SECAM  ஆயர் கூட்டம் SECAM ஆயர் கூட்டம் 

ஆப்ரிக்க ஆயர் பேரவையின் 55ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள்

SECAMன் 55ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள், 22 உகாண்டா மறைசாட்சிகள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு கொண்டாட்டங்களோடு இணைந்து சிறப்பிக்கப்படுகின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆப்ரிக்கக் கண்டம் முழுவதிலும் அதன் தீவுகளிலும் ஒன்றிணைந்து நற்செய்தியை அறிவிக்கும் நோக்கத்துடன் 1969ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி துவக்கப்பட்ட ஆப்ரிக்க ஆயர்களின் SECAM அமைப்பு தன் 55ஆம் ஆண்டை சிறப்பித்தது.

ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் 55ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் குறித்து உரையாற்றிய அக்கண்டத்தின் கர்தினால் Fridolin Ambongo அவர்கள், ஆப்ரிக்கக் கண்டத்தில் நற்செய்தி அறிவிப்பதில் தலத்திருஅவை குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதாகவும், மறைப்பணிகளை ஆற்றுவதில் ஒன்றிணைந்து நடைபோடுவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் 55ஆம் ஆண்டு கொண்டாட்டங்கள் ஆப்ரிக்காவின் 22 உகாண்டா மறைசாட்சிகள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதன் 60ஆம் ஆண்டு கொண்டாட்டங்களோடு இணைந்து சிறப்பிக்கப்படுகின்றன என்பதையும் நினைவூட்டினார் SECAM ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Ambongo.

22 உகாண்டா மறைச்சாட்சிகளும் 1964ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் பங்குபெற்ற உறுப்பினர்களின் முன்னிலையில் திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்களால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டதை நினைவூட்டிய கர்தினால், 1969ஆம் ஆண்டு திருத்தந்தை 6ஆம் பவுல் அவர்கள், ஆப்ரிக்காவில் பயணம் மேற்கொண்டபோது, ஆப்ரிக்க மக்களே, நீங்களே உங்கள் மறைப்பணியாளர்கள், என கூறிய வார்த்தைகளே தற்போது SECAM அமைப்பின் 55ஆம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஆப்ரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 18 விழுக்காட்டினரை, அதாவது, 25 கோடியே 60 இலட்சம் கத்தோலிக்கரைக் கொண்டுள்ள தலத்திருஅவை மேலும் வேகமாக வளர்ந்துவருவதாகவும் கர்தினால் Ambongo அவர்கள் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2024, 14:00