தேடுதல்

பச்சை மரங்களும் பட்ட மரமும் பச்சை மரங்களும் பட்ட மரமும்  (AFP or licensors)

விடை தேடும் வினாக்கள் – பச்சை மரமும் பட்ட மரமும்

நல்லவர்கள் துன்பங்களை அனுபவிப்பது ஏன்? துன்பம் ஏன்? மாசற்றவர் துன்புறுவது ஏன்? இறைவன், நீதியும், வல்லமையும் கொண்டவர் எனில், துன்பங்களைத் தடுக்காமல் இருப்பதேன்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  கல்வாரி மலை நோக்கி சிலுவையை சுமந்தபடி சென்று கொண்டிருக்கிறார் ஒரு மனிதர். அவர் அப்பகுதியில் மிக பிரபலம் என்பதால், பெருந்திரளான மக்களும், தேம்பியபடி பெண்களும் அவர் பின்னால் கண்ணீருடன் செல்கின்றனர். அவர்கள் மீது இரக்கம் கொண்ட அந்த தெய்வ மகன் அவர்களைப் பார்த்து, “எனக்காக அல்ல, மாறாக உங்கள் வருங்கால சந்ததியினருக்காக அழுங்கள், ஏனெனில், பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!” என்ற கேள்வியை முன்வைக்கிறார். இது ஆறுதலின் வார்த்தைகள் மட்டுமல்ல, விரைவில் நடக்கவுள்ளது குறித்த எச்சரிக்கை.  லூக்கா நற்செய்தி 23ஆம் பிரிவில் வரும் இந்த வார்த்தைகளை முதலில் வாசிப்போம்.

பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென்றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, “எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்களுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெனில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது ‘மலடிகள் பேறுபெற்றோர்’ என்றும் ‘பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்’ என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள், மலைகளைப் பார்த்து, ‘எங்கள் மேல் விழுங்கள்’ எனவும் குன்றுகளைப் பார்த்து, ‘எங்களை மூடிக்கொள்ளுங்கள்’ எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார்கள்!” என்றார் (லூக் 23, 27-31).

இங்கு இயேசு தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைக் குறித்தே இவ்வாறு எடுத்துரைத்தார் என்பர். குற்றமற்ற தனக்கே இந்த தீர்ப்பு என்றால், தீயோருக்கு எத்தகைய நிலை வரும் என்ற கேள்வியே இங்கு வைக்கப்படுகிறது. எப்பாவமும் அறியாத, கனி தரும் நிலையில் இருக்கும் பச்சை மரமே தீயிலிடப்படுகிறது என்றால், தீயவைகளையே ஆற்றி, எவ்வித பயனும் இன்றி இருக்கும் பட்டமரம் தீயிலிடப்படுவதற்கு எவ்வளவு நேரமாகும்? என வினவப்படுகின்றது. இன்னும் கொஞ்சம் ஆழமாக சென்றுப் பார்த்தோமானால், யூதர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குற்றமற்ற ஒருவரையே மரணதண்டனைக்கு தீர்ப்பளித்த உரொமையர்கள், தங்களுக்கு எதிராக கிளர்த்தெழ முயற்சிக்கும் யூத சமுதாயத்தை சும்மா விட்டு வைப்பார்களா? கி.பி. 70ஆம் ஆண்டில் இடம்பெற்ற யூத எழுச்சியில் உரோமையர்களால் இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர், ஏறக்குறைய 97000 பேர் கைதுச் செய்யப்பட்டனர். யூதர்களின் இரண்டாவது மிகப் பெரிய கோவிலும் சூறையாடப்பட்டு அழிவுக்குள்ளாக்கப்பட்டது. இதையும் மறைமுகமாக இயேசு குறிப்பிட்டிருப்பாரோ என சிலர் எண்ணுவதும் இயல்பே.

இந்த கி.பி. 70ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது, யூத பெண்கள் கண்டது என்ன? தங்கள் சொந்த குழந்தைகளே கொல்லப்பட்டதை நேரில் கண்டனர்.  இந்த குழந்தைகளைப் பெறாமல் இருந்திருக்கலாமே, உரோமையர்களின் வாள்களுக்கு இரையாக்கவா குழந்தைகளைப் பெற்றெடுத்தோம் என அரற்றினார்கள். இதையும் இங்கு முன்னறிவிக்கிறார் இயேசு. அப்போது ‘மலடிகள் பேறுபெற்றோர்’ என்றும், ‘பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறு பெற்றோர்’ என்றும் சொல்வார்கள் என்கிறார் இயேசு. இது மட்டுமல்ல, இப்படி வேதனைப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மடிகிறோமே, வேதனைகளைத் தாங்க முடியவில்லையே,  மலைகளே எங்கள் மேல் விழுங்கள், குன்றுகளே எங்களை மூடிக்கொள்ளுங்கள் என அழுது புலம்பினார்கள். இதைத்தான் தன்னைப் பின்தொடர்ந்த யூத பெண்டிரை நோக்கி முன்னறிவித்துள்ளார் இயேசு.  இத்தகைய வார்த்தைகளை நாம் திருவெளிப்பாடு நூல் 6ஆம் பிரிவிலும் காண்கிறோம். மண்ணுலகில் மக்கள் அனைவரும், மலைகளிடமும் பாறைகளிடமும், “எங்கள்மீது விழுங்கள், அரியணை மேல் வீற்றிருப்பவருடைய முகத்தினின்றும் ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது. அதற்குமுன் நிற்க யாரால் இயலும்?” என்று புலம்பினார்கள் (திவெ. 6 16,17).

