விவிலியத் தேடல்: திருப்பாடல் 55-3, ஆதரவளிக்கும் ஆண்டவர்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'உறவுகளில் உண்மைத்தன்மை ஒளிரட்டும்!' என்ற தலைப்பில் 55-வது திருப்பாடலில் 9 முதல் 15 வரை உள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்தோம். அதில் நமது அன்றாட வாழ்வில் நமது உறவுமுறைகளில் உண்மைத்தன்மை இருக்கவேண்டும் என்பதைத்தான் அன்றைய நாள் விவிலியத் தேடல் சிந்தனைகள் நமக்குப் படிப்பிக்கின்றன என்றும் உணர்ந்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 16 முதல் 23 வரையுள்ள இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவு செய்வோம். இப்போது அமைந்த மனதுடன் இறைவனின் வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்போம். "நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்; ஆண்டவரும் என்னை மீட்டருள்வார். காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்; அவர் என் குரலைக் கேட்டருள்வார். அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்; என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார். தொன்றுதொட்டு அரியணையில் வீற்றிருக்கும் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்; அவர்களைத் தாழ்த்திவிடுவார்; ஏனெனில், அவர்கள் தம் நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை; கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை. தன்னோடு நட்புறவில் இருந்தவர்களை எதிர்த்து அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்; தன் உடன்படிக்கையையும் மீறினான். அவன் பேச்சு வெண்ணெயிலும் மிருதுவானது; அவன் உள்ளத்திலோ போர்வெறி; அவன் சொற்கள் எண்ணெயிலும் மென்மையானவை; அவையோ உருவிய வாள்கள். ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்; கொலைவெறியரும் வஞ்சகரும் தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்; ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்" (வச. 16-23).
அன்பர்களே, நாம் தியானிக்க எடுத்துக்கொண்ட இன்றைய இறைவார்த்தைகள் இத்திருப்பாடலின் மூன்றாம் பகுதி என்பதை நாம் இப்போது நினைவில் கொள்வோம். இப்பகுதியில் கடவுள் தகுந்த நேரத்தில் தனக்காக உதவிபுரிவார் என்று உறுதியாக நம்புகிறார் தாவீது. 16 முதல் 23 வரையுள்ள இந்த இறுதிப்பகுதியும் மூன்று விதமான சிந்தனைகளைக் கொண்டுள்ளன. முதலாவதாக, "நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்; ஆண்டவரும் என்னை மீட்டருள்வார். காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்; அவர் என் குரலைக் கேட்டருள்வார். அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்; என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார். தொன்றுதொட்டு அரியணையில் வீற்றிருக்கும் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்; அவர்களைத் தாழ்த்திவிடுவார்" என்கின்றார் தாவீது. அவரின் இந்த வார்த்தைகளில் கோலியாத்தைக் கொன்றொழித்தது, தோயேகுவை வென்றது, தன்னைக் காட்டிக்கொடுக்க முனைந்த சீபியர் கரங்களிலிருந்து தப்பியது, சவுலின் கொலைவெறி முயற்சிகளிலிருந்து தப்பிப் பிழைத்தது, இஸ்ரயேல் மக்களின் எதிரிகளை வீழ்த்தி வெற்றிபெற்றது என கடவுள் தனக்களித்த எல்லாவிதமான வெற்றிகளையும் நினைவு கூர்ந்துதான், "அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்; என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்" என்று உரைக்கின்றார் அவர். ஆகவே அப்போது காத்ததுபோலவே இப்போதும் தன்னைக் காக்க வேண்டும் என்று கடவுளிடம் முறையிடுக்கின்றார் தாவீது அரசர்.
இரண்டாவதாக, “ஏனெனில், அவர்கள் தம் நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை; கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை. தன்னோடு நட்புறவில் இருந்தவர்களை எதிர்த்து அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்; தன் உடன்படிக்கையையும் மீறினான். அவன் பேச்சு வெண்ணெயிலும் மிருதுவானது; அவன் உள்ளத்திலோ போர்வெறி; அவன் சொற்கள் எண்ணெயிலும் மென்மையானவை; அவையோ உருவிய வாள்கள்" என்று தனது எதிரிகளின் பண்புகளை எடுத்துரைக்கின்றார் தாவீது. இங்கே சவுல் உட்பட தனது எதிரிகள் யாவரும் இறையச்சம் அற்றவர்கள் என்பதையும், அவரகள் மனம் மாறுவதற்கு கடவுள் எத்தனையோ சந்தர்ப்பங்களை வழங்கியும் அவர்கள் அதனை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் தாவீது. குறிப்பாக, தான் காட்டிய புனித நட்புக்குப் பதிலாக அவர்கள் துரோகம் இழைத்தவர்கள் என்பதையும் அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசக் கூடியவர்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர்.
