விவிலியத் தேடல்: திருப்பாடல் 55-2, உறவுகளில் உண்மைத்தன்மை ஒளிரட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'தூய நட்பைப் பேணுவோம்' என்ற தலைப்பில் 55-வது திருப்பாடலில் 1 முதல் 8 வரை உள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்துவரும் 9 முதல் 15 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை இறைபிரசன்னதில் வாசிக்கக் கேட்போம். “என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும்; ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்’. இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர்; கேடும் கொடுமையும் அதில் நிறைந்திருக்கின்றன. அதன் நடுவே இருப்பது அழிவு; அதன் தெருக்களில் பிரியாதிருப்பன கொடுமையும் வஞ்சகமுமே! என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல; அப்படியிருந்தால், பொறுத்துக்கொள்வேன்; எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல; அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக்கொள்வேன். ஆனால், அவன் வேறு யாரும் அல்ல; என் தோழனாகிய நீயே; என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான். நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்; கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்; என் எதிரிகளுக்குத் திடீரெனச் சாவு வரட்டும்; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்; ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில் அவர்கள் நடுவிலேயே தீமை புகுந்து விட்டது” (வச. 9-15)
இங்கே தனது எதிரிகளின் கலகச் செயல்பாடுகளையும் வஞ்சனை நிறைந்த அவர்களது கொடிய திட்டங்களையும், தன்னை பழிதீர்க்க அவர்கள் எடுக்கும் கொடிய வழிமுறைகளையும் குறித்துக் கடவுளிடம் முறையிடுகிறார் தாவீது அரசர். முக்கியமாக, துரோகம் குறித்து கடவுளிடம் பேசுகிறார் தாவீது. ஓர் அரசனுடைய வாழ்வில் இது தவிர்க்கமுடியாதது என்பதை நாம் முன்னரே சிந்தித்தோம். தாவீதுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை இன்னும் ஆழப்படுத்திச் சிந்திப்பதற்கு முன்பாக, துரோகத்தின் இலக்கணம், அது வெளிப்படுத்தும் பல்வேறு அர்த்தங்கள், செயல்பாடுகள் குறித்து சிறிது அறிந்துகொள்வோம். துரோகம் குறித்து முனைவர் சேதுராம் இவ்வாறு குறிப்பிடுகின்றார். "மனித வாழ்க்கையில் பல்வேறு நிகழ்வுகள் நிகழ்கின்றன. அந்நிகழ்வுகள் இயல்பாக இருந்தால் நலம். ஆனால் அதுவே இயல்புக்கு மாறாக, நம்பியவர்களால் இடையில் மாற்றப்பட்டு இயற்கைக்கு முரணாக நடப்பின் அது துரோகம் என்று கருதப்படுகிறது. இத்துரோகம் என்பது தொன்று தொட்டு இன்றுவரை நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இடத்திற்கு இடம், காலத்துக்குக் காலம் இத்துரோகத்தின் அடையாளங்களும், நடைமுறைகளும் மாறுகின்றன. அல்லது அத்துரோகச் செயல்களுக்குக் காரணமானவர்கள் தங்களை நிறம் மாற்றிக் கொள்கின்றனர். துரோகத்தைப் பச்சைத் துரோகம், வஞ்சகம், நய வஞ்சகம், நம்ப வைத்துக் கழுத்தறுத்தல், இரண்டகம், கழுத்தறுத்தல், உள்ளிருந்தே ஊட்டியறுத்தல், கருவறுத்தல், பசப்புதல், குள்ளநரித்தனம், கூட இருந்தே குழிபறித்தல், கவிழ்த்தல், ஈரத்துணி போட்டுக் கழுத்தையறுத்தல், சிரித்துக்கொண்டே கழுத்தையறுத்தல், முதுகில் குத்துதல், நடித்தல், நரிவேலை செய்தல், சகுனித்தனம் செய்தல், நாற்றங்கால் வேலை செய்தல் என்று பல்வேறுவிதங்களில் வழக்கத்தில் கூறுவர். அனைவரது வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் துரோகம் இழையோடியிருக்கும். துரோகம் இல்லாத இடம் எதுவுமில்லை என்று கூறலாம். நட்பும் நம்பிக்கையும் தோன்றும் போதே அங்குத் துரோகம் முளைவிடுகிறது. வரலாற்றில் பல வீரர்கள் துரோகத்தாலேயே வீழ்த்தப்பட்டனர். பேராசை துரோகத்தை விளைவிக்கின்றது.