குழந்தை பேறின்மை என்பது கடவுளின் சாபமாக பழைய ஏற்பாட்டு காலத்தில் (விப. 23:26; இச. 7:14; லேவி. 20:21) நோக்கப்பட்டிருக்க, இயேசுவோ, குழந்தை பேறு இல்லாதிருப்பதே ஒரு பேறு என எண்ணும் ஒரு கொடிய காலம் வரும் என உரைக்கிறார். குழந்தை வரம் இல்லாதோர் அது குறித்து மகிழும் காலம் எவ்வளவு கொடுமையானது?. இந்த கொடுமையையே பேறாக நினைக்கும் காலம் என்றால், அதைவிட எத்தனை பெரிய கொடுமைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டியிருந்தால் இந்த எண்ணம் வரும்?. ஆம், இலட்சக்கணக்கான யூதர்களின் படுகொலைகள்தான் அது. அதுவும் இயேசு கூறியதற்கும் ஏறக்குறைய 40 ஆண்டுகளிலேயே, அதாவது கி.பி. 70ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றது. இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. பச்சை மரங்களுக்கு ஏன் இந்த நிலை?. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், நல்லவர்கள் துன்பங்களை அனுபவிப்பது ஏன்? துன்பம் ஏன்? மாசற்றவர் துன்புறுவது ஏன்? இறைவன், நீதியும், வல்லமையும் கொண்டவர் எனில், துன்பங்களைத் தடுக்காமல் இருப்பதேன்? என்று நாம் எழுப்பிவரும் கேள்விகளுக்கு விடைகள் கல்வாரியில் கிட்டுகின்றன.

வல்லவரான இறைவன், தன் நன்மைத்தனம், அன்பு இவற்றின் வெளிப்பாடாக, இயற்கை அனைத்தையும், அதன் சிகரமாக மனிதரையும் படைத்தார். தான் படைத்த அனைத்தையும் தன் வல்லமையால் கட்டுப்படுத்த வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால், அவ்வாறே செய்திருக்கலாம். படைப்பு அனைத்தும், பரமனின் திட்டப்படி, அவர் விருப்பப்படி இம்மியும் பிசகாமல் இயங்கியிருக்கும். ஆனால், அத்தகைய படைப்பு, முடுக்கிவிடப்பட்ட கடிகாரம் போல, சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல, 'சுவிட்ச்' போடப்பட்ட இயந்திரம் போல, செயற்கைத்தனமாக செயல்பட்டிருக்கும். அத்தகையப் படைப்பு, இறைவன் அனைத்தும் வல்லவர் என்பதை மட்டுமே நிரூபித்திருக்கும். இறைவனின் நன்மைத்தனம், அன்பு ஆகியவை வெளிப்பட வாய்ப்பிருந்திருக்காது. ஆகவேதான் இயற்கையின் செயல்பாட்டிலும், மனிதரின் சுதந்திர முடிவுகளிலும் குறுக்கிடாமல், விலகி நிற்பதற்கு இறைவன் முடிவெடுத்தார். நல்லவை, தீயவற்றை அறிந்து முடிவெடுக்கும் திறனை மனிதர்களுக்கு வழங்கிய இறைவன், அத்திறனை மனிதர்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தும்போது குறுக்கிடுவதில்லை. இதற்கு மாறாக, மனிதர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் இறைவன் குறுக்கிட்டு, தன்னுடைய எண்ணங்களுக்குத் தகுந்ததுபோல் மனிதர்களைச் செயலாற்ற வைத்தால், மனிதர்கள் அனைவரும் இறைவனால் இயக்கப்படும் பொம்மைகளாக, 'ரோபோ'க்களாக மாறிவிடுவர்.

