமல் மகிழ்ச்சியுடன் இந்த மூட்டையைச் சுமந்ததற்கான பரிசுதான் இது” என்று கூறிவிட்டு மறைந்தார்.
நமது வாழ்க்கை என்பது அழுக்கடைந்த ஒரு மூட்டை போன்றதுதான். அதனை கடவுள் நம் ஒவ்வருவருக்கும் கொடுத்து சுமக்கச் சொல்கின்றார். இறுதிவரை நம்பிக்கையோடு சுமப்பவர்கள் அதற்கான பரிசாகக் கடவுளின் என்றுமுள்ள கனிந்த பேரன்பையும், பரிவிரக்கத்தையும், வழிநடத்துதலையும், உடனிருப்பையும், உற்சாகத்தையும், உளம்நிறை மகிழ்ச்சியையும், அமைதியையும், நீடித்த நிலைவாழ்வையும் கொடையாகப் பெற்றுக்கொள்கின்றனர். மற்றவர்களோ, அவநம்பிக்கை எனும் தீயில் மாய்ந்து போகின்றனர். ஓர் இளைஞனராக தாவீது அனுப்புபவித்த இன்னல்கள் ஏராளம்! ஆனால் அத்தனையையும் அவர் விரும்பி சுமந்தார். அவர் ஒருநாளும் மனம் தளர்ந்ததும் இல்லை, கடவுளுக்கு எதிராக முறையிட்டதுமில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கைதான். ‘ஆண்டவர் துணையிருக்க ஆபத்து அணுகாது. மதில்போல் சூழ்ந்திடுவார் துன்பங்கள் நெருங்காது’ என்ற அசாத்திய துணிச்சலுடன் பயணித்தார் தாவீது. அவரது பயணத்தில் துன்பங்கள், சோர்வுகள், மனத்தளர்வுகள், துயரங்கள், வேதனைகள், கவலைகள் என எல்லாமே இருந்தன. அதனைக் கண்டிப்பாக நாம் மறுப்பதற்கில்லை. ஆனாலும் இவை அனைத்திலும் அவர் ஒருபோதும் இறைநம்பிக்கையை இழந்ததில்லை. இப்படிப்பட்டதொரு மனநிலையைத்தான் நாம் தாவீதிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தாவீது தான் இஸ்ரயேல் மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்யப்படுவதற்கு முன்பு, இத்தகைய சோதனைகள் வழியாக அரசர் என்னும் உயர்ந்த பொறுப்புக்கு கடவுள் அவரைப் பக்குவப்படுத்தினார் என்றே நாம் சொல்ல வேண்டும். பொதுவாக, ஓர் அரசரின் வாழ்க்கையில் மோதல்கள், கைவிடல்கள், காட்டிக்கொடுத்தல்கள், மறுதலித்தல்கள், ஏமாற்றுவேலைகள் எல்லாம் இருக்கும். தான் அரசப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக இவையெல்லாவற்றிலும் அவர் பயிற்சிபெற்று தேர்ச்சிபெற்றார் என்றே சொல்ல வேண்டும். இறையச்சம், இறைநம்பிக்கை, பொறுமை இவை மூன்றையும் தாவீது ஒருபோதும் இழக்கவே இல்லை. இவைதான் அவரை ஆட்சி அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தது.
இதன்காரணமாகவே, "ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்; மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்" (திபா 23:1-4) என்றும், “என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்” (திபா 145:1-3,8-9) என்று கடவுளை மகிழ்ச்சிபொங்க பாடுகிறார் தாவீது. ஆகவே, தாவீது அரசரைப் போன்று இறைநம்பிக்கையில் ஆழமாக வேரூன்றுவோம். இவ்வருளுக்காக இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.
ஒரு சிறிய செபத்துடன் இன்றைய விவிலியத்தேடலை நிறைவு செய்வோம். அன்பான ஆண்டவரே, எங்கள் அன்பர் தாவீதின் ஒப்பற்ற கடவுளே! எங்களைக் கருணைக்கண்கொண்டு நோக்கும். எங்கள் வாழ்வில் எத்தனையோ நம்பிக்கையற்ற தருணங்களில் மிகவும் மனமொடிந்து போகின்றோம், சோர்வடைந்து விடுகின்றோம். எழுந்து வந்து எங்களைத் தேற்றும் ஆண்டவரே. உமது அடியான் தாவீதை துன்ப வேளையில் கரம்கொடுத்து நீர் தூக்கிவிட்டதுபோல, ஆறுதலும் தேறுதலும் அளித்ததுபோல, எங்களுக்கும் உதவும். எந்தவொரு சூழ்நிலையிலும் எங்கள் இறைநம்பிக்கையை இழந்துவிடாதிருக்க உதவும், எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எங்களுடன் உடன்பயணித்து உமக்குகந்த உன்னதமான வழியில் எங்களை நடத்தியருளும் ஆமென்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்