தேடுதல்

சீடர்களின் பாதங்களை கழுவிய இயேசு சீடர்களின் பாதங்களை கழுவிய இயேசு 

விடை தேடும் வினாக்கள் – இங்கு யார் பெரியவர்?

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன் (லூக் 22:27) என்று இயேசு கேட்ட கேள்விகளையும் அவர் தொடர்ந்து அளித்த பதிலையும் குறித்து இன்றைய நம் ஒலிபரப்பில் நோக்குவோம்.

பாஸ்கா நிகழ்வுப் பதிவில் இயேசுவின் வார்த்தைகளை லூக்கா இவ்வாறு பதிவு செய்கிறார். தங்களுக்குள் யார் பெரியவர் என்ற கேள்வி சீடர்களிடையே எழுந்தபோது இயேசு இந்த வார்த்தைகளை பயன்படுத்தியதாக லூக்கா நற்செய்தியாளர் எடுத்துரைக்க, எருசலேம் செல்லும் வழியில் செபதேயுவின் மக்கள் இருவரின் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, இயேசு இவ்வாறு கூறியதாக, அதாவது, உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும் (மத் 20:26-27. மாற் 10:43-44) என மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளதாகக் காண்கிறோம்.

யார் பெரியவர் என்பதுதான் இங்கு கேள்வி. அதனைத் தொடர்ந்து வரும் இயேசுவின் கேள்விகளும் பதிலும் விடையை மிக அருகில் கொண்டுவருபவைகளாகவும்,  கேள்வியை முழுமையாக புரிந்துகொள்ள உதவுபவைகளாகவும் உள்ளன.

இதே கேள்வி நம் வாழ்விலும் பலமுறை உருவாகியுள்ளது. சிலவேளைகளில், அம்மா பெரியவர், அப்பா பெரியவர் என்று நினைப்போம். அதன்பின் சில காலம் அண்ணன், அதற்கடுத்து ஆசிரியர் பெரியவர் என்ற நினைப்பு வரும். திடீர் என்று ஒரு நண்பர் பெரியவர் என்று நினைப்போம். இப்படியேப்போய், எல்லாருமே பெரியவர்கள் என்று நினைத்துவிடும் காலமும் வரும். இதற்கு பின்தான் திடீரென்று ஓர் அதிசயம் பலர் வாழ்வில் நடக்கும். ‘நானே பெரியவன்!’ என்று நினைத்து நம்பத் தொடங்குவோம். நம்மைவிட மற்றவர் பெரியவர் என்ற நிலையிலிருந்து தடுமாறி நாமே பெரியவர் என்று நினைப்பது சரியில்லை என்பதற்குத்தான், இயேசு இங்கு பதிலளிக்கிறார். அதாவது, பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராக, பணியாளராக இருக்கட்டும் என உரைக்கிறார்.  இறையாட்சிக்கும் அரசியல் ஆட்சிக்கும் வித்தியாசம் காட்டுகிறார். அரசியல் ஆட்சியில் அடிமைத்தனங்களே நன்கொடை என்பதை அழகாக சித்தரிக்கும் இயேசு, இறையாட்சியில் அதிகாரம் கிடையாது, தன்னையொட்டி சேவை மட்டுமே உள்ளது என்கிறார்.

ஆனால் மனிதன் என்ன நினைக்கிறான்?. தான்தான் பெரியவன் என்று நினைப்பது மட்டுமல்ல, இறைவனையே புறம் தள்ளிவிட்டு, தான் தான் முக்கியமானவன், தான் தான் பெரியவன் என நினைப்பதும் உண்டு. தனக்கு மேல் இறைசக்தி என்று எதுவும் இல்லை என நினைப்பதால்தானே நாத்திகம் பிறக்கிறது. இறைவனைவிட தான் பெரியவன் என நினைத்த நிகழ்வுகள் பலவற்றை வரலாற்றில் கூட நாம் பார்த்திருக்கிறோம். அக்பர்- பீர்பால் வாழ்வில்கூட இத்தகையதொரு நிகழ்வு வந்துள்ளது.