தன் அளவற்ற வல்லமையோடும், நன்மைத்தனத்தோடும் இயற்கையைப் படைத்த இறைவன், அதன் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை. எனவே, தன் நியதிகளின்படி இயங்கும் இயற்கையில் பேரிடர்களும், பிரச்சனைகளும் எழுகின்றன. அதேவண்ணம், தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்தும் மனிதர்களின் செயல்பாடுகளிலும் இறைவன் தலையிடுவதில்லை என்பதால், மனிதர்களிடையிலும் பிரச்சனைகள், துன்பங்கள் உருவாகின்றன. இத்தனைப் பிரச்சனைகள் குவிந்தாலும், அவற்றைக்கண்டு துவண்டுவிடாமல், அவற்றைத் தீர்ப்பதற்கு முன்வரும் மனிதர்கள் வழியே, இறைவனின் பிரசன்னம் இவ்வுலகில் தொடர்ந்து வருகிறது. எத்தனை துயரங்கள் மலிந்தாலும், மீண்டும், மீண்டும் வாழ விழையும் மனிதர்களே, இறைவன் வாழ்கிறார் என்பதற்குச் சான்று. பகலவனில் மட்டுமல்ல, இருளிலும், நிழலிலும் இறைவனைச் சந்திக்க முடியும். அழகாக இயங்கும் உலகில் அல்ல, அலங்கோலமான உலகிலும், பிறருக்கென வாழும் மனிதர்களில் இறைவனைச் சந்திக்க நம்மால் இயலும்.

மனித குலம் தோன்றியது முதல் நாம் விடை தேடுகின்ற கேள்விகளில் ஒன்று, 'தீமை எங்கிருந்து வந்தது?' கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், தீமை எப்படி வந்தது? கடவுள் நல்லவர் என்றால், அவர் தீமையை ஏன் அனுமதிக்கிறார்? தீமை இந்த உலகில் இருக்கிறது என்றால் கடவுள் வலிமை அற்றவரா? இப்படி நிறைய மெய்யியல் கேள்விகளை மனுக்குலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. 'நல்லவர்கள் ஏன் துன்புற வேண்டும்?' அல்லது 'நீதிமான்களுக்கு ஏன் கடவுள் துன்பத்தை அனுமதிக்க வேண்டும்?'. நம் துன்பத்திற்கான காரணத்தை நம்மால் பல நேரங்களில் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.

ஒன்றை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலோ நாம் நலம் பெறுவோம்!

யோவான் நற்செய்தியில் ''விபசாரத்தில் பிடிபட்ட பெண்'' பற்றிய கதை வருகிறது. கடவுள் பாவத்தை வெறுக்கிறார், ஆனால் பாவியை அவர் அன்புசெய்கிறார். இந்த உண்மையை நமக்கு இயேசு உணர்த்துகிறார். அது மட்டுமல்ல, மனிதரில் யாருமே தம்மில் பாவம் இல்லை என்று கூற முடியாது. கடவுளிடமிருந்து அகன்று சென்று, அவரைக் கைவிட்டுவிடுகின்ற நேரங்கள் நம் வாழ்வில் உண்டு. எனவே, பிறரைத் தீர்ப்பிடுவதற்கு முன்னால் நாம் நம்மையே தீர்ப்பிட வேண்டும். நம் தீர்ப்புகளாலேயே நாம் எத்தனை முறை பச்சை மரங்களை எரித்திருக்கிறோம்?. நமக்கு ஏன் இத்தனை துன்பம் என்ற கேள்வியை எழுப்புவதற்கு முன்னால், எந்த குற்றமும் செய்யாமல் தண்டனைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். அதேவேளை, கடவுளின் பார்வையில் நாம் எவ்வாறு தோற்றமளிக்கிறோம் என்பதை நாம் கருத வேண்டும்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஓர் எதிர்காலம் உண்டு. ஒவ்வொரு புனிதருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு என்பார் ஆங்கில இலக்கியவாதி ஆஸ்கர் வைல்டு.

விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணின் பாவத்திற்கே கல்லால் எறிந்து தண்டனை என்றால் நம் பாவத்திற்கான தண்டனையை கற்களால் கொடுக்க முடியாது என்று அறிந்ததால்தான் கற்களை விட்டுவிட்டு நாம் அங்கிருந்து விலகிச் சென்றோம். பட்ட மரத்திற்கு என்ன நடக்கும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். இருப்பினும் எந்த பாவியையும் இயேசு கைவிடுவதில்லை. நோயற்றவர்களையல்ல, நோயுற்றவர்களை நாடியே நான் வந்தேன் என அறிவித்த இயேசு நம்மோடிருப்பார், நம்மைத் தூக்கிவிடுவார். பச்சை மரத்திற்கே ஏற்பட்ட நிலைகளை எண்ணி, நம் வாழ்வை திருத்த முன்வரும்போது பட்ட மரம் துளிர்க்கும் அதிசயம் நடக்கலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2024, 14:20