இங்கே முக்கியமானதொரு நிகழ்வை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி, சனிக்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் Burgenstock சுற்றுலா மகிழ்விடம் ஒன்றில் நடைபெற்ற உலகத் தலைவர்களின் அமைதி உச்சி மாநாட்டில் நிகழ்திய உரையின்போது குழந்தைகளும் கூட கொடூரமாகக் கொல்லப்படும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு உலகத் தலைவர்களிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் உக்ரைன் நாட்டின் அரசுத் தலைவர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி. அதேவேளையில், உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு இரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இரண்டு நிபந்தனைகளை விதித்தார். முதலில், உக்ரேன் தனது படைகளை டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன் மற்றும் சபோரீஷியா ஆகிய பகுதிகளிலிருந்து திரும்பப் பெற வேண்டும். இரண்டாவதாக, யுக்ரைன் நேட்டோவில் சேரக் கூடாது. இதற்குப் பதிலளித்த உக்ரைன் அரசுத் தலைவர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி அவர்கள், புதினின் போர்நிறுத்த முன்மொழிவு ஓர் இறுதி எச்சரிக்கை போலத் தெரிகிறது என்றும், இதை நம்ப முடியாது என்றும் கூறினார். மேலும் போர்நிறுத்தம் தொடர்பான அவரது நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் புதின் இராணுவத் தாக்குதலை நிறுத்த மாட்டார் என்றும் தெரிவித்தார்.
இதுமட்டுமன்றி இன்னொரு முக்கியமான செய்தியையும் ஜெலென்ஸ்கி கூறினார், அதாவது, புதினின் இந்தச் செய்திகள், ஹிட்லர் கூறிய செய்திகள் போல உள்ளன என்றார். ஹிட்லர் அப்படி என்னதான் சொன்னார் என்று பார்த்தால், அவர் கூறியது நமக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ''செக்கோஸ்லோவாக்கியாவின் ஒரு பகுதியை எனக்குக் கொடுங்கள், நான் போரை முடித்துக் கொள்கிறேன்' என்று ஹிட்லர் கூறினார். அது முழுப் பொய். அதற்குப் பிறகு போலந்தின் ஒரு பகுதியை ஹிட்லர் கேட்டார். ஆனால் அதற்குப் பிறகும் கூட, ஐரோப்பா முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஹிட்லர்," என்று எடுத்துக்காட்டினார் ஜெலென்ஸ்கி.
அவ்வாறே, நம் இந்தியாவில் கூட்டணி கட்சிகளின் துணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி, தனது எதிரிகளையும், தனது வெற்றிக்குறித்து பேசாத பத்திரிகைகளையும் பழிவாங்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. 4 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் ஒரு கருத்தரங்கில் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஷேக் உசைன் ஆகிய இருவர்மீதும் கொடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் வழக்குப் பதிவு செய்ய அண்மையில் அனுமதி வழங்கினார், டெல்லி துணை நிலை ஆளுநர். இதனை மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்தது. மோடி தலைமையிலான ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் பேச்சுரிமை - கருத்துரிமை தொடர்ச்சியாக மறுக்கப்படும் மோசமான சூழல் நிலவுகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் - மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து - 36 ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் 16 பேர் கொடூரமான ஊபா சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டு சிறையில் வாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர 28 ஊடகவியலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்பதை எண்ணும் போது சனநாயக இந்தியாவில் ஊடக மற்றும் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். உலக அளவில் ஊடக சுதந்திர குறியீட்டு அளவில் (Press Freedom Index) இந்தியா 161 இடத்தில் உள்ளதை Reporters Without Frontiers போன்ற பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் மிகுந்த ஆதங்கத்தோடு குறிப்பிடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இறுதியாக, "ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார். கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்; கொலைவெறியரும் வஞ்சகரும் தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்; ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்" என்று கூறி இத்திருப்பாடலை நிறைவு செய்கின்றார் தாவீது. தனது எதிரிகளின் கொடிய செயல்களைக் கடவுளிடம் எடுத்துரைத்த தாவீது, இங்கே தனது இறைநம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். தனது எதிரிகளான தோயேகு வீழந்தான், அவருக்கு எதிராக எழுந்த அவரது உற்ற ஆலோசனையாளரான அகிதோபல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். "தன் அறிவுரை ஏற்றுக்கொள்ளபடவில்லை என்று கண்டதும் அகிதோபல் தன் கழுதைக்குச் சேணமிட்டு, தன் நகருக்குப் புறப்பட்டுத் தன் வீட்டை அடைந்தான். தன் வீட்டை ஒழுங்குபடுத்திவிட்டு அவன் நாண்டு கொண்டு இறந்தான். அவனை அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தனர்" (காண்க 2 சாமு 17:23) என்று அவனது சாவு எடுத்துக்காட்டப்படுகிறது. இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்துக்கு என்ன நிகழ்ந்ததோ அதுவே அகிதோபலுக்கும் நிகழ்ந்தது என்பதையும், இறுதியாக, தாவீதுக்கு எதிராக எழுந்த மன்னர் சவுலும் எப்படி தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்பதையும் நாம் அறிவோம். ஆகவே, நமது வாழ்வில், தோல்விகள், துயரங்கள், இன்னல்கள், காட்டிக்கொடுத்தல்கள், மறுதலித்தல்கள் போன்றவை ஏற்படும்போதெல்லாம் மனம் தாளாமல் நமது கோட்டையும் அரணுமாகிய ஆண்டவரிடம் சரணடைவோம். இந்த அருளை இறைவன் நமக்கு வழங்கிட இந்நாளில் இறைவேண்டல் செய்வோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்