அக்பர் சக்ரவர்த்தி ஒரு நாள் சபையில் அமர்ந்திருந்த அறிஞர்களை நோக்கி, “அறிஞர் பெருமக்களே! நான் பெரியவனா, கடவுள் பெரியவரா? என்ற ஐயம் என் மனதில் எழுந்துள்ளது. இந்த வினாவுக்குத் தக்க காரணத்துடன் பதில் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

அக்பரை விட கடவுள் பெரியவர் என்பதை சொல்லவே தேவையில்லை. ஆனால் அரசர் கோபித்துக் கொள்வாரே என எண்ணி மற்றவர்கள் மௌனமாக இருந்தார்கள். மதிநுட்பம் வாய்ந்த அறிஞரான பீர்பால் எழுந்து நின்றார்.

“மன்னர் பெருமானே, இந்த விடயத்தில் சந்தேகத்துக்கு என்ன இடம் இருக்கிறது? கடவுளை விடத் தாங்கள்தானே பெரியவர்?” என்று கூறினார் பீர்பால்.

அக்பருக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

“மதியூகி பீர்பாலே, உமது கூற்றைத் தக்க காரணத்துடன் விளக்கும்…” என்றார் அக்பர்.

“சக்ரவர்த்தி அவர்களே, என்னைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்னை நாடு கடத்திவிடத் தங்களால் முடியும்! ஆனால் கடவுளுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் என்னை நாடு கடத்த முடியாது” என்றார் பீர்பால்.

“எப்படி?” என்று வினவினார் அக்பர்.

“உங்கள் ஆட்சிக்குள் இருக்கும் பகுதிகள் ஓரளவுக்குத்தான்! அதனால் உங்களுக்குப் பிடிக்காதவரை அடுத்த நாட்டுக்கு விரட்டியடித்து விடலாம். ஆனால் கடவுளுடைய ஆளுகையோ பூமியில் மட்டுமன்றி அண்டசராசரங்களிலும் பரவியிருக்கின்றது. ஆகவே அவர் எவ்வாறு ஒருவனை நாடு கடத்த முடியும்? ஒருவனை கடவுள் எங்கே விரட்டியடித்தாலும் அவன் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்தானே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க முடியும்?” என்று கேட்டார் பீர்பால்.

பீர்பால் தனக்குச் சரியான பாடம் கற்பித்துவிட்டார் என்பதை அக்பர் உணர்ந்தார்.

ஆம். கடவுள்தான் அனைத்திலும் உயர்ந்தவர். ஆனால், இறைமகன் இயேசு பணிவிடை பெறுவதற்கல்ல, பணிவிடை புரிவதற்கே வந்தேன் என்று அறிவித்து அதனை செயலில் காட்டியவர். ‘யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன்’ (லூக் 22:27) என்று கூறிய இயேசு, ‘பெரியவர்’ என்ற நிலையிலிருந்து எழுந்து, பந்தியில் அமர்ந்த எல்லாரையும் பெரியவராக்குகிறார். தானே தண்ணீரை எடுத்து சீடர்களின் காலடிகளைக் கழுவுகின்றார். காலடி என்பது நம் ஒவ்வொருவரின் ஆதாரம். நம்மை நிலத்தோடு இணைக்கும் இணைப்புக் கோடு நம் பாதம். நாம் இம்மண்ணில் வேரூன்றி நிற்க உதவுவது பாதம். காலடிகள் ஒருவரின் ஒட்டுமொத்த ஆளுமையைக் குறிக்கின்றன. ஆகையால்தான், நாம் அடுத்தவரின் காலடிகளில் விழுகின்றோம். கடவுளின் காலடியைத் தொட்டு வணங்குகின்றோம். ஆக, தம் சீடர்களின் முழு ஆளுமையைத் தூய்மைப்படுத்தி, துண்டால் துடைக்கின்றார் இயேசு. இதற்கு அவர் பணிவிடை புரிபவராக மாறுகிறார். அடுத்தவர் நிலைக்கு இறங்கி வருகிறார். அடுத்தவரை பெரியவர் நிலையில் வைத்துப்பார்க்கிறார். நம்மால் இதனை ஆற்ற முடியுமா என சிந்திக்க வேண்டும். மற்றவர் நிலைக்கு நாம் இறங்கி வரலாம், ஆனால் மற்றவரை பெரியவர் என்ற நிலையில் வைத்துப் பார்க்கும் மனநிலை நமக்கு வருமா?