பகைவன் நமக்கு எதிராகச் செயல்பட்டால் அது நமக்கு நன்கு தெரியும். அது துரோகமல்ல. ஏனெனில் அவன் என்ன செய்வான்? எப்படி நம்மிடம் நடந்து கொள்ளப் போகிறான் என்பதனை நாம் கணித்து விடலாம். ஆனால் நம்முடனேயே உண்டு, உறங்கிப் பழகியவர்கள் நமக்குக் குழி பறிக்கின்ற போதுதான் அது துரோகம் எனப்படுகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் யார் மீதும் அதிகமான நம்பிக்கை வைத்தல் கூடாது என்று கூறியுள்ளனர். நாம் நம்பிக்கை வைத்தவர்கள் நம் நம்பிக்கைக்கு மாறாக நடந்தால் நம்பிக்கை சிதறித் துரோகம் அங்கு வேரூன்றுகிறது. நம்பிக்கையின்றி வாழ்தல் கூடாது. அதேவேளையில், பிறரை நம்பி நாம் மோசம் போய்விடவும் கூடாது. ஒவ்வொருவரும் நம்பிக்கையால் வாழ்ந்து நம்பிக்கையாலேயே அழிகின்றார்கள். இத்துரோகங்களையும் துரோகிகளையும் உணர்ந்து, அறிந்து நடந்து கொண்டால் நாம் வாழ்வில் ஏமாற்றத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்காது. துரோகிகளிடம் இருந்து நம்மையும் நம் வாழ்க்கையையும் காத்துக் கொள்ளலாம். துரோகம் இழைப்பவர்கள் எல்லாக் காலத்திலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் துரோகங்களின் விழுக்காடு அதிகரித்துக் கொண்டேதான் வந்திருக்கிறது. வரலாறு முழுக்கத் துரோகங்கள் நிறைந்தது. இத்துரோகங்களை நாம் படிக்கின்ற போது நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்றது. வரலாற்று நாயகர்களின் துரோக வீழ்ச்சி நமக்கு எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற படிப்பினையைத் தருகின்றது.
தாவீதைப் பொறுத்தமட்டில் அவர் முதலில் சந்தித்ததே மன்னர் சவுலின் துரோகம்தானே! சவுல் தாவீதைக் கொல்லத் தேடியபோது அவரிடமிருந்து அவர் தப்பி ஓடினார். அப்போது அவர் இருக்கும் இடத்தை அறிந்த சிலர் சவுலிடம் அவரைக் காட்டிக்கொடுக்க முற்பட்டனர். ஆனால் கடவுளின் பெருந்துணையால் அவர் தப்பிப் பிழைத்தார். அதன் பிறகு தோயேகு என்பவன் எப்படியெல்லாம் தாவீதை பற்றி மன்னர் சவுலிடம் போட்டுக்கொடுத்து அவரை பழிதீர்க்க முனைந்தான் என்பதை நாம் அறிவோம். இத்தனைத் துயரங்களையும் துரோகங்களையும் கடந்து அவர் இஸ்ரயேல் மக்களின் மாபெரும் அரசராகத் திருப்பொழிவு செய்யப்பட்டு சிறப்பாக ஆட்சி செய்துகொண்டிருந்த வேளை, இப்படிப்பட்டதொரு துயரம் அவரது வாழ்வில் நிகழ்கிறது. எதிரிகளெல்லாம் ஓரணியில் திரண்டு வந்து, இறையச்சமும் மாசற்ற மனமும் கொண்டு விளங்கும் தாவீது அரசருக்கு எதிராகப் போரிட்டால் அவர் என்ன செய்ய முடியும். ஒருபுறம் அவரது மகன் அப்சலோம் செய்த தந்திரமான செயல், மறுபுறம் அவருடைய ஆலோசகர் அகிதோபல் செய்த துரோகச் செயல் இரண்டும் சேர்ந்துகொண்டு அவரை வாட்டி வதைக்கின்றன. வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக அல்லவா ஆகியிருக்கிறது இது! பெரும்பாலான இஸ்ரயேல் மக்களின் தலைவர்களை அப்சலோம் தனது பக்கம் இழுத்திருக்கிறான் என்றால் அவன் எத்தனை பெரிய சித்துவிளையாட்டுகளை விளையாடியிருக்க வேண்டும்? எத்தனை சதித்திட்டங்களை அவன் அரங்கேற்றியிருக்க வேண்டும்? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்தால் எப்படி இருக்கும்? அதனால்தான், “என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல; அப்படியிருந்தால், பொறுத்துக்கொள்வேன்; எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல; அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக்கொள்வேன். ஆனால், அவன் வேறு யாரும் அல்ல; என் தோழனாகிய நீயே; என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான். நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்; கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்" என்று எடுத்துக்காட்டுகிறார் தாவீது.
ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் 1756-ஆம் ஆண்டு பிறந்தவர் தீரன் சின்னமலை. அவரின் பிறப்பிடமான கொங்கு நாடு, அப்போது மைசூர் மன்னர்களால் ஆளப்பட்டது. சின்னமலை போர்க் கலைகளான வாள் பயிற்சி, வில்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வயதிலேயே போர் வீரராக உருவெடுத்தார். ஓடிக்கொண்டிருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவர் சின்னமலை. இயல்பாகவே தலைமைப் பண்புடன் வளர்ந்த சின்னமலை, தனது மக்களைக் கொடுமைப்படுத்தியவர்களை எதிர்த்துப் போரிட நினைத்தார். அதற்காகப் படை திரட்ட மைசூர் சென்றார். அங்கே திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்க்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் ஒன்றாகக் கைகோர்த்தனர். இதையறிந்த ஆங்கிலேயப் படை இவர்களை உடனே எதுவும் செய்ய முடியாமல், நேரம் பார்த்து ஒழிக்கக் காத்திருந்தது. ஆனாலும் சின்னமலை-திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயர்களை தோற்கடித்துக்கொண்டிருந்தது. 1799-ஆம் ஆண்டில் நடைபெற்ற நான்காம் மைசூர்ப் போரில் திப்பு மரணம் அடைய, மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது. ஆனாலும் கொங்குநாட்டில் படைதிரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார் சின்னமலை. ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைத் தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை, யாராலும் வீரத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. எனவே சூழ்ச்சியால் சின்னமலையை வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, தங்கள் வலையில் விழச்செய்தனர். விலை போன நல்லப்பன், பழனிமலைக்கு அருகிலுள்ள வனத்தில் தீரன் சின்னமலை இருப்பதைக் காட்டிக் கொடுத்தான். தீரன் சின்னமலையையும், அவர் தம்பிகள் மற்றும் படைவீரர்களையும் கைது செய்து, அவர்களை சங்ககிரி கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், 1805-ஆம் ஆண்டில் ஆடிப்பெருக்கான 18-ஆம் நாளன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீர மரணமடைந்தார்.
தாவீதின் வம்சத்திலிருந்து வந்த நமதாண்டவர் இயேசுவும் அவரது சீடர்களில் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு தியாக மரணமேற்றார். இவ்விதத்தில் இயேசுவின் வாழ்வும் தாவீது அரசரின் வாழ்வும் இங்கே ஒன்றிணைந்து செல்வதைப் பார்க்கின்றோம். துரோகங்களின் வரலாறு மிகவும் கொடியது. ஆகவே, நமது அன்றாட வாழ்வில் நமது உறவுமுறைகளில் உண்மைத்தன்மையுடன் நடந்துகொள்வோம். ஆட்சி மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்போம். இத்தகைய அருளை இறைவன் நமக்கு வழங்கிட இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்