முதலில் அதற்கு, ‘நான் யார்?’ என்ற தேடலை முழுமையாக அறிந்துகொண்டவுடன்,  ‘நான் யாருக்காக?’ என்ற அடையாளத்திற்கு நகர வேண்டும். ஏனெனில், ‘நான் யார்?’ என்ற அடையாளம் பலவேளைகளில் சாதி, படிப்பு, பதவி, பணம், உறவு நெருக்கம் என்பவைகளின் அடிப்படையில் நம்மை அண்மையிலிருப்போரிடமிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுத்திவிடும். ஆனால், ‘நான் யாருக்காக?’ என்ற நிலையில் நம்மை அறியும்போது நம் இலக்கும், வாழ்வின் நோக்கமும் தெளிவாகிறது.

நான் யாருக்காக, எதற்காக படைக்கப்பட்டேன் என்ற உண்மை நிலை புரிந்து, நம்மை விட தாழ்நிலையில் இருப்போரின் மேம்பாட்டிற்காக, அதிலும் நம் நிலையில் அவர்களை வைக்கவேண்டும் என உழைக்கும்போதுதான் நாம் பெரியவராகிறோம். ஏனெனில், நம் நிலைக்கு மற்றவர் உயரவேண்டும் என நாமே அவர்களுக்காக உழைப்பது மனித இயல்புக்கு எதிரான போராட்டம். அது ஓர் அரிய செயல். யார் பெரியவர் என வள்ளுவப் பெருந்தகையைக் கேட்டால் இதைத்தான் அவரும் பதிலாகக் கூறுவார்.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

செய்வதற்கு அரிய செயல்களை செய்பவர் பெரியவர் என்ற அவரின் கூற்றைத்தான் இயேசுவின் பதிலிலும் காண்கிறோம். மற்றவர்களை நம் எஜமானனாக்கி அவர்களுக்கு பணிவிடை புரியும் நிலைக்கு இறங்கிவரும் அரியச் செயலைத்தான் இயேசு செய்தார். அதைத்தான் நாமும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறாயா, உங்களுக்குப் பணியாளராக இரு எனக் கூறி வரலாற்றையே புரட்டிப் போடுகிறார் இயேசு. வரலாற்றில் நாம் பார்ப்பதென்ன?

காயின் ஆபேலைத் தாக்கக் காரணமாக இருந்தது, 'யார் பெரியவர்?' என்ற உந்துணர்வே. மக்கள் பாபேல் கோபுரம் கட்ட முனைந்ததும், யாக்கோபு ஏசாவை ஏமாற்றி தலைப்பேறு உரிமையைப் பெற்றுக்கொண்டதும், யோசேப்பின் சகோதரர்கள் அவரை மிதியானியர்கள் கையில் விற்றதும், பாரவோன் இஸ்ரயேல் மக்களை அடிமைப்படுத்தியதும், பாரவோன் இஸ்ரயேல் மக்களை மோசே தலைமையில் விடுவிக்க மறுத்ததும், சவுல் தாவீது மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்க விரும்பியதும், தாவீதின் மகன்களே ஒருவருக்கு ஒருவர் அரியணை சண்டை இட்டதும், சாலமோன் ஞானியாக இருந்தாலும் சிலைவழிபாட்டுக்கு தன்னையே கையளித்ததும் என எல்லா நிகழ்வுகளிலும் கதாநாயகர்கள் தங்களுக்குள் எழுப்பிய கேள்வி, 'யார் பெரியவர்?' என்பதுதான்.

ஏன், கடவுள்களுக்கு இடையே கூட,  யார் பெரியவர் என்று மிகபெரிய போட்டி  வந்தது என்று புராணங்கள் சொல்கின்றன. நீ பெரியவனா அல்லது நான் பெரியவனா என்ற சண்டை என்றும் ஓயாது! உலகப்போர்களுக்கே அது காரணமாக இருந்துள்ளது. யார் பெரியவர் என்ற கேள்விதான், இந்த உலகின் பெரிய நாடுகள் எடுக்கும் முடிவுகளிலிருந்து, நம் வீட்டிற்குள் நடக்கும் சின்னச் சண்டை வரை அனைத்தின் பின்புலத்தில் இருக்கிறது. 'பெரியவராக' அல்லது 'முக்கியத்துவம்' பெற்றவராக இருக்க நாம் விருப்பம் அல்லது வெறி கொண்டிருக்கின்றோம். இவ்வாறாக, 'முதன்மையாக இருப்பது' அல்லது 'பெரியவராக இருப்பது' என்பது நமக்குள் பரவலாக இருக்கும் ஓர் உந்துணர்வு. இந்த உந்துணர்வின் நேர்முகமான பகுதிதான் நம்மை முன்னேறத் தூண்டுகிறது. ஆனால், இதன் எதிர்மறையான பகுதி அடுத்தவர்களை அழிக்கவும், அடுத்தவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும் செய்துவிடுகிறது. இதையெல்லாம் தாண்டி நாம் வாழவேண்டுமானால், 'நான் மற்றவர்களை விடப் பெரியவர்' என்ற ஒப்பீட்டு உணர்வு களையப்பட வேண்டும். முதலில் பிறருக்கும் நமக்கும் உள்ள வேற்றுமையைப் பாராமல் அங்குள்ள ஒற்றுமையைக் கண்டுப் பாராட்டப் பழக வேண்டும்.

யார் பெரியவர் என்று வாதம் செய்த சீடர்களைப் பொருத்தவரையில் 'பெரியவராக' இருப்பது என்பது 'பணிவிடை பெறுவது' என்ற நிலையில்தான் இருந்தது. சீடர்கள் தங்களுக்குள் படிநிலையை வகுத்து அதில் 'பெரியவர் நிலையை' அடைதலை விடுத்து, தற்கையளிப்பு, பணிவிடைபுரிதல், மற்றவர்கள்மேல் அக்கறை போன்றவற்றில் அதைக் கண்டுகொள்ள இயேசு அழைப்பதை இன்று நாம் எடுத்திருக்கும் கேள்வியின் பதிலில் காண்கிறோம். முதலில், 'பெரியவராக' இருப்பது என்பது 'பணி ஆற்றுவது' அல்லது 'சேவை செய்வது.' இயேசுவின் இப்போதனை அவரின் சமகாலத்து சிந்தனையை தலைகீழாகப் புரட்டிப்போட்டதையும் இங்கு காண்கிறோம்.

ஆனால், இன்றும் பழைய நிலைகள் காணக்கிடக்கின்றன. இன்று நாம் பார்க்கிறோம்; சிலரின் வாழ்க்கையில் பணமே பெரியதாக விளங்குகிறது. பணமே அவர்களை ஆட்சி செய்கிறது. சிலர் வாழ்க்கையில் கல்வி, வேலை, நண்பர்கள் என அவைதான் அவர்களுக்கு பெரிதாக விளங்குகிறது. பணம் உள்ளவனைத்தான் எல்லோரும் பெரியவராக கருதும் குண நிலையில் மனிதர்கள் உள்ளனர். ஆனால் சில நேரம்,  பலம் உள்ளவனை கண்டால் அவனுக்கு பயந்தும்  மதிப்பு கொடுக்கின்றனர். அதுதான் இன்றைய உலகம்.

கவிஞர் கணியன் பூங்குன்றனாரிடம் கேட்டால் அவர் கூறுவார், 

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே! என்று.

யாரையும் பெரியவர் என்று நினைத்து நீ வியந்துவிடவும் வேண்டாம். உன்னைப் பெரியவன் என்று நினைத்து யாரையும் நீ இகழ்ந்துவிடவும் வேண்டாம் என்று சொல்வார் அவர்.

நாம் உயரமான பாறையாக இருந்து என்ன பயன்? அங்கு புற்கள்கூட முளைப்பதில்லை!

ஆனால், தரையில் சேறாக இருந்துவிட்டால், பூச்செடிகளெல்லாம் தேடிவந்து பூக்கத் தொடங்கிவிடும். அதைத் தாங்கும் பேறுபற்றவர்களாகிவிடுவோம் நாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2024, 14:39